ஸாஹிரா பாடசாலை மைதானத்தில் கோல் மழை பொழிந்த லிவர்பூல்

413

புத்தளம் கால்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற “ட்ரெகன்ஸ் லீக்-2017” போட்டிகளின் 25ஆவது லீக் ஆட்டம் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் புள்ளிப்பட்டியலில் முதலாம் இடத்திலுள்ள லிவர்பூல் மற்றும் 6ஆவது இடத்திலுள்ள நியூ ப்ரண்ஸ் ஆகிய கழகங்களுக்கிடையில் முழுமையான 80 நிமிடங்களைக் கொண்ட போட்டியாக இடம் பெற்றது.

போட்டி ஆரம்பித்து 15 நிமிடங்கள் வரை நியூ ப்ரண்ஸ் கழகம் சார்பாக 7 வீரர்களே களத்தில் ஆடிக்கொண்டிருந்தனர். இதனால் முழுப் போட்டி நேரத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் லிவர்பூல் அணி வைத்துக் கொள்ள போட்டி பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பைக் கொடுக்கவில்லை.

லிவர்பூல் கழகத்தின் நஸிம் ஹெட்ரிக் கோல் அடிக்க அனுபவமிக்க வீரர் அலி இரண்டு கோல்கள் அடித்து மேலும் வலுச் சேர்க்க இளம் நியூ ப்ரண்ஸ் கழகத்தை 8-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி கொண்டு புள்ளிப்பட்டியலில் தனது முதலாம் இடத்தை லிவர்பூல் கழகம் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டது.

ஏழு வீரர்களுடன் நியூ ப்ரண்ஸ் கழகம் களமிறங்கியமையால் ஆரம்பத்திலிருந்தே பின்னடைவினை சந்திக்க நேர்ந்தது. முன்களத்தில் ஆடுவதற்காக எவரும் இல்லாததால் லிவர்பூல் கழக தடுப்பு வீரர்கள் சுதந்திரமாகக் காணப்பட்டனர்.

போட்டியின் 7ஆவது நிமிடத்தில் அம்ருஸைன் கொடுத்த பந்தைப் பெற்ற நஸீம் இலகுவாக கம்பத்திற்குள் பந்தை அனுப்பிவிட லிவர்பூலின் கோல் கணக்கு ஆரம்பித்தது.

தொடந்து  பந்து லிவர்பூல் அணியினரின் கால்களிலே காணப்பட நியூ ப்ரண்ஸின் பக்கத்தினை ஆக்கரமிக்க ஆரம்பித்தனர் லிவர்பூல் அணியினர்.

மீண்டும் 14ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்குக் கிடைத்த கோர்ணர் உதையை அப்ரார் உயர்த்தி அடிக்க அதை நப்ரி ஹெடர் செய்து கம்பத்திற்குள் அனுப்பி வைக்க இரண்டாவது கோலையும் லிவர்பூல் கழகம் பெற்றுக்கொண்டது.

போட்டியின் 18ஆவது நிமிடத்தில் நப்ரி கொடுத்த உயரமான பந்துப் பரிமாற்றத்தை நஸ்ரி உயரே எழுந்து தலையால் முட்டி கோலாக்க முயல பந்து கம்பத்தின் மேலால் சென்று ஏமாற்றியது.

மேலும் 3 நிமிடங்கள் கழித்து கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பினை அப்ரார் உயர்த்தி உதைக்க சிப்கான் பந்தை தலையால் முட்டி அம்ருஸைனிடம் கொடுக்க அதை கோல்காப்பாளர் ஹிஜாஸ் இல்லாத திசையூடாக கம்பத்திற்குள் உள்ளனுப்ப 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் லிவர்பூல் கழகம் வலுப்பெற்றது.

வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற கம்பளை மண்ணின் முதல் போட்டி

கோல் அதிர்ச்சியிலிருந்து மீள முன் அடுத்த நிமிடமே அம்ருஸைன் கொடுத்த சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை நஸீம் பெற்று இலகுவாக கம்பத்திற்குள் உதைத்துவிட, கோல்காப்பாளர் ஹிஜாஸின் முயற்சியும் பயனில்லாமல் போக அணியின் கோல் கணக்கை 4 ஆக உயர்த்தினார்.

முதல் பாதி முழுமையாக லிவர்பூல் வசம் இருக்க நியூ ப்ரண்ஸ் கழகத்தால் ஒரு கோலுக்கான முயற்சியும் மேற்கொள்ள முடியாமல் போனது.

முதல் பாதியின் இறுதி முயற்சியாக அலி கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை நப்ரி பெற்று நேர்த்தியாக கோலுக்கான வாய்ப்பாக கொடுக்க, அதை பெற்றுக் கொண்ட ரஸ்வான் இலகுவாக கோலாக்க வேண்டிய பந்தை நேராக ஹிஜாஸின் கைகளுக்கே அடிக்க, பந்து கையில் பட்டு வெளியேற கோல் போடும் வாய்ப்பு கைநழுவிச் சென்றது.

