உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் முன்னணி நட்சத்திர வீரர்களாக வலம்வந்த பன்னிரெண்டு முன்னாள் தலைவர்கள் மற்றும் வீரர்களை இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளின் விஷேட தூதுவர்களாக நியமிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன முதல் முறையாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் விஷேட தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில் சங்கக்கார
ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு…
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12ஆவது அத்தியாயம் எதிர்வரும் 30ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ளது. கடந்த காலங்களைப் போன்று இல்லாமல் அதிரடிக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறவுள்ள இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளின் பயிற்சி ஆட்டங்கள் நாளை (24) ஆரம்பமாகவுள்ளன.
இந்த நிலையில், கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளதால் அதற்காக விசேட நிகழ்ச்சிகள் மற்றும் புதிய அம்சங்கள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை ஐ.சி.சியும், இங்கிலாந்து கிரிக்கெட் சபையும் முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்யவுள்ள 24 பேரின் பெயர்களை ஐசிசி கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. இதில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார இடம்பிடித்திருந்தார்.
இதனிடையே, இம்முறை உலகக் கிண்ணத்தில் கிரிக்கெட் விளையாட்டின் வரலாறு, மகத்துவம், முன்னேற்றப் பாதை, அண்மைக்கால மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை முழு உலகிற்கும் எடுத்துச் செல்லும் வகையில் 12 முன்னாள் வீரர்களை உலகக் கிண்ண தூதுவர்களாக நியமிக்க ஐ.சி.சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் குழுவில் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய முன்னாள் அணித் தலைவர்களும், கடந்த கால உலகக் கிண்ணப் போட்டிகளில் ஜொலித்த முன்னாள் வீரர்களும் இடம்பிடித்துள்ளமை சிறப்பம்சமாகும்.
அத்துடன், உலகக் கிண்ண தூதுவர்களர்களாக செயற்படவுள்ள இவர்கள், ஒவ்வொரு போட்டியின் போதும் மைதானத்துக்கு வந்து ரசிகர்களுடன் இருந்து போட்டியை கண்டுகளிப்பது மாத்திரமல்லாது, ஐ.சி.சியின் சமூகவலைத்தள தொலைக்காட்சி வாயிலாக அவர்களை நேரடியாக தொடர்புபடுத்தி கருத்துக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
மேலும், கிரிக்கெட் அரங்கில் சாதனை படைத்த பல முன்னாள் வீரர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் தொடர்பில் விசேட ஆய்வுக் கட்டுரைகளையும் இதன்போது எழுதவுள்ளனர்.
இதன்படி, உலகக் கிண்ண வரலாற்றில் மூன்று தடவைகள் (1975, 1979, 1983) விளையாடிய பெருமைக்குரிய, மேற்கிந்திய தீவுகள் அணியின் கிளைவ் லோய்ட் இம்முறை உலகக் கிண்ணத்தில் விஷேட தூதுவராக செயற்படவுள்ளார்.
அசைக்க முடியாத சகலதுறை ஆட்டக்காரராகவும், இடதுகை துடுப்பாட்ட வீரரரகவும், வேகப் பந்துவீச்சாளராகவும் ஜொலித்த இவர், 1975ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்தார்.
இதில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணியுடனான இறுதிப் போட்டியில் 102 ஓட்டங்களைக் குவித்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முதலாவது உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தார். அதே உத்வேகத்துடன் 1979 உலகக் கிண்ணத்தையும் அவ்வணிக்கு தக்கவைத்து வரலாறு படைத்தார்.
கடந்த 1985ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர், அதன்பிறகு பயிற்சியாளர், கிரிக்கெட் வர்ணனையாளர், ஐ.சி.சியின் போட்டி மத்தியஸ்தர் உள்ளிட்ட பல சேவைகளையும் ஆற்றியிருந்தார்.
உலகக் கிண்ணத்தில் ஓட்ட இயந்திரமாக ஜொலித்த நட்சத்திரங்கள்
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின்…
இதேநேரம், 20ஆம் நூற்றாண்டின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களாக விளங்கிய மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸும் இம்முறை உலகக் கிண்ணத்தில் விசேட தூதுவராக கடமையாற்றவுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக நான்கு உலகக் கிண்ண தொடர்களில் விளையாடிய அவர், 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடர்களில் அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
எனவே, இம்முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கியுள்ள ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி சுமார் 3 தசாப்தங்களுக்குப் பிறகு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இவ்விரண்டு ஜாம்பவான்களும் ஆர்வத்துடன் போட்டிகளை மைதானத்திலிருந்து பார்க்கவுள்ளனர்.
இதேவேளை, 1983ஆம் ஆண்டு நடைபெற்ற 3ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி முதற்தடவையாக சம்பியன் பட்டம் வென்ற இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த 59 வயதான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தும் இம்முறை உலக்க கிண்ணத்தில் விசேட தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இந்திய அணி 2ஆவது தடவையாக சொந்த மண்ணில் வைத்து சம்பியனாகத் தெரிவாகியது. இதன்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின் தலைவராக ஸ்ரீகாந்த் செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கடந்த 1987ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற 4ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் அலென் போடர் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி, 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று முதன்முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
அதேபோல, 1999 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணி 2ஆவது தடவையாக உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றது. இதில் 1987 உலகக் கிண்ணத்தில் முதற்தடவையாக அந்த அணிக்காக விளையாடிய ஸ்டீவ் வோ 1999 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனேவே, அவுஸ்திரேலிய அணிக்கு உலகக் கிண்ண சம்பியன் பட்டங்களை வென்று கொடுத்த முன்னாள் தவைர்களான அலென் போடர் மற்றும் ஸ்டீவ் வோ ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் இம்முறை உலகக் கிண்ணத்தில் விஷேட தூதுவர்களாக இணைந்து கொள்ளவுள்ளனர்.
இதனிடையே, உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் அரையிறுதிப் போட்டியில் (2007) அரைச் சதமும், இறுதிப் போட்டியில் (2011) சதமும் அடித்த ஒரேயொரு வீரரான மஹேல ஜயவர்தன இம்முறை உலகக் கிண்ணத்தில் விசேட தூதுவராக இணைந்து கொள்ளவுள்ளார்.
தொட முடியாத உயரத்தில் மெக்ராத்: சாதிக்க காத்திருக்கும் மாலிங்க
உலகக் கிண்ண வரலாற்றை எடுத்துக் கொண்டால்…
கடந்த 2007 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற மஹேல, கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த ஐ.பி.எல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் செயற்பட்டிருந்தார்.
கிரிக்கெட் உலகில் முன்னணி சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவராக வலம்வந்த தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜெக் கலீஸ், நியூசிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் டேனியல் விட்டோரி, ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான மிர்வைஸ் அஷ்ரப் மற்றும் பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரான அப்துர் ரசாக் ஆகியோர் இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் ஐ.சி.சியின் விஷேட தூதுவர்களாக செயற்படவுள்ளனர்.
அத்துடன், சொந்த மண்ணில் முதற்தடவையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கவுள்ள இங்கிலாந்து அணி சார்பாக முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான், விஷேட தூதுவராக இணைந்து கொள்கின்றார்.
இதேவேளை, 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவி ஹீதர் நைட்டும் இம்முறை உலகக் கிண்ணத்தில் விஷேட தூதுவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<