இலங்கை கிரிக்கெட் சபையும், ஐ.பி.ஜி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இடம்பெற்ற போட்டிகளுடன் நிறைவுக்கு வந்தது.
நடப்பு லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் அதிகளவான இலங்கை வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தமை இத்தொடரில் நிகழ்ந்த சிறப்பம்சமாகும்.
கன்னி LPL சம்பியன் கிண்ணம் ஜப்னா ஸ்டாலியன்ஸ் வசம்
கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தலுக்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச மட்டத்திலான போட்டித் தொடராக லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நடைபெற்றது.
போதியளவு பயிற்சிகள் இன்றி பெரும்பாலான வீரர்கள் களமிறங்கியதால் தொடரானது சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது. எனினும், இதனையும் பொருட்படுத்தாமல் வீரர்கள் துடுப்பாட்டத்தில் அசத்தியிருந்தனர்.
ஒரு சுப்பர் ஓவர், ஐந்து தடவைகள் 200 ஓட்டங்கள், ஒரு சதம், 35 அரைச்சதங்கள், 273 சிக்ஸர்கள், 494 பௌண்டரிகள் என பல சாதனைகளும், ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும் கடந்த 20 நாட்களில் அரங்கேறின.
அதுமாத்திரமின்றி, இம்முறை தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் 10 வீரர்களில் எட்டு பேர் இலங்கை வீரர்கள் என்பது சிறப்பம்சமாகும்.
இதன்படி, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
- தனுஷ்க குணதிலக்க (475 ஓட்டங்கள்)
அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க இடம்பிடித்தார்.
அந்த அணி முதல் ஐந்து லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவினாலும், லீக் தொடரின் ஆரம்பத்தில் இருந்து ஓட்டங்களைக் குவித்த அவர் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நிறைவடையும் வரை தக்கவைத்துக் கொண்டார்.
அத்துடன் இத்தொடரில் நான்கு அரைச்சதங்களைக் குவித்த அவர், அதிக அரைச்சதங்கள் பெற்ற வீரராகவும் இடம்பிடித்தார்.
எதுஎவ்வாறாயினும், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் வெற்றிகரமான துடுப்பாட்ட வீரராக வலம்வந்த தனுஷ்க குணதிலக்க விளையாடிய 10 போட்டிகளில் 476 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன் நடப்பு லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களை அதிகபட்சமாக அவர் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Video: சங்காவின் மறு அவதாரமா Danushka? அப்ரிடி வெளியிட்ட Tweet..!
தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 67.85 என்ற சராசரியுடன் 64 பௌண்டரிகளையும், 8 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார்.
இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி தவிர அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 30 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளதுடன், பவர் ப்ளேயில் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களைக் குவித்தார்.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் அடுத்த குமார் சங்கக்கார தனுஷ்க குணதிலக்க என கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் முன்னாள் தலைவரான சஹீட் அப்ரிடி தனது டுவிட்டர் மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தோல்விகளால் துவண்டு போன கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு அரையிறுதிப் போட்டி, இறுதிப் போட்டி என்பன தவிர மற்றைய எல்லாப் போட்டிகளிலும் அந்த அணிக்கு ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த இவர் முக்கிய பங்காற்றினார்.
எனினும், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.
LPL மூலம் எனது குறிக்கோளை அடைந்தேன் – தனுஷ்க குணதிலக்க
இந்தப் போட்டியில் ஓட்டங்களைக் குவிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனுஷ்க குணதிலக்க, அவசரமாக ஓட்டம் ஒன்றை எடுக்க முனைந்தபோது பந்துவீச்சாளர் சுரங்க லக்மாலுடன் மோதினார். இதன்போது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த திசர பெரேரா பந்தை நேராக விக்கெட்டுக்கு எறிந்ததால் ரன் அவுட் ஆனார். எனவே, அவரால் ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெறமுடிந்தது.
எதுஎவ்வாறாயினும், மீண்டும் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக செயற்படுவதற்கான வாய்ப்பை குணதிலக்கவுக்கு லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அதிலும் குறிப்பாக, அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணம், 2022இல் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணம் மற்றும் 2023இல் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனுஷ்க குணதிலக்க இடம்பிடிப்பார் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
- லோரி எவன்ஸ் (289 ஓட்டங்கள்)
இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் முதல் சதமடித்தவரும், தனிநபர் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்தவருமான லோரி எவன்ஸ், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் 10 வீரர்களில் இடம்பெற்ற முதலாவது வெளிநாட்டு வீரர் இவர் தான்.
அத்துடன், கொழும்பு கிங்ஸ் அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய லோரி எவன்ஸுக்கு காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அரையிறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனது.
எதுஎவ்வாறாயினும், இவரது அபார ஆட்டம் கொழும்பு கிங்ஸ் அணியை அரையிறுதிப் போட்டி வரை கொண்டு சென்றது என்று சொல்லலாம்.
