உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி. ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த இவரது ஆட்டம் கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் முத்திரை பதிக்கும் வகையில் உள்ளது.
பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்த மெஸ்ஸி இன்று நடந்த வெனிசூலாவுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடினார். 60ஆவது நிமிடத்தில் அவர் கோல் அடித்தார்.
இந்த கோல் மூலம் அதிக கோல்கள் அடித்து இருந்த ஆர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா சாதனையை சமன் செய்தார்.
பாடிஸ்டுடா 1991ஆம் ஆண்டு முதல் 2002 வரை 78 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 54 கோல்கள் அடித்துள்ளார். ஆர்ஜென்டினா நாட்டு அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரராக அவர் திகழ்ந்தார். இவரின் சாதனையை இன்று மெஸ்ஸி சமன் செய்தார். மெஸ்ஸி 2005ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 111 ஆட்டத்தில் ஆடி 54 கோல்கள் அடித்துள்ளார்.
இனிவரும் ஆட்டங்களில் கோல் அடிப்பதன் மூலம் அவர் அதிக கோல்கள் அடித்த ஆர்ஜென்டினா வீரர் என்ற சாதனையைப் பெறுவார்.