பார்சிலோனா அணியின் தலைவரும் அவ்வணியின் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது .
34 வயதான மெஸ்ஸிக்கு பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி நிறைவு அடைந்ததை அடுத்து மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு வெளியேறுவாரென பலரால் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பார்சிலோனாவின் புதிய நிர்வாக தலைவரால் மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு செல்லமாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே வியாழக்கிழமை இரவு (இலங்கை நேரம் ) மெஸ்ஸி பார்சிலோனாவை விட்டு செல்லும் செய்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் கால்பந்து முதல் போட்டியில் பிரேசில், பிரான்ஸ் இலகு வெற்றி
கடந்த 2000ஆம் ஆண்டு 13 வயது சிறுவனாக பார்சிலோனா கழகத்தில் இணைந்ததிலிருந்து 21 வருடமாக தொடர்ச்சியாக பார்சிலோனாவுக்காக ஆடி வரும் மெஸ்ஸி, இக்கழகத்திற்காக 778 போட்டிகளில் விளையாடி 672 கோல்களையும் 305 கோலுக்கான பந்துப்பரிமாற்றங்களையும் வழங்கி இருக்கிறார். அத்துடன் பார்சிலோனாவுடன் இருந்த காலத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி ஒர் (Ballon d’Or) விருதையும் 6 தடவைகள் கைப்பற்றி இருக்கிறார்.
2003 ஆம் ஆண்டு பார்சிலோனா அணியுடன் தனது 16ஆவது வயதில் முதலாவது தொழில்முறை கால்பந்தாட்ட பயணத்தை ஆரம்பித்ததிலிருந்து, அவ்வணியுடன் 10 லாலிக கிண்ணங்களையும், 4 சம்பியன்ஸ் லீக்குகளையும், 7 கோப டெல் ரேய் கிண்ணங்களையும் வென்று சாதனை படைத்திருக்கிறார் மெஸ்ஸி.
கடந்த ஜூலை முதலாம் திகதி, பார்சிலோனா அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்த காலம் முடிவடைந்ததையடுத்து, மெஸ்ஸி இலவச வீரராக மாற்றப்பட்டார். இந்த நிலையின் கடந்த ஜூலை 15 ஆம் திகதி பார்சிலோனா அணியின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு தனது சம்பளத்தை அரைவாசியாக குறைத்து 5 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இணக்கம் தெரிவித்தார்.
இனவாத கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ்!
எனினும் லாலிகாவின் சட்ட விதிகளுக்கு அமைவாக பார்சிலோனா கழகத்தினால் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய முடியாத காரணத்தினால், மெஸ்ஸியை பார்சிலோனா கழகத்திலிருந்து இழக்க நேரிட்டுள்ளது.
இந்த நிலமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்சிலோனா நிர்வாகம்
“இந்த நிலைமையின் காரணமாக மெஸ்ஸியால் பார்சிலோனாவில் இருக்க முடியாமல் போய் உள்ளது. இரு தரப்பினதும் விருப்பம் இதன் மூலம் நிறைவடையாமல் சென்றதை அடுத்து நாமும், மெஸ்ஸியும் கவலை அடைகிறோம். மெஸ்ஸி, பார்சிலோனாவுக்கு செய்த சேவைகளுக்காக நாம் அவருக்கு நன்றிகளை செலுத்துவதோடு, அவரின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் ” என தெரிவித்தது.
மெஸ்ஸி தற்போது பார்சிலோனாவை விட்டு சென்றுள்ளதையடுத்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகமும், மன்செஸ்டர் சிட்டி கழகமும் அவரை வாங்குவதற்கு முந்தியடிக்க கூடிய வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன. இதில் மெஸ்ஸியின் நண்பரான நெய்மர், பாரிஸ் கழகத்துடனும், மெஸ்ஸிக்கு பிடித்த முகாமையாளர்களில் ஒருவரான பெப் குவார்டியோலா சிட்டி கழகத்துடனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<