இதுவரை மொத்தமாக ஏழு T20 உலகக் கிண்ணத் தொடர்கள் நிறைவடைந்திருக்கின்றன. நிறைவடைந்த உலகக் கிண்ணத் தொடர்களில் மூன்று தடவைகள் இறுதிப் போட்டியில் விளையாடியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி ஒரு தடவை உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தினையும் வென்றிருக்கின்றது.
இலங்கை கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத் தொடர்களில் பல மாயஜால தருணங்களையும் பதிவு செய்திருக்கின்றது. இந்த மாயஜால தருணங்கள் போட்டிகளின் முடிவுகளை முழுமையாக திருப்பி இருந்ததோடு, கிரிக்கெட் இரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
T20 உலகக்கிண்ணத்தில் எதிரணிகளை மிரட்டிய இலங்கையின் நட்சத்திரங்கள்!
கடந்த T20 உலகக் கிண்ணத் தொடர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் மாயஜால தருணங்களைப் பார்ப்போம்.
இலங்கை 260/6 எதிர் கென்யா – 2007 T20 உலகக் கிண்ணம்
ஆடவர் T20I போட்டிகள் 2005ஆம் ஆண்டிலேயே முதல் தடவையாக விளையாடப்பட்டிருந்தது. இப்போட்டிகள் ஆடத் தொடங்கி இரண்டு வருடங்களில் முதல் T20 உலகக் கிண்ணம் கடந்த 2007ஆம் ஆண்டில் தென்னாபிரிக்காவில் வைத்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த உலகக் கிண்ணத் தொடரில் குழுநிலைப் போட்டி ஒன்றில் கென்யாவினை இலங்கை எதிர்கொண்டிருந்தது கிரிக்கெட் அணி. கேப் டவுன் அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் நடைபெறும் 27ஆவது T20I போட்டியாக மாத்திரமே இருந்தது. எனினும் இந்தப் போட்டியில் யாரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத துடுப்பாட்ட அதிரடியினை இலங்கை கிரிக்கெட் அணி வெளிப்படுத்தியிருந்தது. இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசூரிய பௌண்டரி எல்லைகளுக்கு மேலால் பந்துகளை பறக்க விட்டதுடன், மஹேல ஜயவர்தன மற்றும் ஜெஹான் முபாரக் ஆகியோரும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்து கென்ய பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் 44 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட சனத் ஜயசூரிய 4 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்கள் எடுக்க, மஹேல ஜயவர்தன 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் ஜெஹான் முபாரக் 13 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் உடன் 46 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகளிர் T20 உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை அறிவிப்பு
இதன் காரணமாக 6 விக்கெட்டுக்களை இழந்து 20 ஓவர்கள் நிறைவில் 260 ஓட்டங்கள் பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி T20I போட்டிகள் விளையாட ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்திலேயே, கிரிக்கெட்டின் குறுகிய வடிவ போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைப் பதிவு செய்து அனைவரினையும் பிரமிக்க வைத்தது.
அத்துடன் அப்போட்டியில் கென்ய அணியினை 88 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய இலங்கை 172 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்ததுடன் T20I போட்டிகளில் அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணியாகவும் சாதனை செய்தது. இதேநேரம் இலங்கை அணி பெற்ற 260 ஓட்டங்களே இன்று வரைக்கும் T20 உலகக் கிண்ண வரலாற்றில் அணியொன்று பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகவும் காணப்படுகின்றது.
நெதர்லாந்து 39 எதிர் இலங்கை – 2014 T20 உலகக் கிண்ணம்
T20 உலகக் கிண்ணத் தொடர்களில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்ற அணியாக மாத்திரம் இலங்கை கிரிக்கெட் அணி காணப்படவில்லை. T20 உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் எதிர் அணியொன்றினை குறைவான ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தியதும் இலங்கை கிரிக்கெட் அணியின் மாயஜாலமாக இருக்கின்றது. இலங்கை கிரிக்கெட் அணி இந்த சாதனையினை 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் செய்திருந்தது.
பங்களாதேஷில் நடைபெற்ற குறிப்பிட்ட உலகக் கிண்ணத் தொடரில் தமது குழுநிலை மோதலில் நெதர்லாந்தினை வெறும் 39 ஓட்டங்களுக்குள் மடக்கிய இலங்கை கிரிக்கெட் அணி அணியொன்றை உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் குறைவான ஓட்டங்களுக்குள் மடக்கிய அணியாக சாதனை செய்தது.
இலங்கை கிரிக்கெட் அணியின் இந்த சாதனைக்கு அஞ்செலோ மெதிவ்ஸ், அஜன்த மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி உதவியிருந்ததோடு, லசித் மாலிங்கவும் 2 விக்கெட்டுக்களுடன் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி பலமானதா? இல்லையா?
