கிரிக்கெட் உலகிற்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்றுக் கொடுத்ததில் பாகிஸ்தான் அணிக்கு அதிக கௌரவம் உண்டு எனலாம். அந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளராக 28 வயதுடைய மொஹமட் அப்பாஸ் இடம்பிடித்துள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நிறைவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 373 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொரை 1-0 எனக் கைப்பற்றியது.
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இருந்து விடைபெற்ற மிஸ்பா உல் ஹக்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட்….
கடந்த 2014ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 356 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. எனவே, 4 வருடங்களுக்குப் பிறகு, அதே மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் மிகப்பெரிய (373 ஓட்டங்கள் வித்தியாசத்தில்) வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது பாகிஸ்தான். அதுமட்டுமல்ல, டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி பெற்றுக்கொண்ட முதல் வெற்றி இதுவாகும்.
இதுதவிர, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்ற மொஹமட் அப்பாஸ், அவுஸ்ரேலிய அணிக்கெதிராக 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆகக்குறைந்த 10.58 என்ற சராசரியில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தி புதிய சாதனை நிகழ்த்தினார்.
அத்துடன், இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுக்களையும், இரண்டாவது டெஸ்ட்டில் 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய அப்பாஸ், ஐ.சி.சியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி 829 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
டெஸ்ட் தரவரிசையில் முதற்தடவையாக மிகப்பெரிய ஏற்றம் கண்ட அவர், 800 புள்ளிகளை கடந்த 10ஆவது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.
ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகள்
அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, அப்பாஸின் அபார பந்துவீச்சில் தடுமாறி 148 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் உஸ்மான் கவாஜா (3), பீட்டர் சிடில் (4), ஷோன் மார்ஷ் (3), ட்ராவிஸ் ஹெட் (14), மிட்செல் ஸ்டார்க் (34) ஆகியோரின் விக்கெட்டுக்களை மொஹமட் அப்பாஸ் கைப்பற்றியிருந்தார்.
நியுஸிலாந்திற்கு எதிராக 2 ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்
விறுவிறுப்பாக நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியுஸிலாந்து ….
தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி பக்கர் ஜமான் (66), பாபர் அசாம் (99), சர்ப்ராஸ் அஹமட் (81) ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 409 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இதனையடுத்து 538 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியை மீண்டும் மொஹமட் அப்பாஸ் பதம்பார்த்தார். அப்பாஸின் அபார பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரோன் பின்ச் (31), டிராவிஸ் ஹெட் (36), மிட்செல் மார்ஷ் (5), லபுஷாங்கனே (43), டிம் பெயின் (0) ஆகியோர் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணி 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
மின்னல் வேக அப்பாஸ்
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் போட்டிகளுக்கு தற்போது வரவேற்பு குறைந்து வருகின்றதை காணமுடிகின்றது. ஆனாலும் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய போன்ற நாடுகளில் நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகளுக்கு எப்பொழுதும் வரவேற்பு அதிகமாக இருப்பதனை எம்மால் அவதானிக்கலாம்.
சமீபத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் உலகமே உற்று அவதானித்தது. காரணம், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகிய அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உப தலைவர் டேவிட் வோர்னர் இல்லாமல் முதற்தடவையாக அந்த அணி டெஸ்ட் தொடரில் களமிறங்கியது. அதேபோல, ஜிம்பாப்வே முத்தரப்பு டி-20 தொடர், ஆசியக் கிண்ண தொடர் என்பவற்றில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இந்த தொடரில் பங்கேற்றிருந்தது.
அதிலும் குறிப்பாக, மொஹமட் அப்பாஸ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 18 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அபுதாபி டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள் உட்பட, இந்தத் தொடரில் மொத்தமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, முழு கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.
அவர், கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த ஒரு வருடங்களில் வெறும் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 15.64 சராசரியுடன் 59 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். அத்துடன், பந்துவீச்சில் குறைந்த சராசரியைக் தக்கவைத்துக் கொண்ட முதல் 5 பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் அவர் இடம்பிடித்தார். எனவே, இவர் மிக விரைவில் டெஸ்ட் அரங்கில் முதலிடத்தைப் பிடிப்பார் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாகும்.
