இலங்கை கிரிக்கெட் சபையினால் 3ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் மூன்றாவது அத்தியாயம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த ஆண்டு LPL தொடரில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி, கொழும்பு ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக சம்பியனாக மகுடம் சூடியது.
இதனிடையே, இம்முறை LPL தொடரில் இலங்கை T20 அணிக்காக விளையாடி வருகின்ற பெரும்பாலான வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறினாலும், முதலிரெண்டு பருவங்களைப் போல இந்த ஆண்டும் உள்ளூர் கழக மட்டத்தில் விளையாடி வருகின்ற பல இளம் வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இம்முறை போட்டித் தொடரில் ஒரேயொரு தடவை மாத்திரம் ஒரு அணியினால் 200 ஓட்டங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. தம்புள்ள ஓரா அணிக்கெதிரான 8ஆவது லீக் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 204 ஓட்டங்களைக் குவித்தது. அதேபோல, கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான 14ஆவது லீக் போட்டியில் தம்புள்ள ஓரா அணி 89 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதே குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் பதிவாகியது.
>> மூன்றாவது முறையாக தொடர்ந்தும் LPL சம்பியனான ஜப்னா கிங்ஸ்
அதுதவிர, ஒரு சதம், 28 அரைச் சதங்கள், 188 சிக்ஸர்கள், 592 பௌண்டரிகளும் இம்முறை போட்டித் தொடரில் பதிவாகின. இதில் ஜப்னா கிங்ஸ் அணி வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 15 சிக்ஸர்களை விளாசிய அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராகவும், 37 பௌண்டரிகளை அடித்த அதே அணியின் அவிஷ்க பெர்னாண்டோ, அதிக பௌண்டரிகளை அடித்த வீரராகவும் இடம்பிடித்தனர்.
அதுமாத்திரமின்றி, பல முக்கிய சாதனைகளும் ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளும் கடந்த மூன்று வாரங்களில் அரங்கேறின. ஆனாலும், முதலிரெண்டு பருவங்களைக் காட்டிலும் வீரர்கள் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை என்பது முக்கிய விடயமாகும்.
அதுமாத்திரமின்றி, இம்முறை LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் 10 வீரர்களில் ஏழு பேர் இலங்கை வீரர்கள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனவே, இம்முறை LPL தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் ஐந்து வீரர்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
அவிஷ்க பெர்னாண்டோ (ஜப்னா கிங்ஸ்)
LPL தொடரின் மூன்றாவது அத்தியாயத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக ஜப்னா கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ இடம்பிடித்தார்.
இம்முறை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேற்றம் கண்டு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த வீரர்களில் ஒருவராக அவிஷ்க பெர்னாண்டோ விளங்கினார். குறிப்பாக கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியிலும் அவர் அரைச் சதம் அடித்தார்.
இதன்மூலம் இம்முறை LPL தொடரில் தனது ஹெட்ரிக் அரைச் சதத்தைப் பெற்றுக் கொண்ட அவர் LPL வரலாற்றில் 7ஆவது அரைச் சதத்தைப் பெற்று அதிக அரைச் சதங்கள் குவித்த வீரராக இடம்பிடித்தார்.
2020 அங்குரார்ப்பண LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் நான்காவது இடத்தையும், கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்ட அவிஷ்க பெர்னாண்டோ, இம்முறை LPL தொடரில் சிறப்பாக விளையாடி ஜப்னா கிங்ஸ் அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
குறிப்பாக, காயம் காரணமாக சுமார் 10 மாதங்கள் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து தான் விளையாடிய முதலாவது தொடரிலேயே துடுப்பாட்டத்தில் கலக்கி அனைவரது பாராட்டையும் அவர் பெற்றுக் கொண்டார்.
இம்முறை LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற அவிஷ்க பெர்னாண்டோ 10 போட்டிகளில் விளையாடி 124.6 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 339 ஓட்டங்களைக் குவித்தார்.
சதீர சமரவிக்ரம (ஜப்னா கிங்ஸ்)
இம்முறை LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுப்பதில் முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் சதீர சமரவிக்ரமவிற்கும் முக்கிய இடம் உண்டு.
இம்முறை போட்டியில் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்ற சதீர, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இம்முறை LPL தொடரில் வெற்றிகரமான துடுப்பாட்ட வீரராக வலம்வந்த இவர் தான் விளையாடிய 9 போட்டிகளில் 294 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன், தம்புள்ள ஓரா அணிக்கெதிரான லீக் சுற்றில் 62 ஓட்டங்களை அதிகபட்சமாக அவர் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 131.25 என்ற சராசரியுடன் 33 பௌண்டரிகளையும், 2 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார்.
இம்முறை LPL தொடரின் ஆரம்பத்தில் ரஹ்மானுல்லா குர்பாஸுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணிக்குள் இடம்பித்து விளையாடிய சதீர சமரவிக்ரம, தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்தி தொடரின் நாயகனாக சாதனை படைத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த மஹேல ஜயவர்தன என அழைக்கப்பட்ட சதீரவுக்கு இலங்கை அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியவில்லை. இறுதியாக, 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்காக ஆடிய சதீர, கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிராக T20i தொடரிலும் விளையாடியிருந்தார்.
