இலங்கை அணியின் 21 வயது நிரம்பிய மாயாஜால சூழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன, நடைபெற்று வரும் ஐசிசி ஆண்களுக்கான T20 உலகக் கிண்ணத்தில், ஞாயிற்றுக்கிழமை (24) சார்ஜாவில் நடைபெறவுள்ள பங்களாதேஷிற்கு எதிரான சுபர் 12 சுற்றுப் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இத்தொடரில் 3 போட்டிகளில் 8 விக்கெட்டுக்களை கைப்பற்றி, இலங்கை அணி சார்பாக அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக இருக்கும் தீக்ஷன, கடந்த வெள்ளிக்கிழமை நெதர்லாந்து அணிக்கெதிராக ஒரு ஓவர் மட்டுமே வீசி 2 விக்கெட்டுக்களை பதம் பார்த்திருந்தார்.
சுபர் 12 சுற்று குழு 1 அணிகளின் நிலை எவ்வாறு உள்ளன?
அதன் பின்னர் உபாதை (SIDE STRAIN) காரணமாக தொடர்ந்து அவர் பந்து வீசாமல் மைதானத்தை விட்டு வெளியே சென்றார். போட்டி முழுவதும் மீண்டும் மைதானத்திற்குள் வராத அவர், போட்டி நிறைவடைந்ததன் பின்னர் நடந்து வந்ததை பார்க்ககூடியதாக இருந்தது. எனினும் மருத்துவர்கள், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அவரை 2 நாட்கள் ஓய்வெடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் பங்களாதேஷிற்கு எதிரான போட்டியை தீக்ஷன தவறவிடவுள்ளார்.
வெள்ளிக்கிழமை போட்டி முடிந்ததன் பின்னர், இது குறித்து கருத்து தெரிவித்த பானுக ராஜபக்ஷ,
“மருத்துவர்கள் அவரை அடுத்த போட்டியில் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். அடுத்த போட்டியில் அவரை விளையாட வைத்து, பின்னர் தொடரின் மிகுதி போட்டிகளில் அவரை விளையாடவைக்க முடியாத சூழ்நிலைக்கு நாம் அவரை உள்ளாக்க விரும்பவில்லை. எனக்கு தெரிந்த அளவில் அடுத்த போட்டியில் அவர் விளையாடமாட்டார். அது இன்னும் 100% உறுதி ஆகவிலலை. ஆனால் பெரும்பாலும் அவர் முதல் போட்டியை தவறவிட்டு ஏனைய போட்டிகளில் விளையாடுவார். “
தீக்ஷன விளையாடாவிட்டால், அவரின் இடத்திற்கு அகில தனன்ஜய நேரடி மாற்றமாக வருவார். நபீபியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டிகளில் இலங்கை அணியின் பந்துவீச்சுக் குழு மாறாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போட்டிகளில் பந்துவீச்சாளர்கள், எதிரணியை முறையே 96, 101 மற்றும் 44 ஓட்டங்களுக்கு ஆட்டமிழகச் செய்தனர்.
பங்களாதேஷிற்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக, தீக்ஷனவின் உடற்தகுதி பற்றி கருத்து தெரிவித்தார்.
“இந்த உபாதை நீண்ட காலம் இருக்குமென நான் நினைக்கவில்லை. ஆனால், பெரும்பாலும் அவருக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்படும். அவரை முழு உடற்தகுதிக்கு கொண்டு வர நாங்களும் முயற்சிக்கிறோம்”
இலங்கை அணி சுபர் 12 சுற்றில் பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக விளையாடவிருக்கின்றனர்.
இலங்கையை வலுப்படுத்திய மஹேலவின் ஐந்து உபாயங்கள்
இலங்கை அணியின் சுபர் 12 போட்டிகள் விபரம் (இலங்கை நேரம்)
- எதிர் பங்களாதேஷ் – ஒக்டோபர் 24 – சார்ஜா – பி.ப 3.30
- எதிர் அவுஸ்திரேலியா – ஒக்டோபர் 28 – டுபாய் – இரவு 7.30
- எதிர் தென்னாபிரிக்கா – ஒக்டோபர் 30 – சார்ஜா – பி.ப 3.30
- எதிர் இங்கிலாந்து – நவம்பர் 1 – சார்ஜா – இரவு 7.30
- எதிர் மேற்கிந்திய தீவுகள் – நவம்பர் 4 – அபு தாபி – இரவு 7.30
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<