ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவில் இணைக்கப்பட்ட மஹேல ஜயவர்தன

956

இலங்கையின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன மற்றும் இங்கிலாந்தின் அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் ஆகியோர் ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவின் முன்னாள் வீரர்களுக்கான பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  

அதேபோன்று, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஆலோசனைக் குழுவில் பயிற்சியாளர்களுக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மைக் ஹேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி உலக பதினொருவர் அணியில் அப்ரிடி விளையாடுவது உறுதி

உலக பதினொருவர் அணிக்கு விளையாட உபாதையையும்…..

முன்னதாக அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்த டெரன் லீமன் உறுப்பினராக செயற்பட்டிருந்தார். எனினும், கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரின் போது அவுஸ்திரேலிய அணி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர் மற்றும் கெமரூன் பேன்கிராப்ட் உள்ளிட்ட வீரர்கள் பந்தை சேதப்படுத்தி போட்டித் தடைக்குள்ளாகினர். இதனையடுத்து அவ்வணியின் பயிற்சியாளராகக் கடமையாற்றிய டெரன் லீமனும் தனது பதவிலியிருந்து இராஜினாமாச் செய்தார்.

இதையடுத்து, ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் பொறுப்பை அவர் இழந்த நிலையில், அவரின் இடத்துக்குப் பதிலாக மைக் ஹேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டு வருகின்ற மைக் ஹேசன், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டி வரை நியூசிலாந்து அணியை அழைத்து வந்தார். அதுமாத்திரமின்றி, அவரது பயிற்றுவிப்பில் 2015இல் டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாவது இடத்தையும், 2016இல் ஒரு நாள் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தையும் நியூசிலாந்து அணி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

  • பெலின்டா கிளார்க்

இதேவேளை, ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவில் மகளிர் கிரிக்கெட்டுக்கான பிரதிநிதியாக அவுஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னாள் தலைவியான பெலின்டா கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1997 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியின் தலைவியாக செயற்பட்ட அவர், மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த (229) வீராங்கனையாகவும் இடம்பிடித்துள்ளார். முன்னதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீராங்கனை கிளேர் கோனர் அந்தப் பொறுப்பிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐ.சி.சியின் அங்கத்துவ நாடுகளின் உறுப்பினர்களுக்கான பிரதிநிதியாக ஸ்கொட்லாந்து அணியின் தலைவர் கைல் கோட்ஸர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்தப் பொறுப்பில் அயர்லாந்து அணியின் கெவின் ஓ பிரையன் இருந்தார்.

எனினும், அயர்லாந்து அணிக்கு கடந்த வருடம் டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கப்பெற்று ஐ.சி.சியின் முழு உறுப்புரிமை நாடாக மாறிய காரணத்தால் அந்த இடத்தை ஸ்கொட்லாந்து அணிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அனில் கும்ப்ளே தலைமையில் செயற்படுகின்ற ஐ.சி.சியின் ஆலோசனைக் குழுவுக்காக நியமிக்கப்பட்ட இவ்வனைத்து பதவிகளும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தக் குழு முதற்தடவையாக எதிர்வரும் 28ஆம், 29ஆம் திகதிகளில் மும்பையில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றுகூடவுள்ளது. இதன்போது கிரிக்கெட் வீரர்களின் நடத்தை, அடுத்த வருடம் முதல் நடைபெறவுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடைபிடித்து வருகின்ற பாரம்பரியமிக்க நாணய சுழற்சியை கைவிடுவதா என்பன குறித்து ஆலோசனைகள் செய்யவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஐ.சி.சி ஆலோசனைக் குழு விபரம்

அவைத் தலைவர் – அனில் கும்ப்ளே

நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் – ஷசாங்க் மனோகர் (ஐ.சி.சி அவைத் தலைவர்), டேவிட் ரிச்சர்ட்சன் (ஐ.சி.சி நிறைவேற்று அதிகாரி)

முன்னாள் வீரர்கள் பிரதிநிதிகள் – அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் (இங்கிலாந்து), மஹேல ஜயவர்தன (இலங்கை)

இன்னாள் வீரர்கள் பிரதிநிதிகள் – ராகுல் ட்ராவிட் (இந்தியா), டிம் மே (அவுஸ்திரேலியா)

பயிற்சியாளர்களுக்கான நிரந்தரப் பிரதிநிதி – மைக் ஹேசன் (நியூசிலாந்து)

அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதி – கைல் கோட்ஸர் (ஸ்கொட்லாந்து)

மகளிர் கிரிக்கெட் பிரதிநிதி – பெலின்டா கிளார்க் (அவுஸ்திரேலியா)

போட்டி மத்தியஸ்தர்களுக்கான பிரதிநிதி – ரன்ஞன் மடுகல்லே (இலங்கை)

எம்.சி.சி பிரதிநிதி – ஜோன் ஸ்டெபென்ஸன் (எம்.சி.சியின் தலைவர்)

முழு உறுப்புரிமை நாடுகள் பிரிதிநிதி – டேவிட் வைட் (நியூசிலாந்து கிரிக்கெட் நிறைவேற்று அதிகாரி)

ஊடக பிரதிநிதி – ஷோன் பொல்லொக் (தென்னாபிரிக்கா)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<