ஆசியாவின் கறுப்புச் சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற இலங்கையின் நட்சத்திர உடற்கட்டழகரான லூசன் அண்டன் புஷ்பராஜ், கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக தன்னை பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் ஒஹியோ, கொலம்பஸ் மாநாட்டு மண்டபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஐ.எவ்.பி.பி ஆர்னல்ட் கிளசிக் 2020 உடற்கட்டழகர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல்தடவையாகப் பங்குகொண்ட லூசன் புஷ்பராஜ் நான்காவது இடத்தைப் பெற்று அசத்தினார்.
கொரோனா அச்சம் : தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் ரொஷான் மஹாநாம
பாகிஸ்தானில் இருந்து தாயகம்…………………
100 கிலோ கிராமுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் களமிறங்கிய அவர், சுமார் 20இற்கும் அதிகமான போட்டியாளர்களுடன் போட்டியிட்டு நான்காவது இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்தார்.
இந்த நிலையில், குறித்த போட்டித் தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்ற அவர், கொரோனா வைரஸ் பீதியினால் நாடு திரும்ப முடியாமல் ஒருசில தினங்கள் அங்கு தங்கியிருந்ததுடன், கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் கடந்த 17ஆம் திகதி நாடு திரும்பினார்.
இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்வதற்காக தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள லூசன் புஷ்பராஜ் தீர்மானித்துள்ளார்.
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும், தனது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இதேநேரம், தனது வெற்றி குறித்து பேசிய லூசன் புஷ்பராஜ், “ஆர்னல்ட் கிளசிக் உடற்கட்டழகர் போட்டியானது உலகளவில் இரண்டாவது மிகப் பெரிய போட்டித் தொடராகும். இதில் நான் நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டேன்.
எனக்கு கிடைத்த இந்த வெற்றியானது எம்மைப் போன்ற சிறிய நாடொன்றுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும்.
அதேபோல, கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் ஒரு வாரகாலம் நான் அமெரிக்காவில் தங்கியிருந்தேன். எனவே, கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் தான் நான் நாடு திரும்பினேன்” என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 தொடரில் போட்டி மத்தியஸ்தராகச் செயற்பட்ட இலங்கையின் முன்னாள் வீரரான ரொஷான் மஹாநாம, பாகிஸ்தானில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் நாடு திரும்பியிருந்ததுடன், கொரோனா வைரஸிற்காக தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக உடற்கட்டழகர் போட்டியில் தங்கம் வென்ற இலங்கை வீரர் புஷ்பராஜ்
ஆசியாவின் கறுப்புச் சிங்கம் என…………………
எனவே, கொரோனா வைரஸ் தொற்றுடன் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கையைச் சேர்ந்த பலர் குறித்த தொற்றிலிருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள அதிருப்தி வெளியிட்டிருந்ததுடன், அதிலிருந்து தப்பித்து தத்தமது வீடுகளுக்குச் சென்றனர்.
இதன் காரணமாக இலங்கை முழுவதும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு சென்றதுடன், இதுவரை 70 பேர் குறித்த வைரஸுக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, லூசன் புஷ்பராஜ் மற்றும் ரொஷான் மஹாநாமவின் முன்மாதிரியான செயற்பாடு குறித்து அனைவரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<