Video: புள்ளிப் பட்டியில் முதலிடத்தைப் பெற்றும் ஏமாற்றமே மிஞ்சியது: Angelo Mathews கவலை
கொழும்பு கிங்ஸ் அணியின் முக்கிய துருப்பு சீட்டாக விளங்கிய இவர், 8 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 289 ஓட்டங்களைக் குவித்தார்.
இதில் 18 சிக்ஸர்களை ஒட்டுமொத்தமாக குவித்துள்ள லோரி எவன்ஸ், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரராகவும் இடம்பிடித்தார்.
இவருடைய பங்களிப்பானது ஆரம்பத்தில் போதியளவு அந்த அணிக்கு கிடைக்காவிட்டாலும், லீக் போட்டிகளின் இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடி அந்த அணியை அரையிறுதிக்கு கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
- தசுன் ஷானக்க (278 ஓட்டங்கள்)
இலங்கை அணியின் சகலதுறை வீரரான தசுன ஷானக்க இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் தம்புள்ள வைகிங் அணியின் தலைவராகச் செயற்பட்டதுடன், அந்த அணியை அரையிறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.
இவரது மதி நுட்பமான தலைமைத்துவம் தான் தம்புள்ள வைகிங் அணியை அரையிறுதிப் போட்டி வரை கொண்டு சென்றது என்று சொல்லலாம்.
தம்புள்ள அணிக்கு சகலதுறையிலும் பங்களிப்பு செய்த தசுன் ஷானக்க, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
தென்னாபிரிக்க தொடரில் இருந்து விலகும் அஞ்செலோ மெதிவ்ஸ்
துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் தம்புள்ள வைகிங் அணிக்கு எப்போதும் நம்பிக்கை கொடுத்து வந்த இவர், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 2 அரைச்சதங்களுடன் 278 ஓட்டங்களைக் குவித்தார்.
எனவே, அவருடைய துல்லியமான துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் தலைமைத்துவம் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் கைகொடுத்தது போல இலங்கை கிரிக்கெட் அணிக்கும் எதிர்காலத்தில் கைகொடுக்கும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
- அவிஷ்க பெர்னாண்டோ (275 ஓட்டங்கள்)
இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக துடுப்பாட்டத்தில் பிரகாசித்தவர் தான் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடிய அவிஷ்க பெர்னாண்டோ.
இலங்கை அணிக்காக ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகின்ற இவர், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் 9 போட்டிகளில் விளையாடி 275 ஓட்டங்களைக் குவித்தார்.
Video: திசரவின் தரமான Captaincy: கதாநாயகனாக மாறிய Wanindhu Hasaranga..!| LPL 2020 2nd Semi Final Highlights
2 அரைச்சதங்களைப் பெற்ற அவர், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியுடனான முதலாவது லீக் போட்டியில் ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
- நிரோஷன் டிக்வெல்ல (270 ஓட்டங்கள்)
இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் போட்டித் தொடரில் இரண்டு அரைச்சதங்களைக் குவித்த நிரோஷன் டிக்வெல்ல, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
தம்புள்ள வைகிங் அணியின் விக்கெட் காப்பாளராகச் செயற்பட்ட நிரோஷன் டிக்வெல்ல, இம்முறை போட்டித் தொடரில் பெரிதளவில் பிரகாசிக்கவில்லை. ஆனாலும், அந்த அணிக்குத் தேவையான நேரத்தில் பங்களிப்பு செய்திருந்தார்.
தம்புள்ள அணிக்காக 9 போட்டிகளில் விளையாடிய அவர் 270 ஓட்டங்களைக் குவித்தார்.
- குசல் மெண்டிஸ் (263 ஓட்டங்கள்)
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
கண்டி டஸ்கர்ஸ் அணியின் முக்கிய துருப்பு சீட்டாக இருந்;த அவர், 8 போட்டிகளில் 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 263 ஓட்டங்களைக் குவித்தார்.
இலங்கையின் வேகப் புயலாக உருவெடுக்கும் டில்ஷான் மதுஷங்க
இதில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியுடனான தீர்மானமிக்க லீக் போட்டியில் குசல் மெண்டிஸ் 68 ஓட்டங்களைக் குவித்தாலும், அந்த அணி தோல்வியைத் தழுவி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
எதுஎவ்வாறாயினும், இலங்கை அணிக்காக மூன்று வகை கிரிகn;கட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வருகின்ற அவர், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் எதிர்பார்த்தளவு சோபிக்கவில்லை.
இந்தப் பட்டியலில் முறையே 7 முதல் 10 ஆகிய இடங்கள் வரை திசர பெரேரா (261 ஓட்டங்கள்) தினேஷ் சந்திமால் (246 ஓட்டங்கள்), அஞ்சலோ பெரேரா (227 ஓட்டங்கள்), அசாம் கான் (215 ஓட்டங்கள்) ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<