முதல் பாதி: லிவர்பூல் விளையாட்டுக் கழகம்  4 – 0  நியூ ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம்

முதல்பாதியை முற்றாக ஆக்கிரமித்த நிலையில் இரண்டாம் பாதியை லிவர்பூல் கழகம் எதிர்கொண்டது. அதற்கு மாற்றமாக 10 வீரர்களுடன் மிகப் பெரிய பின்னடைவோடு நியூ ப்ரண்ஸ் கழகம் களம் கண்டது.

இரண்டாம் பாதி ஆரம்பித்து 5ஆவது நிமிடத்தில் அம்ருஸைன் கொடுத்த பந்தை ரவ்ஸான் பெற்று வேகமாக கம்பத்திற்குள் அடிக்க ஹிஜாஸ் பிடிக்க முற்படும் முன்னர் பந்து கம்பத்தினுள் சரணடைய லிவர்பூல் கழகம் 5ஆவது கோலையும் பெற்றுக்கொண்டது.

போட்டியின் 48ஆவது நிமிடத்தில் தன் முதலாவது கோல் முயற்சியில் இறங்கியது நியூ ப்ரண்ஸ் கழகம். பஸ்ரீன் கொடுத்த பந்தை பர்மான் பெற்று கம்பம் நோக்கி அடிக்க அதை பரோஜ் இலகுவாகப் பிடித்துக் கொண்டார்.

தொடர்ந்த ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் அம்ருஸைன் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை நஸீம் பெற்று இரண்டு தடுப்பு வீரர்களைக் கடந்து இலகுவாக கம்பத்திற்குள் உதைந்து விட லிவர்பூல் கழகம் 6ஆவது கோலை பதிவு செய்தது. இது நஸீமின் ஹெட்றிக் கோலாகவும் மாறியது.

லிவர்பூல் கழகத்தினால் கோல் மழை பொழியப்பட தடுத்து நிறுத்த முடியாமல் நியூ ப்ரண்ஸ் கழகம் நிலை தடுமாறியது.

மேலும் 63ஆவது நிமிடத்தில் ரஸ்வான் வழங்கிய பந்தைப் பெற்ற அலி வேகமாகச் செயற்பட்டு இடது காலால் கம்பம் நோக்கி உதைக்க ஹிஜாசின் கைகளில் பட்டவாறே பந்து கோல் கம்பத்தினுள் நுழைந்தது. இதன் மூலம் லிவர்பூல் கழகம் 7ஆவது கோலையும் பதிவு செய்தது.

ரினௌன் – ஜாவா லேன் மோதல் சமநிலை : கொழும்பு அணிக்கு அதிர்ச்சி கொடுத்த சுபர் சன்

நியூ ப்ரண்ஸின் முழுப் பகுதிகளையூம் லிவர்பூல் வீரர்கள் முற்றாக ஆக்கிரமித்துக் கொள்ள, நியூ ப்ரண்ஸ் கழகம் தோல்வியின் பக்கம் சென்றது.

போட்டியின் 68ஆவது நிமிடத்தில் நியூ ப்ரண்ஸ் கழகத்திற்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பினை பர்மான் பொறுப்பேற்று கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க, உயர்ந்து வந்த பந்தைப் பிடிக்கும் முயற்சியில் கோல் காப்பாளர் மிஸ்ராப் தோற்றுப் போக, நியூ ப்ரண்ஸ் கழகம் போட்டியில் முதல் கோலைப் பதிவு செய்தது.

கோல் அடித்த மகிழ்ச்சி தொடர முன் அடுத்த நிமிடமே மைதானத்தின் நடுப் பகுதியிலிருந்து லிவர்பூல் வீரர் அலி பந்தைப் பெற்று, அனைத்து பின் கள வீரர்களையும் கடந்து சென்று கம்பம் நோக்கி அடித்து தன் அணி சார்பாக 8ஆவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

விறுவிறுப்பாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டி ரசிகர்களுக்கு எதிர் மாறான முடிவை வழங்கிக் கொண்டிருக்க மைதானத்திலிருந்து ரசிகர்கள் செல்ல ஆரம்பித்தனர்.

ஆட்டத்தின் இறுதி முயற்சியாக ரஸ்வான் கொடுத்த பந்தை நஸ்ரி கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க பந்து கம்பத்தின் மேலால் செல்ல, லிவர்பூல் கழகத்தின் இறுதி முயற்சி தோல்வியில் முடிந்தது.

போட்டி நிறைவு பெற்றதாக நடுவர் அறிவிக்க பலம் மிக்க லிவர்பூல் கழகம் இளம் நியூ ப்ரண்ஸ் கழகத்தை 8 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி முதலிடத்தை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டது.

முழு நேரம்: லிவர்பூல் விளையாட்டுக் கழகம்  8 – 1  நியூ ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

லிவர்பூல் விளையாட்டுக் கழகம் – நஸீம் (7’, 22’, 54’), நப்ரி 14’, அம்ருஸைன் 21’, ரஸ்வான் 45’, அலி (63’ , 69’)

நியூ ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம் – பர்மான் 68’

மஞ்சள் அட்டை

லிவர்பூல் விளையாட்டுக் கழகம் – நஸீம் 57’, இஸ்ராப் 79’

நியூ ப்ரண்ஸ் விளையாட்டுக்  கழகம் – பர்மான் 35’