கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று (05) ஆரம்பமாகிய 3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை வீரர்கள் 4 போட்டி சாதனைகளுடன் 5 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
அத்துடன், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி 3 பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற 3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் வீரர்களின் அணி வகுப்புடனான ஆரம்ப விழாவுடன் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியது.
போட்டிகளின் முதலாவது தங்கப் பதக்கத்தை ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் கலந்து கொண்ட இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியில் 71.47 மீற்றர் தூரத்தை எறிந்து அவர் புதிய போட்டி சாதனையும் படைத்தார்.
முன்னதாக 2013 ஆம் ஆண்டு ரஞ்சியில் நடைபெற்ற 2 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இந்திய வீரர் பவிந்தர் குமாரால் நிலைநாட்டப்பட்ட (67.63 மீற்றர்) இந்த சாதனையை அர்ஷ்தீப் முறியடித்தார்.
தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 7 நாடுகளைச் சேர்ந்த 200 வீரர்கள் பங்கேற்பு
இப்போட்டியில் பங்குபற்றியிருந்த இலங்கை வீரர்களான பிரகதி பிரசன்ன ரணவக்க (61.71 மீற்றர்), அஞ்சன பொன்சேகா (60.47 மீற்றர்) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இதேவேளை, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை ஆண்களுக்கான உயரம் பாய்தலில் தரிந்து தசுன் பெற்றுக்கொடுத்தார். அவர் குறித்த போட்டியில் 2.04 மீற்றர் உயரத்தைத் தாவியிருந்தார்.
குறித்த போட்டியில் பங்குபற்றிய இந்தியாவின் குர்ஜீத் சிங் (2.00 மீற்றர்) மற்றும் இலங்கையின் செனரு அமரசிங்க (2.00 மீற்றர்) வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
400 மீற்றரில் இலங்கைக்கு ஹெட்ரிக் பதக்கம்
இலங்கை அணிக்கு 400 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்று கொடுக்கின்ற முக்கிய வீரர்களுள் ஒருவராக விளங்கிய இலங்கை அணியின் தலைவர் அருண தர்ஷன, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் (46.55 செக்), புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
முன்னதாக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியை 48.21 செக்கன்களில் ஓடி முடித்து 2013 ஆம் ஆண்டு ரஞ்சியில் நடைபெற்ற 2 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இந்திய வீரர் சந்தீப் லத்வாலினால் ( 48.24 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை அருண தர்ஷன முறியடித்திருந்தார்.
எனினும், அவருடன் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்த சக வீரர்களான பி.எல் கொடிகார (46.99 செக்.), பபசர நிக்கு (47.43 செக்.) ஆகியோர் முந்தைய சாதனையை விட சிறப்பாக ஓடி முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
400 மீற்றரில் ஷியாமலி போட்டி சாதனை
பெண்களுக்கான 400 மீற்றர் ஒட்டப் போட்டியில் இலங்கையின் ஷியாமலி குமாரசிங்க (54.47 செக்.) புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றுகொடுத்தார்.
முன்னதாக 2007 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இந்திய வீராங்கனை குஜாலா ஹாரதி, 56.32 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையை 11 வருடங்களுக்குப் பிறகு ஷியாமலி முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில், இந்திய வீராங்கனைகளான சுபா வெங்கடேஷன் (55.18 செக்.) மற்றும் ரச்னா (55.18 செக்.) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
அதிவேக கனிஷ்ட வீராங்கனையான அமாஷா முடிசூடல்
பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.92 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை பெண்கள் அணியின் தலைவி அமாஷா டி சில்வா, புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் வடக்கு, கிழக்கு, மலையக வீரர்கள்
முன்னாதாக 2007 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இந்திய வீராங்கனை ஜெஸ்ஸி அருளப்பன் 12.15 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டிய சாதனையை 11 வருடங்களுக்குப் பிறகு அமாஷா முறியடித்தார்.
இப்போட்டியில் இலங்கை அணியின் 18 வயதுடைய வீராங்கனையான ஷெலிண்டா ஜொன்சன் (12.28 செக்.) வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதேவேளை, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் சானுக்க சந்தீப்ப (10.88 செக்.) 0.07 செக்கன்களினால் இந்திய வீரர் ககேர ரவியிடம் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார்.
4 x 100 மீற்றரில் இலங்கைக்கு தங்கம்
பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை அணியின் தலைவி அமாஷா டி சில்வா தலைமையிலான இலங்கை அணியினர் (46.23 செக்.) புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றனர். இதில் இலங்கை அணிக்காக ஷெலிண்டா ஜென்சன், ஷெர்மிலா ஜேன், சபியா யாமிக் மற்றும் அமாஷா டி சில்வா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
முன்னதாக 2007 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கை 4 x 100 அஞ்சலோட்ட அணியினால் (47.14 செக்.) நிலைநாட்டப்பட்ட சாதனையை மீண்டும் இலங்கை அணி வீராங்கனைகள் முறியடித்தனர்.
