இலங்கை அணிக்கு எதிராக இந்த மாதம் நடைபெற்ற T20 தொடரில் இருந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான கிளென் மெக்ஸ்வெல் தனது உள ஆரோக்கியத்தை (Mental Health) காரணமாகக் காட்டி விலகியிருந்ததோடு, கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் காலவரையற்ற ஓய்வினை எடுத்திருந்தார்.
மெக்ஸ்வெல் ஓய்வு பெற்று வெறும் 10 நாட்களே கடந்திருக்கும் நிலையில், மற்றுமொரு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான நிக் மெடின்ஸன் தனது உள ஆரோக்கியம் சரி இல்லாத காரணத்தினால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்திருக்கின்றார்.
ஐ.சி.சி. இற்கு மூன்று பலமிக்க கிரிக்கெட் சபைகளும் எதிர்ப்பா?
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) தமது எதிர்கால போட்டி அட்டவணையில் …
இடதுகை துடுப்பாட்ட வீரரான மெடின்ஸன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருப்பதோடு, 6 T20 சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், மெடின்ஸன் தமது நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாத்திலும் இடம்பெற்றிருந்தார். எனினும், தற்போது மெடின்ஸன் ஓய்வினை அறிவித்திருப்பதால் அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணி அவரின் இடத்தினை கெமரூன் பன்க்ரோப்ட் மூலம் பிரதியீடு செய்கின்றது.
மெடின்ஸன் முன்னதாக தனது உள ஆரோக்கிய பிரச்சினை ஒன்றினால் 2016ஆம் ஆண்டிலும் கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை எடுத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மெடின்ஸனுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்கும் எனத் தெரிவித்திருக்கின்றது.
மெடின்ஸன், மெக்ஸ்வெல் தவிர நிக்கோல் போல்டன், வில் புகோவ்ஸ்கி மற்றும் மொய்சஸ் ஹென்ரிக்ஸ் போன்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் தமது உள ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் இருப்பதனை வெளி உலகத்திற்கு தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<