LPL 2022; தக்கவைக்கப்பட்ட மற்றும் நேரடி ஒப்பந்த வீரர்கள்

350

இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL 2022) தொடரின் வீரர்கள் ஏலம் இன்று (05) மாலை நடைபெறவுள்ள நிலையில், இத்தொடரின் ஐந்து அணிகளின் மூலமும் தக்கவைக்கப்பட்ட மற்றும் நேரடி ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

>> ஜப்னா கிங்ஸ் அணியில் இணையும் துனித் வெல்லாலகே

LPL தொடருக்கான நிபந்தனைகளின் அடிப்படையில் தொடரில் பங்கெடுக்கும் அணிகளும் கடந்த பருவத்தில் தமக்காக ஆடியிருந்த நான்கு உள்ளூர் வீரர்களையும், இரண்டு வெளிநாட்டு வீரர்களையும் தக்கவைக்க முடியும். அத்துடன் அணிகளுக்கு தலா இரண்டு உள்ளூர், வெளிநாட்டு வீரர்களை வீரர்கள் ஏலம் தவிர்த்து நேரடி ஒப்பந்தம் செய்து குழாத்திற்குள் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதன்படி தொடரின் நடப்புச் சம்பியன்களாகக் காணப்படும் ஜப்னா கிங்ஸ் அணி தமது அணியில் இலங்கை வீரர்களான திசர பெரேரா, மகீஸ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம மற்றும் அறிமுக வீரர் அஷான் ரன்திக்க ஆகியோருடன் சேர்த்து வெளிநாட்டு வீரர்களான ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் பாகிஸ்தான் சிரெஷ்ட வீரர் சொஹைப் மலிக் ஆகியோரினை தக்கவைத்திருக்கின்றது.

மறுமுனையில் ஜப்னா கிங்ஸ் அணி தமது நேரடி ஒப்பந்தம் மூலம் தனன்ஞய டி சில்வா மற்றும் இளம் சகலதுறைவீரர் துனித் வெல்லாலகே ஆகியோரினை உள்ளூர் வீரர்களாக உள்வாங்கியிருக்க, வெளிநாட்டு வீரர்களாக நேரடி ஒப்பந்தம் மூலம் மேற்கிந்திய தீவுகளின் ஈவின் லூயிஸ் மற்றும் தென்னாபிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ஹார்டஸ் விலியன் ஆகியோரும்  ஜப்னா கிங்ஸ் அணியில் இணைந்திருக்கின்றனர்.

இதேநேரம், தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி தமது குழாத்தினுள் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் அணித் தலைவர் தசுன் ஷானக்க, ரமேஸ் மெண்டிஸ், தரிந்து ரத்நாயக்க மற்றும் நுவான் பிரதீப் ஆகியோரினை தக்கவைத்திருக்கின்றது. இதேநேரம் புதிய வீரர்களாக நேரடி ஒப்பந்தம் மூலம் பானுக்க ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலிய சகலதுறைவீரர் பென் கட்டிங் ஆகியோர் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியில் இணைந்திருக்கின்றனர்.

கோல் கிளேடியேட்டர்ஸ் அணி LPL புதிய பருவத்தில் குசல் மெண்டிஸ், தனுஷ்க குணத்திலக்க, நுவான் துஷார, சர்பராஸ் அஹ்மட் மற்றும் புலின தரங்க ஆகியோரின் சேவைகளை தொடர்ந்தும் பெறவிருக்கும் நிலையில் நேரடி ஒப்பந்தம் மூலம் லக்ஷான் சந்தகன், துஷ்மன்த சமீர, பாஹிம் அஷ்ரப் மற்றும் இமாத் வஸீம் ஆகியோர் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக ஆடவிருக்கின்றனர்.

>> இலங்கை டெஸ்ட் அணியில் திடீரென பல மாற்றங்கள்

கண்டி வொரியர்ஸ் அணியினைப் பொறுத்தவரை இம்முறை வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன ஆகியோர் அவ்வணியில் நேரடி ஒப்பந்தம் மூலம் இணைந்த முன்னணி வீரர்களாக காணப்பட, கமிந்து மெண்டிஸ் அவ்வணியில் தக்கவைக்கப்பட்ட வீரராக காணப்படுகின்றார். இன்னும், மேற்கிந்திய தீவுகளின் கார்லோஸ் ப்ராத்வைட் மற்றும் அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் கிறிஸ் கிறீன் ஆகியோரும் கண்டி வொரியர்ஸ் அணிக்காக நேரடி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இறுதியாக கொழும்பு ஸ்டார்ஸ் அணியினை நோக்கும் போது அவ்வணியில் சரித் அசலன்க, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் நேரடி ஒப்பந்தம் மூலம் இணைந்த உள்ளூர் வீரர்களாகவும் தென்னாபிரிக்க அணியின் ட்வைன் பிரேடோரியஸ் நேரடி ஒப்பந்தம் மூலம் இணைந்த வெளிநாட்டு வீரர்களாகவும் உள்ளனர். அத்துடன் கொழும்பு ஸ்டார்ஸ் அணி ஜெப்ரி வன்டர்செய், அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரினை தமது குழாத்தில் தொடர்ந்தும் தக்க வைத்திருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<