லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நடாத்த பச்சைக் கொடி

551

சுகாதார அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இந்த ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரினை நடாத்துவதற்கான அனுமதியினைப் பெற்றிருக்கின்றது. 

சனத் ஜயசூரியவுக்கு விதிக்கப்பட்ட ஐசிசியின் தடை நீங்கியது!

அதன்படி இந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்க வருகின்ற வெளிநாட்டு  வீரர்களின் கட்டாய சுயதனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களில் இருந்து 7 நாட்களுக்கு குறைக்கப்பட்டிருப்பதோடு, தொடரின் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை சர்வதேச மைதானத்தில் பார்வையாளர்கள் எவருமின்றி இடம்பெறவிருக்கின்றன. 

இதேவேளை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்கள் மத்தளை சர்வதேச மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டு 7 நாட்கள் சுயதனிமைப்படுத்தல் காலத்தினைப் பூர்த்தி செய்த பின்னர், உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் தங்களது பயிற்சிகளை ஆரம்பிக்க முடியும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், இந்த தொடரினை ஒளிபரப்ப வருகின்ற தயாரிப்புக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும்  14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

LPL தொடரில் விளையாடவுள்ள இர்பான் பத்தான்!

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நடாத்துவதற்கான அனுமதி கிடைத்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட தொடர் இயக்குனர் ரவீன் டி சில்வா, இன்று (4) சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம்பெற்றதாக குறிப்பிட்டிருந்ததோடு, தொடரினை நடாத்துவதற்கான முழுமையான சுகாதார அறிவுரைகள் இலங்கை கிரிக்கெட் சபைக்கு நாளை (5) சுகாதார அதிகாரிகள் மூலம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். 

இதேநேரம், இன்று எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களை அடுத்து லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஆரம்பிப்பதில் சிறிது தாமதம் ஏற்படலாம் எனவும் ரவின் டி சில்வா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<