இலங்கை கடற்படை அணியானது CR & FC அணியை 21-13 என்ற புள்ளி அடிப்படையில் வென்றதன் மூலம், டயலொக் ரக்பி லீக் 2ஆம் வாரத்தில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
வெலிசர மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு சிறப்பான காலநிலையும் ஒத்துழைப்பை வழங்கியது. போட்டியின் முதல் கட்டங்களில் CR & FC அணியானது ஆதிக்கம் செலுத்திய பொழுதும் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளத் தவறியது.
போட்டியின் முதல் புள்ளியை கடற்படை அணியே பெற்றுக்கொண்டது. CR & FC அணி கொடுத்த அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்த கடற்படை அணியானது நிவங்க பிரசாத்தின் மூலமாக தனது முதலாவது ட்ரையை பெற்றுக்கொண்டது. CR & FC அணி வீரர் பந்தை தவறவிட்டதால் கிடைத்த ஸ்க்ரம் மூலமாக நிவங்க பிரசாத் ட்ரை வைத்தார். திலின வீரசிங்கவின் வெற்றிகரமான உதையின் மூலம் 2 மேலதிக புள்ளிகளையும் பெற்றுக்கொண்டு 07-00 என கடற்படை அணி முன்னிலை வகித்தது.
பதிலுக்கு CR & FC அணியும் விட்டுக்கொடுக்காமல் தனது முதலாவது புள்ளியை உடனடியாகப் பெற்றுக்கொண்டது. கடற்படை அணியானது ஓப் சைட் காணப்பட்டதால் CR&FC அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. வாய்ப்பை தவறவிடாத ரீசா முபாரக் CR & FC அணி சார்பாக 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.
கடற்படை அணியின் மத்திய வரிசை வீரர் லஹிரு ஹேரத், ரீசா முபாரக்கை அபாயமான முறையில் தடுத்ததால் நடுவரினால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மீண்டு CR & FC அணியானது தமக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டது. 40 மீட்டர் தூரத்தில் இருந்து ரீசா முபாரக் உதையை வெற்றிகரமாக கம்பத்தின் நடுவே உதைத்ததன் மூலம் மேலும் 3 புள்ளிகளை CR & FC அணி பெற்றுக்கொண்டது.
முதற் பாதி : கடற்படை 07 – 06 CR & FC
இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலும் CR & FC அணியானது கடற்படை அணிக்கு அழுத்தம் கொடுத்தாலும், தமக்கு கிடைத்த வாய்ப்புகளை புள்ளிகளாக மாற்றிக்கொள்ளத் தவறியது. எனவே அழுத்தத்தில் இருந்து மீண்ட கடற்படை அணியானது லஹிரு ஹேரத்தின் மூலமாக தமது 2ஆவது ட்ரையை பெற்றுக்கொண்டது. திலின வீரசிங்கவின் வெற்றிகரமான உதையின் மூலம் 14-06 என கடற்படை அணி முன்னிலை வகித்தது.
கடற்படை அணியின் தடுப்பை உடைத்து எவ்வாறு ட்ரை வைப்பது என்று CR & FC அணியை ஆச்சரியப்பட வைத்தது கடற்படை அணியின் பின் வரிசை.
CR & FC அணியின் வீரர் பந்தை எடுத்துகொண்டு ட்ரை எல்லைக்கு பின்னால் உள்ள கோட்டில் கால் வைத்ததால் கடற்படை அணிக்கு 5 மீட்டர் ஸ்க்ரம் வழங்கப்பட்டது, இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட கடற்படை அணி வீரர் சரித் சில்வா கடற்படை அணி சார்பாக ட்ரை வைத்தார். இன்றைய போட்டியில் அனைத்து உதைகளையும் வெற்றிகரமாக உதைந்த திலின வீரசிங்க இவ் உதையையும் வெற்றிகரமாக உதைத்தார். இதன் மூலம் கடற்படை அணியானது 21-06 என தனது முன்னிலையை அதிகரித்தது.
போட்டியின் இறுதி நேரத்தில் CR & FC அணியானது கடற்படை அணியின் மீது தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து வந்தது. இதன் மூலம் தமக்குக் கிடைத்தை பெனால்டி வாய்ப்பை உடனடியாக செயற்படுத்தி விங் நிலை வீரர் சஷான் மொகமட் மூலமாக தனது முதல் ட்ரையை CR & FC அணி பெற்றுக்கொண்டது. ரீசா முபாரக்கின் வெற்றிகரமான உதையின் மூலம் 13 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது CR & FC அணி.
முழு நேரம் : கடற்படை 21 – 13 CR & FC
ThePapare போட்டியின் ஆட்ட நாயகன் – துலாஞ்சன வீரசிங்க (கடற்படை அணி)
போட்டியின் பின்னர் துலாஞ்சன நம்மிடம் கருத்து தெரிவித்த பொழுது “நாங்கள் இன்று பலமிக்க எதிர் அணியிடம் இருந்து கடினமான போட்டி ஒன்றை சந்தித்தோம். இப்போட்டியை நாம் இலகுவாக கருதவில்லை. அடிப்படை விடயங்களை சரிவர செய்ததன் மூலம் நாம் இந்த வெற்றியை அடைந்தோம் என்று கூறலாம். மேலும் எமது அணி சில விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் எதிர்வரும் போட்டிகளை சிறப்பாக முகம் கொடுக்கலாம்” எனத் தெரிவித்தார்.
மேலும் இன்றைய போட்டியில் அவரது விளையாட்டை பற்றிக் கேட்ட பொழுது “இன்றைய போட்டியில் நான் விளையாடிய விதம் பற்றி எனக்கு முழுமையான மகிழ்ச்சி இல்லை. இதை விட அதிகமாக என்னால் திறமையை வெளிப்படுத்த முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன். எனினும் இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.