அதிலும் குறிப்பாக, கடந்த 100 ஆண்டுகளில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிறந்த பந்துவீச்சு சராசரியைப் பதிவுசெய்த மொஹமட் அப்பாஸுக்கு இன்று பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஏன் அபுதாபி டெஸ்ட் போட்டி முடிவதற்குள்ளேயே, டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 பந்துவீச்சாளராக அப்பாஸை மிக விரைவில் காணலாம் என தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டுவிட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டார்.
அதை ஆமோதிக்கும் விதத்தில் இருந்தது ஏபி. டி. வில்லியர்ஸின் டுவீட். ஸ்டெயின், டி வில்லியர்ஸ் மட்டுமல்ல, இந்தியாவின் மொஹமட் கைப், இங்கிலாந்தின் மைக்கல் வோகன் என முன்னாள் வீரர்கள் உட்பட பல வீரர்கள் அப்பாஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
வெல்டிங் ஊழியராக இருந்த அப்பாஸ்
பாகிஸ்தானில் சியல்கோட் லெதர் தொழிற்சாலையில் 12 ஆயிரம் ரூபா மாதாந்த சம்பளத்துக்கு வெல்டிங் பணி செய்து வந்த அப்பாஸ், 2009ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். 2017ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானாலும், இங்கிலாந்து சுற்றுப்பயணம்தான் அவரை இந்த உலகத்துக்கு யார் என்று வெளிக்காட்டியது.
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 23 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அப்பாஸ், இரண்டாவது இன்னிங்ஸில் அலெஸ்டர் குக், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ஸ்டூவார்ட் பிரோட் என முன்னணி வீரர்களை வீழ்த்தினார்.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது. அந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மொஹமட் அப்பாஸ் தனதாக்கியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். பொதுவாக, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆடுகளங்களில் ஓட்டங்களைக் குவிக்காத வீரர்களை சிறந்த துடுப்பாட்டக்காரர்கள் என சொல்வது கிடையாது. பந்துவீச்சாளர்களுக்கும் இது பொருந்தும். அதனால்தான், இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்துக்கு தண்ணி காட்டிய அப்பாஸ், முதற்தடவையாக இங்கிலாந்தின் பிராந்திய கழகமாக லெஷ்டெஸ்ஷெயார் அணிக்காக விளையாடியிருந்தார். அத்துடன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள கவுண்டி சம்பியன்ஷிப் 50 ஓவர்கள் போட்டிகளிலும் அவர் அந்த அணிக்காக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத்துக்காக இந்திய வீரர்களினால் விடுக்கப்பட்ட விசித்திர கோரிக்கை
உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் போது வாழைப்பழம், ரயில் பயணம்…
இதுஇவ்வாறிருக்க, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதான வீரர்களுக்கான ஒப்பந்தத்திலும் அவர் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
தனது இந்தக் குறுகிய கால வெற்றிப் பயணம் குறித்து மொஹமட் அப்பாஸ், தி டெலிகிராப் நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில், கிரிக்கெட்டில் விளையாட முன்னர் எனது வாழ்க்கை மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால், அந்த போராட்டங்கள் தான் இன்று என்னை கிரிக்கெட்டில் முன்னணி வீரராக மாற்ற உதவியது.
ஏனெனில் நான் கிரிக்கெட் விளையாட வந்தபோது பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது குறித்து நான் முதிர்ச்சியடைந்தவனாக இருந்தேன். லெதர் தொழிற்சாலையில் வெல்டிங் தொழிலாளியாக இருந்த பின்னர், நான் ஒரு நீதிமன்றத்தில் வழக்குகளுக்கான ஆவணங்களை பதிவேற்றுகின்ற ஒரு சாதாரண ஊழியராக பணிபுரிந்தேன்.
அதேநேரம், நான் நீதிமன்றத்தில் பணிபுரிந்தபோது, 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டேன். வேலை செய்வதா அல்லது கிரிக்கெட்டைத் தேர்வு செய்வதா என அவர்கள் என்னைக் கேட்டார்கள். எனது வாழ்க்கையில் அந்த நாள் இரவை மறக்க மாட்டேன். உண்மையில் எனது வழக்கறிஞர் நண்பர் ஒருவர் இரண்டையும் செய்யும் படி கேட்டுக் கொண்டார். இது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாகும்.
