மாணவர் ஒருவரின் கனவினால் ரக்பி விளையாட்டை ஆரம்பித்துள்ள மடவளை மதீனா

283

பழைய மாணவர் ஒருவரின் கனவுக்கு அமைய, மடவளை மதீனா கல்லூரி தமது கன்னி ரக்பி போட்டியில் விளையாடி முடித்திருக்கின்றது.

மதீனா கல்லூரியின் பழைய மாணவரான பைசல் அமர்தீன் தனது சிறுவயது காலம் தொடக்கம் ரக்பி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டி இருந்ததோடு, தான் ரக்பி வீரராக மாறிய பின்னர் இலங்கையின் பாடசாலைகள் இடையே பிரபலமாக இருந்த ரக்பி விளையாட்டினை தனது தாய் பாடசாலையான மடவளை மதீனா கல்லூரியில் வளர்க்கும் விருப்பத்துடன் காணப்பட்டிருந்தார்.

සංගක්කාර ක්‍රිකට් ගහන්න ගහන්න පාකිස්තානයට?

2009 වසරේ ශ්‍රී ලංකා කණ්ඩායමට පකිස්තානයේ දී ……..

அமர்தீனின் கனவுக்கு அமைவாக அவரின் நண்பர்கள் சிலரின் உதவியோடு கடந்த ஜூலை மாதம் மதீனா கல்லூரியின் ரக்பி சங்கம் ஸ்தாபிக்கப்பட்டதோடு, ரக்பி தொடர்பான அறிமுக நிகழ்வு ஒன்றும் பாடசாலையில் நடைபெற்றது. இந்த ஆரம்ப நிகழ்வில் மதீனா பாடசாலையின் 12, 14 வயதுப் பிரிவுகளுக்கான ரக்பி அணிகள் முதல் தடவையாக உருவாக்கப்பட்டன. 

இவ்வாறு உருவாக்கப்பட்ட பாடசாலை அணிகள் இலங்கை எழுவர் ரக்பி அணியினை பிரதிநிதித்துவம் செய்தவரும், உள்ளூர் ரக்பியின் அரசனாக இருக்கும் கண்டி விளையாட்டுக் கழகத்தின் வீரருமான றிஸ்மிர் ஜப்பார் மூலம் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது. இவர் தவிர, விமானப்படை வீரரான சமிந்த குமார மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரி வீரர் நஸ்ரி மொஹமட் ஆகியோரும் மதீனா பாடசாலையின் இளம் ரக்பி வீரர்களுக்கு தங்களது வழிகாட்டல்களை கொடுத்திருந்தனர்.

இவ்வாறாக முன்னணி வீரர்கள் மூலம் உரமூட்டப்பட்ட  மடவளை மதீனா கல்லூரியின் ரக்பி அணியானது கடந்த சனிக்கிழமை (14) தமது சொந்த மைதானத்தில் வைத்து தமது கன்னி ரக்பி போட்டியில் பேராதெனிய சரசவி உயன வித்தியாலயத்தை  எதிர்கொண்டது.

தமது கன்னி போட்டியில் இளம் வீரர்கள் பலருடன் களமிறங்கிய மடவளை மதீனா கல்லூரி 17-55 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்த போதிலும் போட்டியில் மதீனா வீரர்கள் போரட்டத்துடன் செயற்பட்டது அனைவரினையும் கவர்ந்திருந்தது.

இதேநேரம் இப்போட்டி பற்றியும், மடவளை மதீனா கல்லூரி ரக்பி விளையாட்டில் எடுத்து வைத்திருக்கும் முதல் அடித்தளம்  பற்றியும் இந்த விளையாட்டு மடவளை மதீனா கல்லூரியில் உருவாக காரணமாக இருந்த பைசல் அமர்தீன் ThePapare.com இடம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“நான் ஆரம்பக் கல்வி கற்ற மடவளை மதீனா பாடசாலையில் ரக்பி விளையாட்டினை கொண்டுவர வேண்டும் என்ற ஒரு அவா எனது சிறுவயது தொடக்கம் இருந்தது. இதற்கான முயற்சிகளை நான் முன்னர் எடுத்திருந்த போதிலும் அவை துரதிஷ்டவசமாக வெற்றியளிக்கவில்லை. எனினும், தற்போதே இந்த விளையாட்டு எமது பாடசாலையில் விளையாடப்படுவதற்கான ஒரு சந்தர்ப்பம் உருவாகியிருக்கின்றது. இதற்காக இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” 

“எமது பாடசாலை வீரர்கள் தமது கன்னி ரக்பி போட்டியில் தோல்வியினை தழுவியது சிறிது ஏமாற்றம் தருகின்ற போதிலும் அவர்கள் இப்போட்டியில் விளையாடிய விதம் மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த ரக்பி விளையாட்டானது ஏனைய விளையாட்டுக்கள் போலன்றி பல்வேறு வகைகளில் மாணவர்களுக்கு பங்களிக்க கூடிய ஒன்றாகும். எனவே, இவ்விளையாட்டு மூலம் எமது சமூகமும், பிரதேசமும் முன்னேறுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. இதேநேரம், இவ்விளையாட்டினை மதீனா கல்லூரியில் ஸ்தாபிக்க உதவியாக இருந்த எனது வெளிநாட்டு நண்பர்கள், பழைய மாணவர்கள், ரக்பி விளையாட்டினை நேசிக்கும் மடவளை பிரதேசத்தினை சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.” 

தமது கன்னி ரக்பி போட்டியில் விளையாடி முடித்திருக்கும் மடவளை மதீனா கல்லூரி எதிர்வரும் காலங்களில் ரக்பி விளையாட்டில் சிறந்து விளங்க ThePapare.com தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க <<