மஹேல ஜயவர்தனவிற்கு ICC இன் உயர் கௌவரம்

333

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தனவிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) உயர் கௌரவமாக கருதப்படும், ICC வரலாற்று கதாநாயகர்கள் (Hall of Fame) பட்டியலில் இணையும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

>>SLC தலைவர் பதினொருவர் அணியின் தலைவராகும் சரித் அசலங்க

அந்தவகையில் மஹேல ஜயவர்தனவுடன் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோன் பொல்லொக் மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஜனேட் பிரிட்டின் ஆகியோரினையும் ICC தமது வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் புதிதாக இணைத்திருக்கின்றது.

மஹேல ஜயவர்தன சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெளிப்படுத்தியிருந்த சிறந்த அடைவுகளுக்காகவே, வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 652 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கும் மஹேல ஜயவர்தனவின் கிரிக்கெட் வாழ்க்கையில் 149 டெஸ்ட் போட்டிகள், 448 ஒருநாள் போட்டிகள் மற்றும் 55 T20I போட்டிகள் அடங்குவதோடு மஹேலவே சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய இரண்டாவது கிரிக்கெட் வீரராக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் 49.84 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் மொத்தமாக 11,184 ஓட்டங்களை குவித்திருக்கும் மஹேல ஜயவர்தன, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் 9ஆம் இடத்தில் காணப்படுகின்றார்.

மறுமுனையில் 34 டெஸ்ட் சதங்களை எடுத்திருக்கும் அவர் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிக சதங்கள் பெற்ற துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் 06ஆம் இடத்திலும் காணப்படுகின்றார். இந்த சதங்களுக்குள் மஹேல ஜயவர்தன தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பெற்ற 374 ஓட்டங்களும் அடங்குகின்றன.

>>அரையிறுதிக்கு முன் ICU இல் சிகிச்சை பெற்ற ரிஸ்வான்

இதேநேரம் மஹேல ஜயவர்தன 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத்தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணிக்காகவும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் 2009ஆம் ஆண்டு, 2012ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த T20 உலகக் கிண்ணத் தொடர்களில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய இலங்கை அணியிலும் காணப்பட்டிருந்த மஹேல ஜயவர்தன 2014ஆம் ஆண்டில் இலங்கை முதல் தடவையாக T20 உலகக் கிண்ணத்தினை வெற்றி கொண்ட போது காணப்பட்ட இலங்கை அணியிலும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தொடரோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரியாவிடை வழங்கிய மஹேல ஜயவர்தன, தற்போது கிரிக்கெட் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க>>