மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தினுள் வருகின்ற அனைத்து அணிகளதும் ஆட்டதிறனுக்கான சர்வதேச தலைமை அதிகாரியாக (Global Head of Performance) நியமிக்கப்பட்டுள்ளதால், சௌதெர்ன் பிரேவ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து மஹேல ஜயவர்தன விலகவுள்ளார்.
இங்கிலாந்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் சௌதெர்ன் பிரேவ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மஹேல ஜயவர்தன செயற்பட்டு வந்தார்.
>> LPL அணிகளின் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்களின் விபரம் வெளியானது!
தொடர்ந்தும் அடுத்து நடைபெறவுள்ள பருவகாலங்களிலும் இவர் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், வேலைப்பளு காரணமாக மஹேல ஜயவர்தன பதவியிலிருந்து விலகுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் கீழுள்ள அணிகள் ILT20 தொடர் மற்றும் SA T20 லீக் போன்ற தொடர்களில் விளையாடவுள்ளன. குறிப்பிட்ட இந்த அணிகளுக்கான பொறுப்புகள் மஹேல ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மஹேல ஜயவர்தன சௌதெர்ன் பிரேவ் அணியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
>> “தசுன் ஷானகதான் எனக்கு வாய்ப்பை பெற்றுத்தந்தார்” – சரித் அசலங்க!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகள் நடைபெற்றுமுடிந்துள்ள நிலையில், முதல் ஆண்டு சௌதெர்ன் பிரேவ் அணி சம்பியனாக முடிசூடியிருந்ததுடன், இந்த ஆண்டு 7வது இடத்தை பிடித்துக்கொண்டது.
மஹேல ஜயவர்தன மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த 2017ம் ஆண்டு முதல் செயற்பட்டுவருவதுடன், 3 தடவைகள் மும்பை அணி கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<