KL ராகுலினை உள்வாங்கியுள்ள லக்னோவ் அணி

291

2022ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்ற லக்னோவ் அணி, தமது வீரர் குழாத்திற்குள் அதிரடி துடுப்பாட்டவீரரான KL ராகுலினை உள்வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>தசுன் ஷானகவின் கன்னி சதம் வீண்! ; வெற்றியீட்டியது ஜிம்பாப்வே! 

எட்டு அணிகள் பங்கெடுக்கின்ற IPL தொடரில், 2022ஆம் ஆண்டு முதல் பத்து அணிகள் இருக்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்ட நிலையில், புது அணிகளாக அஹமதாபாத் மற்றும் லக்னோவ் ஆகிய பிரதேசங்களைச் சார்ந்த அணிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இந்த புது IPL அணிகளில் லக்னோவ் அணி மூன்று வீரர்களை உள்வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, KL ராகுல் அவ்வாறாக உள்வாங்கப்பட்ட மூன்று வீரர்களில் ஒருவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதோடு அறிமுக சுழல்பந்துவீச்சாளரான ரவி பிஷ்னோய் மற்றும் அவுஸ்திரேலியாவின் சகலதுறைவீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரும் லக்னோவ் அணியில் உள்வாங்கப்பட்ட ஏனைய வீரர்களாக காணப்படுகின்றனர்.

அத்தோடு KL ராகுல் லக்னோவ் அணியில் இணைந்தமைக்கு அவருக்கு இந்திய நாணயப்படி 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதேவேளை மார்கஸ் ஸ்டொய்னிஸ் 11 கோடி ரூபாயினையும், ரவி பிஸ்னோய் 4 கோடி ரூபாயினையும் பெற்றுக் கொள்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>டெஸ்ட் அணித்தலைவர் பதவியினை துறக்கும் விராட் கோலி 

தற்போது இந்திய அணியினை தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வழிநடாத்தும் KL ராகுல், லக்னோவ் அணியின் தலைவராகவும் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவராகவும் செயற்பட்டுள்ள KL ராகுல் 2018ஆம் ஆண்டில் இருந்து IPL போட்டிகளில் ஒரு முன்னணி துடுப்பாட்டவீரராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேநேரம் லக்னோவ் அணியானது RP சஞ்சீவ் கோங்கா குழுமத்தின் மூலம் இந்திய நாணயப்படி 7090 கோடி ரூபாய்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<