இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் “பவர் பிளாஸ்ட் ஓவர்ஸ்” என்ற புதிய விதிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
T20 போட்டிகளில் முதல் 6 ஓவர்கள் பவர் பிளே ஓவர்களாக வழங்கப்படுகின்றன. இதன்போது 2 வீரர்கள் மாத்திரமே பௌண்டரி எல்லையில் களத்தடுப்பில் ஈடுபட முடியும்.
>>கோல் மார்வல்ஸ் அணியின் தலைவராகும் திக்வெல்ல<<
இந்தநிலையில் LPL தொடரில் குறித்த 6 ஓவர்களை தவிர்த்து மேலும் 2 ஓவர்கள் பவர் பிளாஸ்ட் ஓவர்களாக வழங்கப்படவுள்ளன. அதன்படி இன்னிங்ஸின் 16 மற்றும் 17வது ஓவர்கள் பவர் பிளாஸ்ட் ஓவர்களாக அறிமுகம் செய்யப்படவுள்ளன.
குறித்த இந்த இரண்டு பவர் பிளாஸ்ட் ஓவர்களின் போது பௌண்டரி எல்லையில் 4 வீரர்கள் மாத்திரமே களத்தடுப்பில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை தொடர்பில் கருத்து வெளியிட்ட LPL தொடரின் பணிப்பாளர் சமந்த தொடான்வெல, “லீக்கிற்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த புதுமையை கொண்டு வர முடிவு செய்தோம். இந்த புதிய அறிமுகம் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை உருவாக்கும் என்பது உறுதி. குறித்த இந்த விதிமுறையை அணிகள் திறம்பட பயன்படுத்துவதற்கு வியூகங்களை வகுக்க வேண்டும்” என்றார்.
லங்கா பிரீமியர் லீக் தொடர் ஜூலை முதலாம் திகதி முதல் 21ம் திகதிவரை பல்லேகலை, தம்புள்ள மற்றும் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<