இங்கிலாந்தின் கவுண்டி அணிகளுக்கு இடையில் நடைபெறும் ரோயல் – லண்டன் கிண்ணத்தின் 1ஆவது காலிறுதிப் போட்டி கவுண்டன் மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் வொர்செஸ்டர்ஷைர் மற்றும் சமர்செட் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வொர்செஸ்டர்ஷைர் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தீர்மானித்தது.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய வொர்செஸ்டர்ஷைர் அணி 42.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றது.
வொர்செஸ்டர்ஷைர் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மொயீன் அலி 76 பந்துகளுக்கு முகம் கொடுத்து 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 86 ஓட்டங்களையும், டரில் மிச்சல் 81 பந்துகளுக்கு முகம் கொடுத்து 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 64 ஓட்டங்களையும், பிரெட்’டி ஒலிவேரா 35 பந்துகளுக்கு முகம் கொடுத்து 1 பவுண்டரி அடங்கலாக 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
சமர்செட் அணியின் பந்து வீச்சில் பீட்டர் ட்ரெகோ 3 விக்கட்டுகளை வீழ்த்த ஜோஸ் டேவே மற்றும் கிரேக் ஓவர்டன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தி இருந்தார்கள்.
பின்னர் 211 என்ற வெற்றி இலக்கை நோக்கி சமர்செட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான இலங்கையைச் சேர்ந்த மஹேல ஜயவர்தன மற்றும் சமர்செட் அணியின் தலைவர் ஜிம் அலென்பே ஆகியோர் களமிறங்கினார்கள். ஆரம்பம் முதல் இவர்கள் பவுண்டரி மழையைப் பொழிந்தார்கள்.
அபாரமாக ஆடிய இந்த ஜோடி முதல் விக்கட்டுக்காக 188 ஓட்டங்களைப் பகிர்ந்தது. அதன் பின் ஜிம் அலென்பே 96 பந்துகளுக்கு முகம் கொடுத்து 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 81 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக ஆடிய மஹேல இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 111 பந்துகளுக்கு முகம் கொடுத்து 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 117 ஓட்டங்களை 128 நிமிடங்கள் மைதானத்தில் நிலைத்தாடி பெற்றார். இதன் மூலம் சமர்செட் அணி 36.5 ஓவர்களில் 1 வீக்கட்டை மட்டும் இழந்து 214 ஓட்டங்களை பெற்று 79 பந்துகள் மீதமிருக்க 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று ரோயல் – லண்டன் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவானார்.
போட்டியின் சுருக்கம்
வொர்செஸ்டர்ஷைர் 210/10 (42.5)
மொயீன் அலி 86, டரில் மிச்சல் 64, பிரெட்’டி 21
பீட்டர் ட்ரெகோ 33/3, ஜோஸ் டேவே 28/2, கிரேக் ஓவர்டன் 29/2
சமர்செட் 214/1 (36.5)
மஹேல ஜயவர்தன 117*, ஜிம் அலென்பே 81
மொயீன் அலி 53/1
சமர்செட் அணி 9 விக்கட்டுகளால் வெற்றி