IPL தொடரின் இரண்டாவது பாதியில் களமிறங்கும் மாற்று வீரர்கள்

Indian Premier League - 2021

615
IPL Twitter

கொரோனா வைரஸ் காரணமாக பாதியில் இடைநிறுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் IPL தொடர், மீண்டும் இன்று (செப்.19) முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடரில் இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில், 27 நாட்களில் அனைத்து போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட உள்ளன. இதில், இன்று (19) இரவு நடைபெறவுள்ள முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில், IPL தொடரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அனைத்து அணிகளும் கடந்த சில தினங்களாக மும்முரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.

IPL போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி

இதுஇவ்வாறிருக்க, இரண்டாவது பாதியில் முன்னணி வெளிநாட்டு வீரர்கள் T20 உலகக் கிண்ணத் தொடர், காயம், மனநலன் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட மாட்டார்கள் என விலகியதால் அனைத்து அணிகளும் குறித்த வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளன.

எனவே, 2021 IPL தொடரின் இரண்டாவது பாதியில் இருந்து விலகிய வீரர்களின் விபரங்களையும், அவர்களுக்குப் பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களின் விபரங்களையும் பற்றி இங்கு பார்ப்போம்.

பட் கம்மின்ஸ் (கொல்கத்தா)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் பட் கம்மின்ஸ் தனது சொந்த விடயங்களுக்காக IPL தொடரின் இரண்டாவது பாதியில் விளையாடமாட்டார் என்று தெரிவித்துள்ளார். இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகப் பெரும் இழப்பாக இருந்தாலும், அந்த அணி பட் கம்மின்ஸுக்குப் பதிலாக மாற்று வீரர் எவரையும் ஒப்பந்தம் செய்யவில்லை.

ரிலே மெரிடித் (பஞ்சாப்) – நெதன் எலிஸ்

அவுஸ்திரேலிய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் ரிலே மெரிடித் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் IPL தொடரின் இரண்டாம் பாதி ஆட்டங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு வீரரான நெதன் எலிஸை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜை ரிச்சர்ட்சன் (பஞ்சாப்) – ஆடில் ரஷீட்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவுஸ்திரேலிய வீரர் ஜை ரிச்சர்ட்சன் தனிப்பட்ட காரணங்களுக்காக IPL தொடரின் இரண்டாம் பதி ஆட்டங்களிலிருந்து விலகிக்கொண்டார். இதன்காரணமாக அவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ஆடில் ரஷீட் முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

டாவிட் மலான் (பஞ்சாப்) – எய்டன் மார்க்ரம்

இம்முறை IPL தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர் டாவிட் மலானும் தனிப்பட்ட காரணங்களுக்காக இரண்டாவது பாதி ஆட்டத்திலிருந்து திடீரென விலகி கொள்வதாக அறிவித்தார். எனவே டேவிட் மலானிற்குப் பதிலாக, இலங்கை அணியுடன் அண்மையில் நிறைவுக்கு வந்த
T20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் எய்டன் மார்க்ரமை, பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

2021 IPL முதல் பாதியில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள்

ஆன்ட்ரூ டை (ராஜஸ்தான்) – தப்ரைஸ் ஷம்ஸி

சொந்த காரணங்களுக்காக IPL தொடரின் இரண்டாவது பாதியிலிருந்து அவுஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டை விலகிக் கொண்டார். இதனையடுத்து உலகின் நம்பர் ஒன் T20 சுழல் பந்துவீச்சாளரான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தப்ரைஸ் ஷம்ஸியை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்தது.

ஜொப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்) – கிளென் பிலிப்ஸ்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் மிக முக்கிய வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக IPL தொடரின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இருந்து விலகிக்கொண்டார். இதனால் நியூசிலாந்து அணி வீரர் கிளென் பிலிப்ஸை அந்த அணி ஒப்பந்தம் செய்தது.

பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான்) – ஒஷானே தோமஸ்

சொந்த காரணங்களுக்காக கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு எடுத்துள்ள பென் ஸ்டோக்ஸ், இம்முறை IPL தொடரின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்மையில் நிறைவுக்குவந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் பிரகாசித்த வேகப் பந்துவீச்சாளர் ஒஷானே தோமஸை ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்தது.

ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான்) – எவின் லுவிஸ்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஜோஸ் பட்லரின் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதால் IPL தொடரின் இரண்டாவது பாதியிலிருந்து விலகியுள்ளார். எனவே அவருக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் எவின் லுவிஸ் அவ்வணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆடம் ஸம்பா (RCB) – வனிந்து ஹஸரங்க

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக இருப்பதாலும், உலகக் கிண்ணத்துக்கு அதிக கவனம் செலுத்தும் நோக்கில் IPL தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

எனவே, ஆடம் ஸம்பாவிற்கு பதிலாக இலங்கை அணியின் சுழல்பந்து சகலதுறை வனிந்து ஹஸரங்கவை RCB ஒப்பந்தம் செய்துள்ளது.

