மெஸ்ஸியின் ஹெட்ரிக் கோல் மூலம் நம்பிக்கையோடு உலகக் கிண்ணம் செல்லும் ஆர்ஜன்டீனா

436
Lionel Messi
Image Courtesy - AFP

பிஃபா உலகக் கிண்ண போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பயிற்சிப் போட்டியில் ஆடிய ஆர்ஜன்டீனா, மெஸ்ஸியின் ஹெட்ரிக் கோல் மூலம் வெற்றி பெற்றது. மேலும் போட்டியை நடத்தும் ரஷ்யா மற்றும் ஆஸ்திரிய அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டியில் ரஷ்யா தோல்வியை சந்தித்தது.

உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவுக்கு பயணிப்பதற்கு முன்னர் தலைநகர் ப்யூனோஸ் ஏர்ஸில் (Buenos Aires) ஹெய்டி அணியை எதிர்கொண்ட ஆர்ஜென்டீன அணிக்கு மெஸ்ஸி நம்பிக்கை கொடுத்தார். பார்சிலோனா கழக நட்சத்திரமான மெஸ்ஸி 17 ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் புகுத்துவதை ஆரம்பித்து 58, 66 ஆவது நிமிடங்களில் மேலும் 2 கோல்களைப் பெற்றார்.

ஐந்தாவது தடவையாகவும் ஐரோப்பிய தங்கப்பாதணியை தனதாக்கிய மெஸ்ஸி

அனைத்து ஐரோப்பிய லீக்குகளிலும் அதிக கோல்…

மன்செஸ்டர் சிட்டியைச் சேர்ந்த செர்ஜியோ அகுவேரோ 69 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீன அணிக்கு மற்றொரு கோலை புகுத்தினார். இந்த வெற்றியை அடுத்து, ”நாம் ரஷ்யாவுக்கு நம்பிக்கையோடு செல்கிறோம்” என்று மெஸ்ஸி குறிப்பிட்டார்.

இந்த முடிவு மூலம் எமது ரசிகர்களுக்கு விடைகொடுக்க முடிந்துள்ளது என்று கூறிய மெஸ்ஸி, ”தகுதிகாண் போட்டிகளில் நெருக்கடியை எதிர்நோக்கியபோதும் நாம் சிறந்த முறையில் பயிற்சி பெற்றிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.   

ஆர்ஜன்டீனா உலகக் கிண்ண குழுநிலை போட்டிகளில் ஜுன் மாதம் 16 ஆம் திகதி ஐஸ்லாந்து அணியையும், ஜுன் மாதம் 21 ஆம் திகதி குரேசியா அணியையும் மற்றும் ஜுன் 26 இல் நைஜீரிய அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டிகளுக்கு தயார்பெற ஆர்ஜன்டீன அணி பார்சிலோனாவுக்கு பயணிக்கவுள்ளது.   

இதேவேளை உலகக் கிண்ணத்தை நடத்தும் ரஷ்ய அணி புதன்கிழமை (30) தனது முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரியாவிடம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இம்முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத ஆஸ்திரியா தனது சொந்த நாட்டில் நடந்த இந்த போட்டியில் 28 ஆவது நிமிடத்தில் அலசென்ட்ரோ ஸ்கோப் போட்ட கோல் மூலம் வெற்றியை உறுதி செய்து கொண்டது.

உலகக் கிண்ணத்திற்கான ரொனால்டோவின் போர்த்துக்கல் குழாம் அறிவிப்பு

உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு…

உலகக் கிண்ணத்தை நடத்தும் ரஷ்யா தொடர்ந்து சோபிக்கத் தவறி வருகிறது. கடந்த மார்ச் மாதம் அந்த அணி பிரேசில் மற்றும் பிரான்ஸ் அணிகளுடனான போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. ரஷ்யா உலகக் கிண்ணத்திற்கு செல்லும் முன் தனது கடைசி பயிற்சி போட்டியில் வரும் ஜுன் மாதம்  5 ஆம் திகதி துருக்கியை எதிர்கொள்ளவுள்ளது.

ரஷ்யா உலகக் கிண்ண ஆரம்ப போட்டியில் ஜுன் மாதம் 14 ஆம் திகதி சவூதி அரேபியாவை எதிர்கொள்ளவுள்ளது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<