இலங்கையில் மூன்றாவது தடவையாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) வீரர்கள் வரைவு நாளைய தினம் (05) நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள இந்த வீரர்கள் வரைவில் ஒட்டுமொத்தமாக 353 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதில், 180 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 173 உள்ளூர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
>> ஜப்னா கிங்ஸ் அணியில் இருந்து விலகும் வனிந்து ஹஸரங்க
இந்த வீரர்கள் வரைவானது நாளை மாலை 05.00 மணிக்கு இணையக்காணொளி மூலமாக ஆரம்பமாகவுள்ளதுடன், இந்த வரைவில் அணி உரிமையாளர்கள் (பயிற்றுவிப்பாளர்கள், முகாமையாளர்கள்) மற்றும் LPL நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அதேநேரம், வீரர்கள் வரைவானது 20 சுற்றுக்களாக நடைபெறவுள்ளதுடன், வீரர்கள் வரைவில் இடம்பெறவுள்ள வெளிநாட்டு வீரர்கள் இண்டெர்நெசனல் ரூபி, இண்டெர்நெசனல் ஷப்பீர், இண்டெர்நெசனல் டையமண்ட் ஏ, பி மற்றும் இண்டெர்நெசனல் பிளட்டினம் என்ற பிரிவுகளில் வகைப்படுதப்படவுள்ளனர்.
அதுமாத்திரமின்றி இலங்கையின் இளம் வீரர்களை அணிகளில் இணைக்கும் வகையில், “இலங்கை கோல்ட் சுற்று” வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இதில் 23 வயதின் கீழ் உள்ள வீரர்கள் இருவரை அணிகள் தங்களுடைய குழாத்தில் ஒப்பந்தம் செய்யவேண்டும்.
ஒரு அணிக்குழாமானது மொத்தமாக 20 வீரர்களை இணைக்க முடியும் என்பதுடன், இதில் 14 இலங்கை வீரர்கள் மற்றும் 6 வெளிநாட்டு வீரர்களை அதிகபட்சமாக இணைக்க முடியும். அதுமாத்திரமின்றி கடந்த ஆண்டு அணிகளில் விளையாடிய வீரர்களில் இருந்து, அணியொன்று 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். இதில் அதிகபட்சமாக 4 உள்நாட்டு வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை தக்கவைக்க முடியும்.
இதேவேளை வீரர்கள் வரைவுக்கு முன்னர், அணிகள் 4 வீரர்களை இணைத்துக்கொள்ள முடியும். இதில் 2 இலங்கை வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்க முடியும் என்பதுடன், ஏனைய வீரர்கள் அனைவரையும் வீரர்கள் வரைவின் மூலம் ஒப்பந்தம் செய்துக்கொள்ள முடியும்.
மூன்றாவது தடவையாக ஆரம்பிக்கவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் இம்மாதம் 31ம் திகதி முதல் ஆகஸ்ட் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளது. தொடரின் ஆரம்பக்கட்ட போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், பிற்பகுதி போட்டிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<