இந்தியாவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இங்கிலாந்து வீரர் மார்க் வூட் உபாதை காரணமாக வெளியேறியுள்ளார்.
மார்க் வூட் லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த போதும், தற்போது நடைபெற்றுவரும் மே.தீவுகளுக்கு எதிரான தொடரின் போது, அவருடைய வலது முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக அவர் ஓய்விலிருக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதுடன், மூன்றாவது போட்டிக்கான வீரர்கள் பட்டியலிலும் இவரின் பெயர் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே, மார்க் வூட் இம்முறை IPL தொடரில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க் வூட் அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், தங்களுக்கான மாற்று வேகப்பந்துவீச்சாளரை லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணி இதுவரை அறிவிக்கவில்லை. எவ்வாறாயினும், இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர ஏற்கனவே அணியுடன் இணைந்துள்ளார். எனவே, துஷ்மந்த சமீரவுடன் தங்களுடைய போட்டிகளை லக்னோவ் அணி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமாத்திரமின்றி, மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டரும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணி மார்க் வூட்டை இந்திய ரூபாயில் 7.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<