வேர்ல்ட் ஜயன்ட்ஸ் (World Giants) மற்றும் ஆசிய லயன்ஸ் (Asia Lions) அணிகள் இடையிலான லெஜன்ட்ஸ் லீக் T20 தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான திலகரட்ன டில்ஷான் – உபுல் தரங்க ஆகியோரின் அதிரடியோடு ஆசிய லயன்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்து, தொடரின் சம்பியன்களாக நாமம் சூடியிருக்கின்றது.
>> இன்னிங்ஸ் தோல்வியுடன் வைட்வொஷ் செய்யப்பட்ட இலங்கை
கட்டாரின் டோஹா நகரில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக 2023ஆம் ஆண்டின் லெஜன்ட்ஸ் லீக் T20 தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மூன்று அணிகள் பங்கு பெறும் இந்த தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இந்திய மஹாராஜாஸ் (India Mahajaras) அணியை வீழ்த்திய ஆசிய லயன்ஸ் அணியினர் தொடரின் இறுதிப் போட்டியில் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியுடன் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது.
இதனையடுத்து திங்கட்கிழமை (20) தொடரின் இறுதிப் போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றது.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணிக்கு பங்களாதேஷின் முன்னாள் சுழல்வீரரான அப்துர் ரசாக் நெருக்கடியினை உருவாக்கினார். இதனால் ஒரு கட்டத்தில் அவ்வணி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் அவ்வணிக்கு ஜெக்ஸ் கல்லிஸ் அரைச்சதம் விளாசி கைகொடுத்தார்.
இதனால் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது.
வேர்ல்ட் ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஜேக்ஸ் கல்லிஸ் 54 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்கள் குவித்தார்.
இதேநேரம் ஆசிய லயன்ஸ் அணி பந்துவீச்சில் அப்துர் ரசாக் 2 விக்கெட்டுக்களையும், திசர பெரேரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆசிய லயன்ஸ் அணிக்கு உபுல் தரங்க, திலகரட்ன டில்ஷான் ஜோடி அட்டகாசமான ஆரம்பத்தினை வழங்கியது.
அந்தவகையில் இரண்டு வீரர்களும் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக முதல் பத்து ஓவர்களுக்குள் 115 ஓட்டங்களை எடுத்திருந்தனர். இதன் பின்னர் ஆசிய லயன்ஸ் அணியின் முதல் விக்கெட்டாக மாறிய உபுல் தரங்க தொடரில் தன்னுடைய மூன்றாவது அரைச்சதத்துடன் வெறும் 28 பந்துகளுக்கு 03 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் உடன் 57 ஓட்டங்கள் எடுத்தார்.
உபுல் தரங்கவின் இணைப்பாட்டத்தின் பின்னர் டில்சானும் அரைச்சதம் விளாச ஆசிய லயன்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை 16.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களுடன் அடைந்தது.
>> முக்கோண ஒருநாள் தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை இளையோர்
ஆசிய லயன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதன் வெற்றியை உறுதி செய்ய மற்றுமொரு காரணமாகவிருந்த திலகரட்ன டில்சான் 42 பந்துகளில் 08 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் எடுத்தார்.
மறுமுனையில் வேர்ல்ட் ஜயன்ட்ஸ் பந்துவீச்சில் சமித் படேல், மொன்டி பனேசார் மற்றும் ப்ரெட் லீ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றி இருந்த போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.
போட்டியின் ஆட்டநாயகனாக ஆசிய லயன்ஸ் அணியின் அப்துர் ரசாக் தெரிவாக, தொடர் நாயகன் விருதினை உபுல் தரங்க பெற்றிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
வேர்ல்ட் ஜயன்ட்ஸ் – 147/4 (20) ஜெக்ஸ் கல்லிஸ் 78(54), அப்துர் ரசாக் 14/2(4)
ஆசிய லயன்ஸ் – 148/3 (16.1) திலகரட்ன டில்ஷான் 58(42), உபுல் தரங்க 57(28)
முடிவு – ஆசிய லயன்ஸ் 7 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<