லங்கா ப்ரீமியர் லீக் போட்டி அட்டவணையில் மாற்றம்!

871

இலங்கை வைத்திய அதிகாரிகள் லங்கா ப்ரீமியர் லீக் தொடரை நடத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ள நிலையில், போட்டி அட்டவணையில் இலங்கை கிரிக்கெட் சபை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் லங்கா ப்ரீமியர் லீக் தொடர் இம்மாதம் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இம்மாதம் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 17ஆம் திகதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி பல்லேகலையில் போட்டிகள் நடத்தப்படாது எனவும், அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடத்தப்படும் என்ற அறிவுப்பும் வெளியாகியுள்ளது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நடாத்த பச்சைக் கொடி

இதுதொடர்பில் லங்கா ப்ரீமியர் லீக்கின் பணிப்பாளர் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவருமான ரவின் விக்ரமரத்ன கருத்து வெளியிடுகையில்,

“தொடரை ஹம்பாந்தோட்டையில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். தற்போது நாம் எமது உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்கான திட்டங்களை மேம்படுத்தியுள்ளதுடன், வைத்திய அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன், அதனை சரியாக பராமரிக்க வேண்டியுள்ளது” என்றார்.

அதேநேரம், லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான விளம்பரதாரர்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ள டுபாய் நிறுவனமான IGP நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மோஹன் குறிப்பிடுகையில்,

“இவ்வாறான இன்னலான காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து விரைவாக சிறந்த முடிவொன்றை பெற்றுக்கொடுத்துள்ளமைக்கு நன்றிகள். இதுவொரு இலகுவான விடயமல்ல. ஆனால், இலங்கை கிரிக்கெட் மற்றும் மக்களை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட சிறந்த முடிவு இதுவென நினைக்கிறேன்” என்றார்.

Video – LPL இல் பயிற்சியாளராகும் இலங்கை வீரர்கள் | Sports Roundup – Epi 138

புதிய போட்டி அட்டவணையின்படி, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் ப்ளே-ஓப் சுற்றில் விளையாடவுள்ள வீரர்களுக்கும், லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், லங்கா ப்ரீமியர் லீக்கின் சில அணிகள், வெளிநாட்டு வீரர்களை அணிகளில் இணைக்க முனைந்து வருகின்றன.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் 26ம் திகதி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இந்த நிலையில், தொடருக்கு வெறும் 9 நாட்கள் மாத்திரம் இருக்கும் நிலையில், அடுத்த மாதம் 18ம் திகதி இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<