குறித்த போட்டியில் இந்திய அணி (46.23 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், பங்களாதேஷ் அணி (46.81 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.
எனினும், ஆண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணியின் தவறான கோல் பரிமாற்றத்தால் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு கைநழுவிப்போனது. இப்போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவுகள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்றது.
தட்டெறிதலில் பிரகாஷ்ராஜுக்கு 4ஆவது இடம்
3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாமில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு தமிழ் பேசும் வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.
இதில் ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குபற்றிய யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சிவகுமார் பிகாஷ்ராஜ் (44.11 மீற்றர்) தனது சிறந்த தூரத்தைப் பதிவு செய்து 4 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனினும், குறித்த போட்டியில் இந்தியாவின் அஜே (50.11 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், இலங்கையின் லஹிரு கேஷான் பதிரன (47.37 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், மற்றுமொரு இந்திய வீரரான ஆஷிஸ் பலோதியா (46.52 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்தியாவினால் 6 சாதனைகள் முறியடிப்பு
3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளான இன்று நடைபெற்ற பெரும்பாலான மைதான நிகழ்ச்சிகளில் இந்திய வீரர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தனர்.
இதில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கிரன் பாலியன் (14.77 மீற்றர்) புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், அனாமிகா தாஸ் (14.54 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
எனினும், இலங்கையின் சரிஷ குணசேகரவுக்கு (11.51 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதேநேரம், ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பேசும் வீரரான லோகேஷ் ராகுல் (7.74 மீற்றர்) புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
முன்னதாக 2013 ஆம் ஆண்டு ரஞ்சியில் நடைபெற்ற 2 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இந்திய வீரர் பி. அன்பு ராஜாவால் நிலைநாட்டப்பட்ட (7.41 மீற்றர்) சாதனையை லோகேஷ் ராகுல் முறியடித்தார்.
இப்போட்டியில் இந்தியாவின் மற்றுமொரு வீரரான ரிஷாப் ரிஷிஷ்வர் (7.43 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கையின் பிரமோத் மதுபாஷன (7.02 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கான நீளம் பாய்தலில் தமிழகத்தின் கரூர் கிராமத்தைச் சேர்ந்த புனிதா ராமசாமி, (5.95 மீற்றர்) தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
எனினும், குறித்த போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் ரித்மா நிஷாதி அபேரத்ன (5.91 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், நெத்மி மேகவர்ண (5.67 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதேவேளை, பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்திலும் இந்தியா மற்றுமொரு புதிய சாதனையை நிலைநாட்டியது. குறித்த போட்டியை 14.19 செக்கன்களில் நிறைவு செய்த சப்னா குமாரி தங்கப் பதக்கத்தை வென்றார். எனினும், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை இந்தியாவின் பிரக்யன் பிரசாந்த் (14.98 செக்.), மற்றும் இலங்கையின் பி.ஆர் குணதிலக்க (15.25 செக்.) பெற்றுக்கொண்டனர்.
தாய்லாந்து திறந்த மெய்வல்லுனரின் முதல் நாளில் இலங்கைக்கு நான்கு பதக்கங்கள்
இது இவ்வாறிருக்க, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிய இந்திய வீரர்களான அன்கித் (3.51.52 செக்.), மற்றும் துர்கா பிரமோத் (4.31.38 செக்.) ஆகியோர் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
குறித்த போட்டியின் ஆண்கள் பிரிவில் இலங்கையின் கே மதுஷங்க (4.02.46 செக்.) மற்றும் பெண்கள் பிரிவில் எம். கனகரத்ன (4.36.71 செக்.) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.
பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னிலை
இலங்கை, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 வீர, வீரங்கனைகளின் பங்குபற்றலுடன் இன்று ஆரம்பமாகிய 3 ஆவது தெற்காசிய கனிஷட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 11 தங்கம், 10 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இதேநேரம், போட்டிகளை நடாத்துகின்ற நாடான இலங்கை, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்று 2 ஆவது இடத்தில் உள்ளது.
இதேவேளை, ஒரு வெள்ளிப் பதக்கத்துடன் பாகிஸ்தான் 3 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் ஆகியன தலா ஒவ்வொரு வெண்கலப் பதக்கத்துடன் முறையே 4 ஆம், 5 ஆம் இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன. எந்தவொரு பதக்கங்களையும் பெற்றுக்கொள்ளாத நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் கடைசி இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற 3 ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவதும், இறுதியுமான நாளான நாளை (06) நடைபெறவுள்ள போட்டிகளை தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக கண்டுகளிக்க முடியும்.
அத்துடன், இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான Thepapare.com வாயிலாக போட்டிகளின் நேரடி அஞ்சல், புகைப்படங்கள், அறிக்கைகள், கட்டுரைகள் என்பவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.