இந்த மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகும் ஆப்கான் – பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆடும் 15 பேர் அடங்கிய பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>> பிரேவிஷின் அதிரடியுடன் இலங்கையை வீழ்த்திய தென்னாபிரிக்க A அணி
தற்போது இலங்கையில் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அதன் பின்னர் பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூவகை கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடுகின்றது.
அதன்படி குறித்த சுற்றுப் பயணத்தில் இரு அணிகளும் முதலாவதாக ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ள நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாமே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
முன்வரிசை துடுப்பாட்டவீரர் லிடன் தாஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பங்களாதேஷ் டெஸ்ட் குழாத்தில் அறிமுக வீரர்களான சஹாதத் ஹொசைன் மற்றும் முஷ்பிக் ஹஸன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 21 வயது நிரம்பிய சஹாதத் ஹொசைன் வலதுகை மத்திய வரிசை வீரர் என்பதோடு, முஷ்பிக் ஹஸன் வேகப்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு இளம் வீரர்களும் பங்களாதேஷின் அண்மைய உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தினை அடுத்தே தேசிய அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.
இதேநேரம் இந்த போட்டி மூலம் முதல் தடவையாக பங்களாதேஷினை டெஸ்ட் போட்டிகளில் வழிநடாத்தும் லிடன் தாஸ், பங்களாதேஷின் 12ஆவது டெஸ்ட் தலைவராக மாறும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.
பங்களாதேஷ் வழமையான டெஸ்ட் அணித் தலைவரான சகீப் அல் ஹசன் உபாதை காரணமாக ஆப்கான் – பங்களாதேஷ் இடையிலான போட்டியில் இருந்து விலகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>> ஒருநாள் தொடரினை சமநிலைப்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணி
அதேநேரம் வேகப்பந்துவீச்சாளரான தஸ்கின் அஹ்மட் ஆப்கானுக்கு எதிரான டெஸ்டில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றிருக்க, விக்கெட்காப்பு வீரரான சாகிர் ஹஸனும் அணிக்குள் மீண்டிருக்கின்றார்.
ஆப்கான் – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி முன்னர் குறிப்பிட்டதன் படி 14ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் டெஸ்ட் குழாம்
லிடன் தாஸ் (தலைவர்), தமிம் இக்பால், சாகிர் ஹஸன், நஜ்முல் ஹொசைன், மொமினுல் ஹக், முஸ்பிக் ரஹீம், மெஹிதி ஹஸன் மிராஸ், தய்ஜூல் இஸ்லாம், சையத் காலித் அஹ்மட், இபாதொத் ஹொசைன், தஸ்கின் அஹ்மட், சொரிபுல் இஸ்லாம், மஹ்மூட் ஹஸன், சஹாதத் ஹொசைன், முஷ்பிக் ஹஸன்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<