பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரில் உள்ளதைவிட லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 தொடரில் பௌண்டரி எல்லைகள் விசாலமானதாக உள்ளதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரும், LPL தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றவருமான சொஹைப் மலிக் தெரிவித்தார்.
அத்துடன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக்கில் உலகின் முன்னணி வீரர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இயற்கையை முன்நிறுத்தி புதிய ஜேர்ஸியில் களமிறங்கிய ஜப்னா ஸ்டாலியன்ஸ்
இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடகப் பிரிவினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி வாயிலான நேர்காணலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”உலகம் முழுவதும் கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல கோடி மக்கள் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற இந்த தருணத்தில் லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரை நடத்த முன்வந்தமை தொடர்பில் தனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரானது மிகவும் பெறுமதியான போட்டியாகும். மிகவும் வெற்றிகரமாக இந்தத் தொடர் நடைபெற்று வருகின்றது. அடுத்த வருடத்திலிருந்து இந்தத் தொடரில் பங்கேற்க உலகில் உள்ள பல முன்னணி வீரர்கள் வருவார்கள் என நான் நம்புகிறேன். நான் கதைத்த வெளிநாட்டு வீரர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தப் போட்டித் தொடரானது ஒரே மைதானத்தில் தான் நடைபெற்று வருகின்றது. எனவே அடுத்த வருடம் முதல் நாடுபூராகவும் உள்ள மைதானங்களில் இந்தப் போட்டித் தொடரை நடத்த முடியும் என எதிர்பார்க்கிறேன்.
இதனால் இலங்கை முழுவதும் கிரிக்கெட் திருவிழாவாக இருக்கும். குறிப்பாக, ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து வீரர்களை உற்சாகப்படுத்தினால் இந்தத் தொடரானது இன்னும் வரவேற்பு கிடைக்கும்.
Video: ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் விளையாடும் அனுபவத்தை கூறும் வியாஸ்காந்த்!
இவ்வாறான லீக் தொடர்களை நடத்துவதன் மூலம் திறமையான வீரர்களை இனங்கண்டு கொள்ள முடியும். குறிப்பாக ஒவ்வொரு அணியிலும் உள்ள வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தினால் போட்டித் தொடர் முடியும் வரை பரபரப்பும், விறுவிறுப்பும் காணப்படும்.
குறிப்பாக, T20 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற விரர்களை இலகுவாக இனங்கண்டு கொள்வதற்கு இவ்வாறான தொடர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தத் தொடரில் விளையாடுவதால் எனக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும். எனது முழு கவனமும் தற்போது லங்கா ப்ரீமியர் லீக் பக்கம் திரும்பியுள்ளது. நான் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அந்த அனுபவங்களை லங்கா ப்ரீமியர் லீக்கில் பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என தெரிவித்தார்.
இதனிடையே, ஹம்பாந்தோட்டை மைதானத்தில் உள்ள பௌண்டரி எல்லைகளின் தூரம் குறித்து சொஹைப் மலிக் கருத்து தெரிவிக்கையில்,
”இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் பௌண்டரி எல்லைகளின் தூரம் பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் பாகிஸ்தான் சுப்பர் லீக்கை விட ஹம்பாந்தோட்டை பௌண்டரி எல்லை விசாலமாக உள்ளது” என குறிப்பிட்டார்.
Video: LPL மகுடம் சூடப்போவது யார்? Kandy,Galle அணிகளின் நிலை என்ன?
இதேவேளை, தனது மனைவி மற்றும் மகனை இலங்கைக்கு அழைத்து வராததற்கான காரணத்தை மலிக் இதன்போது தெரிவித்தார்.
”எனது (இரண்டு வயது) மகனை பல விமானங்களில் எடுத்துச் செல்வது கடினம். ஆனால் அவர்கள் அடுத்த வருடம் இலங்கை வருவார்கள். இலங்கை எனது இதயத்தில் இருக்கிறது. இந்த நாட்டின் விருந்தோம்பலை நான் ரசிக்கிறேன். இந்த நாட்டில் எனக்கு நிறைய கிரிக்கெட் நண்பர்கள் உள்ளனர் . இங்குள்ளவர்களை நான் நேசிக்கிறேன். அவர்களது உணவை மிகவும் விரும்பி சாப்பிடுவேன்” என குறிப்பிட்டார்.
திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் 38 வயதான சொஹைப் மலிக், இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 68 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
2001இல் சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட சொஹைப் மலிக், பாகிஸ்தான் அணிக்காக T20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<