இலங்கைக்கு எதிராக நாளை மறுதினம் (25) நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான லோக்கி பெர்குசன் இழந்துள்ளார்.
வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இன்று காலை (23) உடற்தகுதி பரிசோதனைக்கு அவர் முகங்கொடுத்துள்ளதுடன், இதன்போது அவரது காயம் குணமடையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, காயத்துக்குள்ளாகிய லோக்கி பெர்குசனுக்கு மாற்று வீரர் இதுவரை பெயரிடப்படவில்லை என்றாலும், மாற்று வீரர் தொடர்பில் நாளை (24) காலை அறிவிக்கப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கு மாத்திரம் லொக்கி பெர்குசன் பெயரிடப்பட்டிருந்தார். அந்தப் போட்டிக்குப் பிறகு அவர் அணியில் இருந்து வெளியேறி இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு பயணமாகவிருந்தார்.
அவருடம், பின் எலென் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகிய 2 வீரர்களும் முதலாவது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடிய பின்னர் இந்தியா புறப்பட உள்ளனர்.
- IPL ஆட நியூசிலாந்து அணியிலிருந்து வெளியேறும் மற்றுமொரு வீரர்
- நியூசிலாந்து குழாத்திலிருந்து வில்லியம்சன், சௌதி, கொன்வே நீக்கம்!
- வில்லியம்சன், நிக்கோல்ஸின் இரட்டைச் சதங்களுடன் வலுப்பெற்ற நியூசிலாந்து
இதனிடையே, நியூசிலாந்து ஒருநாள் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, டெவோன் கொன்வே, மிட்செல் சான்ட்னர்
மற்றும் மைக்கல் பிரேஸ்வெல் ஆகியோர் IPL தொடரில் பங்கேற்கவுள்ளதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக பெயரிடப்படவில்லை.
எனவே, தற்போது வேகப் பந்துவீச்சாளர் லோக்கி பெர்குசனும் காயத்தினால் வெளியேறியுள்ளதால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் 9ஆவது வீரராக அவர் மாறியுள்ளார்.
சுற்றுலா இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (25) ஒக்லாந்தில் ஆரம்பமாகவுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<