ஐசிசி T20 உலகக்கிண்ணத்தொடரில், இலங்கை அணியுடன் மஹேல ஜயவர்தன இணைந்திருப்பது, அணிக்கு மிகப்பெரிய போனஸ் என முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரவித்துள்ளார்.
மஹேல ஜயவர்தன அணியின் ஆலோசகராக செயற்பட்டுவரும் நிலையில், முத்தையா முரளிதரன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் T20 உலகக்கிண்ணத்தை ஊக்குவிக்கும் தூதுவராக செயற்பட்டு வருகின்றார்.
T20 உலகக்கிண்ணத்தில் அதிர்ச்சிக்கொடுக்க காத்திருக்கும் ஆப்கானிஸ்தான்
மஹேல ஜயவர்தனவின் ஆலோசகர் பணியானது, நெதர்லாந்து அணிக்கு எதிராக இன்று (22) நடைபெறவுள்ள போட்டியுடன் நிறைவுக்குவரவுள்ள நிலையில், அவர் இலங்கை அணியின் இளம் வீரர்களுடன் உடைமாற்றும் அறையில் கடந்த 2 வாரங்களாக இருந்தமை, வீரர்களுக்கு மிகச்சிறந்த விடயமாகும் என முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை அணி அதிகமான போட்டிகளில் விளையாடியதன் காரணமாக, சிறப்பான பிரகாசிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், அணியுடன் மஹேல ஜயவர்தன இணைந்திருப்பது அணிக்கு மிகப்பெரயிய போனஸ் ஆகும். கடந்த ஐந்து, ஆறு வருடங்களில் குறைந்த வழிகாட்டலை மாத்திரமே வீரர்கள் பெற்றிருந்தனர். மஹேல அணியுடன் குறைந்த நாட்கள் மாத்திரமே இருந்திருக்கலாம். ஆனால், அவரின் T20 கிரிக்கெட்டுக்கான அனுபவம் அளப்பரியது.
அவர் பயிற்றுவிப்பாளராக உலகின் அனைத்து பகுதிகளிலும் கிண்ணத்தை வெற்றிக்கொண்டு வருகின்றார். எனவே, T20 போட்டிகளில் எவ்வாறு விளையாடவேண்டும் என அவருக்கு தெரியும், அத்துடன், அனுபவத்தையும் உடைமாற்றும் அறையில் பகிர்ந்துக்கொள்வார். அதிலிருந்து, எவ்வாறு போட்டியில் பொறுமையாகவும், அமைதியாகவும் ஆடுவது போன்ற விடயங்களை வீரர்களால் கற்றுக்கொண்டு முன்னேற முடியும்” என உலகக்கிண்ணத்தொடரில் இணைந்திருக்கும் இலங்கை ஊடகவியலாளர்களிடம் முரளிதரன் தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசனை குழுவின் உறுப்பினராக இருக்கும் முரளிதரன், மஹேல ஜயவர்தன முழு தொடரிலும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை எனவும், அவரது பணியை நீடிப்பது கடினமான விடயம் எனவும் குறிப்பிட்டார்.
