கால்பந்தில் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ள ஆர்ஜென்டீன வீரர் லியனல் மெஸ்ஸி, தனது தீவிர ரசிகரான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 6 வயது சிறுவன் முர்தஸா அஹமதியை கட்டாரில் வைத்து சந்தித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டு சிறுவன் முர்தாஸா அஹமதி, தான் அதிகம் விரும்பும் கால்பந்து வீரரான மெஸ்ஸியின் டி சேர்ட் (ஜேர்சி) இலக்கமான 10ஆம் இலக்கத்தை ஒரு பொலித்தீன் பையில் எழுதி, அதனை டி-சேர்ட் போன்று அணிந்து எடுத்த புகைப்படம் அண்மைக்காலமாக சர்வதேச அளவில் ஊடகங்களில் அதிகமாகப் பரவி வந்தன.
மெஸ்ஸியின் தீவிர ரசிகரான இவர், டி-சேர்ட் வாங்குவதற்கு வசதியற்ற காரணத்தினாலேயே இவ்வாறு பொலித்தீன் பையில் எழுதி, அதனை அணிந்திருந்த விடயம் அனைவரையும் நெகிழ வைத்த சம்பவமாக இருந்தது.
அதன் பின்னர், தன்மீது பிரியம் கொண்ட முர்தாஸா அஹமதி பற்றி அறிந்த மெஸ்ஸி, 10ஆம் இலக்கம் இடப்பட்ட தனது டி-சேர்ட் ஒன்றினை தனது கையொப்பமிட்டு, அவனுக்கு அனுப்பி வைத்தார்.
எனினும், தான் அதிகம் விரும்பும் மெஸ்ஸியை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே அந்த சிறுவனின் எதிர்பார்ப்பாகவும், கனவாகவும் இருந்தது. அதற்கான வாய்ப்புக்காகவும் அவன் காத்திருந்தான்.
இவ்வாறான ஒரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மெஸ்ஸி விளையாடும் பிரபல பார்சிலோனா கழகம் கட்டாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அல் அஹ்லி கழகத்துடனான நட்பு ரீதியான கால்பந்து போட்டியொன்றில் கலந்துகொண்டது. இதன்போது மெஸ்ஸியை சந்திப்பதற்காக முர்தாஸா அஹமதியும் போட்டி இடம்பெறும் அரங்கிற்கு சென்றிருந்தார்.
குறித்த போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் அஹமதியை சந்தித்த மெஸ்ஸி, அவரை தன்னோடு மைதானத்திற்கு அழைத்துச் சென்று, போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளின்போதும் அவனை தன்னோடு வைத்துக்கொண்டார்.
பின்னர் அணியின் புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் அஹமதி மெஸ்ஸியின் அருகில் இருந்தமை அந்த அரங்கில் இருந்த அனைத்து ரசிகர்களின் மனதையும் நெகிழச் செய்தது.
அதனைத் தொடர்ந்து குறித்த போட்டியை ஆரம்பிப்பதற்காக பந்தை மைதானத்தின் நடுவில் கொண்டுபோய் வைக்கும் பொறுப்பும் அஹமதிக்கே வழங்கப்பட்டது.
யுத்தத்தின் வடுக்கள் நிறைந்த ஆப்கான் சிறுவன் ஒருவனின் இவ்வாறான கனவும், அதனை பிரபல கால்பந்து வீரர் ஒருவர் நிறைவேற்றிய ஆச்சரியமான, அதேபோன்று கால்பந்து ரசிகர்களே ஆனந்தப்படக்கூடிய இந்த நிகழ்வு தற்பொழுது சர்வதேச அளவில் அதிகம் கதைக்கப்படுகின்ற ஒரு விடயமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அஹமதி, மெஸ்ஸியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.