அதேபோல, 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் தொடருக்காக வேண்டி எனக்கும் செயலாளர் ஒருவரின் மகனுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இதற்கான முடிவு நாணயச் சுழற்சியின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் அது எனக்கு சாதகமாக அமைந்ததுடன், அந்தப் போட்டியில் எனக்கு ஐந்து விக்கெட்டுகள் கிடைத்தன. அதற்குப் பிறகு நான் கிரிக்கெட் அகடமியில் இணைந்துகொண்டு எனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தேன் என தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பன்ஞாப் மாநிலம் சியல்கொட்டின் ஜாதகே என்ற சிறிய கிராமத்தில் பிறந்த அப்பாஸ், அப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்காக விளையாடிய 8ஆவது வீரராகவும், முதலாவது வேகப்பந்து வீச்சாளராகவும் இடம்பிடித்தார். பாகிஸ்தானின் மற்றுமொரு நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் ஆசிப்பின் சிறுபராய நண்பரும் ஆவார்.
இதுதொடர்பில் அப்பாஸ் கருத்து வெளியடுகையில், பாகிஸ்தானின் இரண்டாம் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆசிப்புடன் நான் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக விளையாடினேன். எவ்வாறு பந்துவீசுவது, அதில் உள்ள நுட்பங்கள் என்ன என்பது குறித்து நாங்கள் நிறைய விடயங்கள் பற்றி விவாதிப்போம், உண்மையில் அவரிடம் இருந்து நிறைய விடயங்களை நான் கற்றுக்கொண்டேன். அதுமாத்திரமின்றி, க்ளென் மெக்ராத், ஷோன் பொல்லக், ஜேம்ஸ் அண்டர்சன் ஆகியோரையும் நான் மிகவும் நேசிப்பதுடன், அவர்களது பந்துவீச்சுப் பாணிகளை பின்பற்றுவேன் என்றார்.
எனது பலம் எனக்குத் தெரியும், அதனால் தான் விக்கெட்டுக்கு விக்கெட் பந்துவீசி விக்கெட்டுக்களை எடுத்து வருகிறேன். அதேபோல, துடுப்பாட்ட வீரர்களின் பலவீனத்தை அறிந்து கொள்ள ஆரம்பத்தில் இலகுவான முறையில் பந்துகளை வீசி பின்னர் விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவதற்கான உக்திகளை கையாளுவதாக அவர் தெரிவித்தார்.
இதுஇவ்வாறிருக்க, மொஹமட் அப்பாஸின் டெஸ்ட் பிரவேசமும் பல முரண்பாடுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இடம்பெற்றன. பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் மிஸ்பா–உல்–ஹக், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு மொஹட் அப்பாஸை டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ள விரும்பினார். ஆனால், அவரது வேண்டுகோள் தேர்வாளர்களால் புறக்கணிக்கப்பட்டன.
கடந்த 2016-17இல், நியூசிலாந்திற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி படுதோல்வியைத் தழுவியது. இதன்பிறகு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரில்தான் அப்பாஸை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சச்சினின் உலக சாதனைக்கு மிரட்டல் விடுக்கும் கோஹ்லியின் பத்தாயிரம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை 10,000 ஓட்டங்களை பெற விராட்….
ஜமைக்காவில் நடைபெற்ற தனது அறிமுக டெஸ்ட் போட்டியின் இரண்டாவது பந்தில் முதல் விக்கெட்டைக் கைப்பற்றி தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த அப்பாஸ், 10 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார்.
நான் திடீரென்று அணிக்கு வரவில்லை. கடந்த ஒன்பது வருடங்களாக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். அதனால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நன்கு தெரியும். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய நாடுகளில் மந்த கதியிலான ஆடுகளங்களில் தான் பந்துவீசினேன். ஆனால், இங்கிலாந்தில் வானிலை மற்றும் ஆடுகளங்களின் தன்மைகளுக்கு ஏற்பதான் பந்துவீச வேண்டும். ஆனால், எனது பந்துவீச்சில் காணப்பட்ட குறைபாடுகளை வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் அசார் மஹ்மூத்திடம் இருந்து நிவர்த்தி செய்துகொண்டேன் என தெரிவித்தார்.
வசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சொயிப் அக்தர், மொஹமட் ஆமிர் என குறிப்பிட்ட இடைவெளியில் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை கிரிக்கெட் உலகுக்கு அறிமுகப்படுத்திய பாகிஸ்தான் அணியில் மற்றுமொரு வேகப்புயலான மொஹமட் அப்பாஸும் இடம்பிடித்துள்ளார்.
எவ்வாரிருப்பினும், உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என பெயரெடுப்பது சுலபம். அதைத் தக்கவைப்பது கடினம். இதை அப்பாஸ் தக்கவைத்துக் கொள்வாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<