லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 13 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் “லிட்டில் ஹார்ட்ஸ்” (Little Hearts) செயற்திட்டத்துக்காக இலங்கை கிரிக்கெட் சபை 4.5 மில்லியன் ரூபா நிதியை திரட்டியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு லிட்டில் ஹார்ட்ஸ் செயற்திட்டத்திற்கு LPL தொடரின் மூலம் நிதி திரட்டவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
>>வனிந்துவின் சகலதுறை ஆட்டத்தால் கண்டி அணிக்கு ஹெட்ரிக் வெற்றி
இந்த தொடரின் மூலம் திரட்டப்படும் நிதி சீமாட்டி ரிஜ்ட்வே வைத்தியசாலையின் (குழந்தைகள்) இதய தீவிர சிகிச்சைப் பிரிவினை (Cardiac and Critical Care Complex) நிர்மாணிக்க உபயோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தற்போது பல்லேகலையில் நிறைவுபெற்ற 13வது போட்டியுடன் லிட்டில் ஹார்ட்ஸ் செயற்திட்டத்துக்காக 4.5 மில்லியன் ரூபா நிதி திரட்டப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட இந்த நிதியானது போட்டியின் போது அடிக்கப்படும் சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளுடன், ஓட்டமற்ற பந்துகளின் மூலம் திரட்டப்படுகிறது. அதன்படி ஒரு சிக்ஸருக்கு 6000 ரூபா, ஒரு பௌண்டரிக்கு 4000 ரூபா மற்றும் ஒரு ஓட்டமற்ற பந்துக்கு 2000 ரூபா என நிதி ஒதுக்கப்படுகின்றது.
எனவே இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 136 சிக்ஸர்கள், 339 பௌண்டரிகள் மற்றும் 1176 ஓட்டமற்ற பந்துகளுக்கு என மேற்குறிப்பிட்ட தொகை நிதி திரட்டப்பட்டிருக்கிறது.
இதேவேளை குறிப்பிட்ட இந்த நிதி மாத்திரம் இல்லாமல் போட்டிகளுக்காக ரசிகர்கள் கொள்வனவு செய்யும் டிக்கெட்டுகளில் இருந்து கிடைக்கப்படும் நிதியிலிருந்து ஒரு தொகையினை லிட்டில் ஹார்ட்ஸ் செயற்திட்டத்துக்கு வழங்குவதற்கும் இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<