ஆர்ஜன்டினா கால்பந்தாட்ட அணியின் தலைவரும், உலகப் புகழ்பெற்ற நட்சத்திர கால்பந்தாட்ட வீரருமான லியொனல் மெஸ்ஸி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கால்பந்தாட்டக் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.
நேற்று முன்தினம் நடந்த லா லீகா தொடரின் லீக் ஆட்டத்தில் வெலென்சியா மற்றும் பார்சிலோனா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. முடிவு ஏமாற்றம் அளித்தாலும், தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டம் மெஸ்ஸிக்கு தனி அடையாளத்தைக் கொடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி 63ஆவது நிமிடத்தில் போட்ட கோலின் மூலம் சர்வதேச மற்றும் கழகப் போட்டிகளில் 500 கோல்களைப் போட்ட வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஜூன் மாதம் தனது 29 வயதை எட்டும் மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக 450 கோல்களையும், ஆர்ஜன்டினா அணிக்காக 50 கோல்களையும் போட்டிருக்கிறார். அவர் அடித்த 500 கோல்களில் 406 கோல்கள் இடது காலால் போட்டப்பட்ட கோல்களாகும். மிகுதி 94 கோல்களில் 71 கோல்கள் வலது காலாலும் 21 கோல்கள் தலையால் முட்டித் தள்ளியும் 2 கோல்களை இதர வகையிலும் அடித்துள்ளார்.
அவர் அடித்த 500 கோல்களை அடித்த முறையை அவதானித்தால் அவற்றில் 25 கோல்கள் நேரடி ப்ரீ கிக் (Direct Free Kick) மூலமும், 64 கோல்களை பெனால்டி மூலமும் 411 கோல்கள் நேரடி கோல்களாக (Open Play) போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.