டாக்கா மரதனில் இலங்கையின் மதுமாலிக்கு வெள்ளிப் பதக்கம்

Bangabandhu Sheik Mujid Dhaka Marathon 2023

219

பங்களாதேஷில் நடைபெற்ற பங்கபந்து ஷெய்க் முஜிப் டாக்கா மரதன் ஓட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கையின் மதுமாலி பெரேரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காக நடத்தப்பட்ட இந்த தொடரில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மதுமாலி பெரேரா போட்டியை 2 மணித்தியாலம் 48.22 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

குறித்த போட்டியை 2 மணித்தியாலம் 48.02 செக்கன்களில் நிறைவு செய்த நேபாளத்தின் புஷ்பா பந்தாரி தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, இந்தியாவின் அஸ்வினி மதன் ஜாதவ் (2:52.32) வெண்கலப் பதக்கதை வென்றார்.

இதனிடையே, இலங்கை சார்பில் போட்டியிட்ட மற்றுமொரு வீராங்கனையான வத்சலா மதுஷானி ஹேரத்துக்கு (2:54.20) நான்காவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதேவேளை, ஆண்கள் பிரிவில் போட்டியிட்ட இலங்கை வீரர் சிசிர குமார வன்னிநாயக்க, போட்டி தூரத்தை 2 மணித்தியாலம் 24.48 செக்கன்களில் நிறைவு செய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இந்திய வீரர்கள் சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் பங்குகொண்ட இம்முறை பங்கபந்து ஷெய்க் முஜிப் டாக்கா மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பில் 12 வீரர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<