“நாம் இதுதொடர்பில் மஹேல ஜயவர்தனவுடன் கலந்துரையாடினோம். மஹேல ஜயவர்தன கடந்த 4 மாதங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து, உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் உள்ளார். அவருக்கு ஓய்வு தேவை. மஹேல, தொடரின் ஆரம்பத்தில் அணியுடன் இணைந்திருந்து, திட்டங்களை நகர்த்துவதற்கான விடயங்களை செய்துக்கொடுப்பதற்கு ஏற்றுக்கொண்டார். அணியில் பயிற்றுவிப்பாளர்கள், தேர்வுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க ஆகியோர் உள்ளனர். அவர்கள், பணியை தொடர முடியும்”
சர்வதேச கிரிக்கெட்டில் 1347 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அனுபவத்தை கொண்டுள்ள முத்தையா முரளிதரன், இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவுக்கு ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். மஹீஷ் தீக்ஷன இதுவரை 2 போட்டிகளில் விளையாடி, 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
“மஹீஷ் தீக்ஷன சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றுகின்றார். இந்த விடயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். அவர், கடினமான பாதை தொடர்பில் கற்றுக்கொள்வார். அஜந்த மெண்டிஸிற்கு என்ன நடந்தது என்பது எமது அனைவருக்கும் தெரியும். முதல் இரண்டு வருடங்கள் இலகுவாக இருக்கும். பின்னர், கடினமாக அமையும். எனவே, அனுபவத்துடன் அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்”
ஐசிசி T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், முதல் 10 இடங்களில், 8 வீரர்கள் சுழல் பந்துவீச்சாளர்கள். எனவே, இம்முறை தொடரிலும், சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என குறிப்பிட்டார்.
“மெதுவாக வீசும் பந்து, துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமாகும். பந்து வேகமாக வருவதை துடுப்பாட்ட வீரர்கள் விரும்புவர். எனவே, இந்த உலகக்கிண்ணத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் மிக முக்கியமான ஆயுதமாக இருப்பர். அதேநேரம், வேகப்பந்துவீச்சாளர்களும் மெதுவாக பந்துவீச கற்றுக்கொள்ள வேண்டும். ஐ.பி.எல். 2008ம் ஆண்டு ஆரம்பமாகியதுடன், இப்போது 14 வருடங்கள் ஆகியுள்ளது. T20I கிரிக்கெட் 2003ம் ஆண்டு ஆரம்பித்தது. அப்போது நான் லென்க்ஷையரில் விளையாடினேன்.
கடந்த 20 வருடங்களில் T20 கிரிக்கெட் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. T20 போட்டிகள் ஆரம்பிக்கும் போது, சுழல் பந்துவீச்சாளர்கள் சிக்ஸர் மற்றும் பௌண்டரிகளாக கொடுப்பர் எனவும், சுழல் பந்துவீச்சாளர்களுக்கு T20 கிரிக்கெட் கடினமானது எனவும் கூறினர். ஆனால், இப்போது சுழல் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய ஆதிகத்தை காட்டுகின்றனர். அவர்கள் பயிற்சிகளில் சிறந்த விடயங்களை மேற்கொண்டு, போட்டியில் வித்தியாசமான அணுகுமறையை பயன்படுத்துகின்றனர்”
இதேவேளை, சுப்பர் 12 சுற்று நாளை (23) ஆரம்பமாகின்றது. இதில், குறிப்பிட்ட நாளில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என முரளிதரன் நம்புவதுடன், இலங்கை அணியும் இதில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளலாம். இலங்கை அணி குழு ஒன்றில் இடம்பெறவுள்ளது. இந்த குழுவில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகள் உள்ளன. எனவே, நொக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு கடினமான போட்டிகளை கொடுக்க வேண்டும்.
“T20 கிரிக்கெட்டில் எந்த அணியும் வெற்றிபெறலாம். எந்த அணி வெல்லும் என்பதை உங்களால் கணிக்க முடியாது. 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வெற்றிக்கொள்வோம் என நாம் நம்பவில்லை. நான் குறித்த தொடரில் விளையாடியதுடன், நாம் அதிகமான போட்டிகளில் தோல்வியடைவோம் எனவே எண்ணினோம். நாம் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் எனவும் நம்பவில்லை. ஆனால், நாம் ஒரு போட்டியிலும் தோல்வியடையவில்லை.
அப்போது இருந்த திறமை வாய்ந்த அணி, இப்போது இருக்கின்றது என நான் கூறவில்லை. நீங்கள் இதனை செய்ய முடியாது என எண்ணலாம். ஆனால், கிரிக்கெட்டில், சாத்தியமற்ற விடயங்கள் பல சாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது” என்றார்.
<<மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க>>