எவ்வாறாயினும், இலங்கை அணியில் நிரந்தர இடத்தைப் பிடிக்க கழக மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்த சதீர சமரவிக்ரம, இம்முறை LPL தொடரின் மூலம் தன்னுடைய கடின உழைப்பிற்கான வெகுமதியைப் பெற்றுக் கொண்டார்.
எனவே, இலங்கை அணி அடுத்த மாத முற்பகுதியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதுடன் இதில் ஒருநாள் மற்றும் T20i தொடர்களுக்கான இலங்கை குழாத்தில் சதீர சமரவிக்ரமவிற்கு பெரும்பாலும் இலங்கை அணியில் இடம்பிடித்து விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தினேஷ் சந்திமால் (கொழும்பு ஸ்டார்ஸ்)
இம்முறை LPL தொடரில் முதல் சுற்றில் மூன்று வெற்றிகளை மாத்திரம் ஈட்டி பிளே-ஓப் சுற்றில் கோல் கிளேடியேட்டர்ஸ், கண்டி பல்கொன்ஸ் அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான கொழும்பு ஸ்டார்ஸ் அணியில் துடுப்பாட்டத்தில் ஜொலித்த வீரர்களில் தினேஷ் சந்திமால் முதலிடம் வகிக்கிறார்.
ஒரு அரைச்சதமும், 3 தடவைகள் 30 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த இலங்கை அணியின் அனுபவ விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால், இம்முறை LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.
இம்முறை LPL தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்த தினேஷ் சந்திமால், 11 போட்டிளில் விளையாடி 126.9 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 287 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 26 பௌண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும்.
கடந்த ஆண்டு LPL தொடரிலும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலித்த முதன்மை வீரராக விளங்கிய சந்திமால், இந்த ஆண்டும் அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் பங்களிப்பு செய்தார். அதுமாத்திரமின்றி, கடந்த ஆண்டு அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 5ஆவது இடத்தைப் பிடித்த அவர், இம்முறை 2 இடங்கள் முன்னேறி 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
>> LPL தொடருடன் இணையும் வசீம் அக்ரம்
இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர்களில் ஒருவராக விளங்குகின்ற தினேஷ் சந்திமால், டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்தாலும், தொடர்ச்சியாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத காரணத்தால் ஒருநாள் மற்றும் T20i அணிகளில் அடிக்கடி தனது இடத்தை இழந்து வருகின்றார்.
எவ்வாறாயினும், இலங்கை அணியில் இளம் வீரர்கள் தொடர்ச்சியாக பிரகாசித்து வருவதால் ஒருநாள் மற்றும் T20i அணிகளில் தினேஷ் சந்திமாலுக்கு நிரந்தர இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
அண்ட்ரூ பிளச்சர் (கண்டி பல்கொன்ஸ்)
இம்முறை LPL தொடரில் முதல் சதமடித்தவரும், தனிநபர் அதிகபட்ச ஓட்டங்களைக் (102) குவித்தவருமான மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரருமான அண்ட்ரூ பிளச்சர், 266 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
இம்முறை LPL தொடரில் வனிந்து ஹஸரங்க தலைமையிலான கண்டி பல்கொன்ஸ் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடிய அவர், 131.6 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் ஒரு சதம், 11 சிக்ஸர்கள், 29 பௌண்டரிகளை அடித்துள்ளார். இதில் 3 தடவைகள் 30 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் T20i அணியில் அவ்வப்போது இடம்பிடித்து விளையாடி வருகின்ற 35 வயதான அண்ட்ரூ பிளச்சர், உலகளவில் பல்வேறு T20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கமிந்து மெண்டிஸ் (கண்டி பல்கொன்ஸ்)
வனிந்து ஹஸரங்க தலைமையிலான கண்டி பல்கொன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம்வந்த துடுப்பாட்ட வீரர் தான் கமிந்து மெண்டிஸ். இம்முறை LPL தொடரில் 260 ஓட்டங்களை எடுத்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
கண்டி அணிக்காக 10 போட்டிகளில் விளையாடிய அவர், 118.1 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் இரண்டு அரைச் சதங்கள், 3 சிக்ஸர்கள், 32 பௌண்டரிகளை அடித்துள்ளார்.
இலங்கையின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் தொடர்ச்சியாக பிரகாசித்து வருகின்ற கமிந்த மெண்டிஸ், இம்முறை LPL தொடரில் பிரகாசித்து தேர்வாளர்களின் கவனத்தைப் பெற்றுவிட்டார். எனவே எதிர்வரும் காலங்களில் அவருக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பாகும்.
இதேவேளை, இம்முறை LPL தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் 6 முதல் 10 ஆகிய இடங்கள் வரை முறையே குசல் மெண்டிஸ் (256 ஓட்டங்கள்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (249 ஓட்டங்கள்), ரவி பொப்பாரா (245 ஓட்டங்கள்), அஷேன் பண்டார (244 ஓட்டங்கள்), சரித் அசலங்க (242 ஓட்டங்கள்) ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<