T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியுடன் இணையும் மஹேல!

780

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, T20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹேல ஜயவர்தன, T20 உலகக் கிண்ணத்துக்கு செல்லும் இலங்கை அணியின், முதல் சுற்றுப் போட்டிகளுக்கான ஆலோசகராக செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

வலைப்பந்துவீச்சாளரை அணியில் இணைத்த சன்ரைஸர்ஸ்!

அத்துடன், மஹேல ஜயவர்தன, அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தொடர் தயார்படுத்தல்களுக்கான இலங்கை 19 வயதின்கீழ் அணியின் ஆலோசகராகவும் செயற்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹேல ஜயவர்தன தற்போதைய நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். இவ்வாறான நிலையில், IPL உயிரியல் பாதுகாப்பு வலயத்திலிருந்து, நேரடியாக இலங்கை அணியுடன் இணைந்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹேல ஜயவர்தன ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை இலங்கை அணியுடன் இணைந்திருப்பார் என்பதுடன், இந்த காலப்பகுதியில் இலங்கை அணி நமீபியா, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இதன்போது, அணியுடன் இணைந்திருக்கும் மஹேல ஜயவர்தன, அணிக்கான திட்டங்களில் முகாமைத்துவத்துக்கு உதவுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை 19 வயதின்கீழ் அணியுடன் சுமார் 5 மாதக்காலப்பகுதிவரை மஹேல ஜயவர்தன இணைந்து ஆலோசகராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா,

“இந்த புதிய பதவிகளுக்காக மஹேல ஜயவர்தனவை நாம் வரவேற்கிறோம். இவரின் இந்த வருகையானது இலங்கை தேசிய அணி மற்றும் 19 வயதின்கீழ் அணிகளுக்கு மிகப்பெரும் உதவியாக அமையும். அத்துடன், அவர் விளையாடும் காலப்பகுதியில், வீரர் மற்றும் தலைவர் என்ற ரீதியில், அவருடைய கிரிக்கெட் அறிவு மிக முக்கியமாக மதிக்கப்பட்டது. தற்போது, பல்வேறு அணிகளுக்கு அவர் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவருகின்றார்” என்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<