IPL தொடரில் சமீர, ஹஸரங்க விளையாடுவதற்கு SLC அனுமதி!

உலக T20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள வனிந்து ஹசரங்க இந்திய அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற T20 தொடரில் வியக்கத்தக்க வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டேனியல் சாம்ஸ் (RCB) – துஷ்மந்த சமீர

RCB அணிக்காக முதல் பாதியில் விளையாடிய அவுஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக IPL தொடரின் இரண்டாவது பாதி ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரவை RCB அணி ஒப்பந்தம் செய்தது.

இவரும் இந்திய அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற T20 தொடரில் வியக்கத்தக்க வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கேன் ரிச்சர்ட்சன் (RCB) – ஜோர்ஜ் கார்டன்

கேன் ரிச்சர்ட்சன் IPL தொடரின் முதல் பாதியில் RCB அணிக்காக விளையாடியிருந்தார். அவுஸ்திரேலியாவின் T20 உலகக் கிண்ணத் திட்டங்களில் கேன் ரிச்சர்ட்சனும் இருப்பதால், அவர் IPL போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவித்துள்ளார். இதனால் இங்கிலாந்தின் 24 வயதுடைய பந்துவீச்சு சகலதுறை வீரரான ஜோர்ஜ் கார்டனை RCB அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஃபின் ஆலன் (RCB) – டிம் டேவிட்

இந்த பருவத்தின் தொடக்கத்தில் நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் ஃபின் ஆலன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்தார். இருப்பினும், நியூஸிலாந்து அணிக்கு அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகள் இருப்பதால், அவர் IPL தொடரின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால் சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் துடுப்பாட்ட வீரரான டிம் டேவிட்டை அந்த அணி ஒப்பந்தம் செய்தது.

வொஷிங்டன் சுந்தர் (RCB) – ஆகாஷ் தீப்

RCB அணியின் சுழல்பந்து சகலதுறை வீரரான வொஷிங்டன் சுந்தர் கை விரல் காயம் காரணமாக IPL தொடரின் இரண்டாம் பாதி ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக பெங்காலைச் சேர்ந்த 24 வயதான மிதவேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் RCB அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2021 IPL இன் முதல் பாதியில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்கள்

ஜொனி பெயார்ஸ்டோ (சன்ரைசர்ஸ்) – ஷெர்பேன் ரூதர்போர்ட்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக விளையாடி வந்த இங்கிலாந்து வீரர் ஜொனி பெயார்ஸ்டோ, தனிப்பட்ட காரணங்களுக்காக IPL தொடரின் இரண்டாம் பாதி ஆட்டத்திலிருந்து விலகிக்கொண்டார்.

எனவே அவருக்குப் பதிலாக, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷெர்பேன் ருத்தர்போர்ட்டை ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

அண்மையில் நிறைவுக்குவந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் செயிண்ட் கிட்ஸ் எண்ட் நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடியிருந்ததுடன், 7 போட்டிகளில் 2 அரைச் சதங்களுடன் 202 ஓட்டங்களை எடுத்தார்.

கிறிஸ் வோக்ஸ் (டெல்லி) – பென் ட்வார்ஷுய்ஸ்

சொந்த காரணங்களுக்காகவும் T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தயாராகும் வகையிலும் IPL தொடரின் இரண்டாம் பாதியிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக அவுஸ்திரேலிய மிதவேகப் பந்துவீச்சாளர் பென் ட்வார்ஷுய்ஸை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

மோஷின் கான் (மும்பை) – ரூஷ் கலாரியா

இம்முறை IPL தொடரில் இடம்பெற்றிருந்த மோஷின் கான் உபாதைக்குள்ளானார். இதனையடுத்து மும்பை அணியுடன் வலைப்பயிற்சியாளராக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றிருந்த 28 வயதான வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரரான ரூஷ் கலாரியாவை அந்த அணி மாற்று வீரராக அறிவித்துள்ளது.

எம்.சித்தார்த் (டெல்லி) – குல்வந்த் கெஜ்ரோலியா

டெல்லி கெபிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மணிமாறன் சித்தார்த்துக்கு டுபாயில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக IPL போட்டியிலிருந்து விலகியுள்ளதாக டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் அவருக்குப் பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியாவை டெல்லி அணி தேர்வு செய்துள்ளது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…