ரங்கன ஹேரத் 5/3 எதிர் நியூசிலாந்து – 2014 T20 உலகக் கிண்ணம்
2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் குழுநிலைப் போட்டி ஒன்று நடைபெற்றிருந்தது. அதாவது இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கே தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கும். எனவே இந்தப் போட்டி கிட்டத்தட்ட ஒரு நொக் அவுட் போட்டியாகவே அமைந்திருந்தது.
பங்களாதேஷின் சட்டோக்ரம் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடப் பணிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வெறும் 119 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. எனவே நியூசிலாந்துக்கு வெற்றி இலக்கு 120 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
மார்டின் கப்டில், பிரன்டன் மெக்கலம், ரோஸ் டெய்லர், ஜிம்மி நீஷம் மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற பலம் பெரும் துடுப்பாட்ட வீரர்களை கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு 120 ஓட்டங்கள் என்கிற வெற்றி இலக்கு என்பது மிகவும் சுலபமான விடயமாகும். அதேநேரம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அத்தொடரில் நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட அஜந்த மெண்டிஸ் அப்போட்டியில் ஆடவில்லை. அவருக்குப் பதிலாக இலங்கை கிரிக்கெட் அணி தொடரில் முதல் தடவையாக ரங்கன ஹேரத்திற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.
பின்னர் வெற்றி இலக்கிற்கான பயணத்திலும் சிறந்த ஆரம்பத்தினையே நியூசிலாந்து பெற்றிருந்தது. எனினும் துரதிஷ்டவசமான ரன் அவுட் ஒன்றின் காரணமாக மார்டின் கப்டில் நியூசிலாந்தின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் நாயகன் ரங்கன ஹேரத்தின் விஷ்வ ரூபம் வெளிப்படத் தொடங்கியது. பிரன்டன் மெக்கலத்தின் ஆட்டமிழப்பில் ஆரம்பித்த தனது விக்கெட் வேட்டையினை ரொஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம் மற்றும் லூக் ரோன்ச்சி என விரிவுபடுத்திக் கொண்டு சென்றார் ரங்கன ஹேரத். இதில் ரோன்ச்சி தவிர ஏனைய அனைவரும் ஹேரத்தினால் ஓட்டமின்றி வீழ்த்தப்பட்டிருந்தனர். இதனால் போட்டியின் போக்கினையே தனது மாயஜால பந்துவீச்சினால் ஹேரத் மாற்றியதோடு, வெற்றியை நோக்கிப் பயணித்த நியூசிலாந்தும் ஒரு கட்டத்தில் 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த களத்தடுப்பு மற்றும் சச்சித்ர சேனநாயக்கவின் பந்துவீச்சு என்பனவும் கைகொடுக்க வெறும் 60 ஓட்டங்களுக்குள் நியூசிலாந்து சுருண்டதுடன், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் எதிர்பாராத தோல்வியினையும் தழுவியது.
T20 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
இந்த தோல்வி நியூசிலாந்தினை உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேற்றியதோடு, இப்போட்டியில் ஹேரத்தின் மாயஜால பந்துவீச்சுடன் கிடைத்த வெற்றியோடு இலங்கை தொடரின் அரையிறுதி, இறுதிப் போட்டி என்பவற்றுக்கு தெரிவாகி 2014ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ண சம்பியன்களாகவும் நாமம் சூடியது.
அஜந்த மெண்டிஸ் 6/8 எதிர் ஜிம்பாப்வே – 2012 T20 உலகக் கிண்ணம்
T20I போட்டிகளில் பந்துவீச்சாளர் ஒருவருக்கு வீச நான்கு ஓவர்கள் மாத்திரமே வழங்கப்படுவதன் காரணமாக அவர்களுக்கு அதிக விக்கெட்டுக்கள் எடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் பொதுவாக கிடைப்பது கிடையாது. ஆனால் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் நட்சத்திரமான அஜந்த மெண்டிஸிற்கு அதில் பிரச்சினைகள் ஏதும் கிடையாது. தான் வீசிய நான்கு ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றார்.
அஜந்த மெண்டிஸின் இந்த பந்துவீச்சுப் பிரதி கடந்த 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த உலகக் கிண்ணத் தொடர் இலங்கையில் நடைபெற்றதோடு, இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான போட்டியே குறித்த உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியாகவும் அமைந்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் பெற்றதோடு, இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி அஜந்த மெண்டிஸின் அபார பந்துவீச்சு காரணமாக 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் 100 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியினை 100 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த அஜந்த மெண்டிஸ் வெறும் 8 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி உதவி செய்திருந்ததோடு, இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த பந்துவீச்சு பிரதியாகவும் பதிவானது. அத்துடன் அஜந்த மெண்டிஸின் இந்த மாயஜால பந்துவீச்சுப் பிரதி இன்று வரை இது T20 உலகக் கிண்ணத் தொடர்களில் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பிரதியாகவும் காணப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<