6ஆவது வழக்கறிஞர்கள் உலகக் கிண்ணப் போட்டியில் 30 ஓவர்களில் 206 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி 6 ஓட்டங்களால் இலக்கை எட்ட முடியாததால் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது. இந்த இறுதிப் போட்டி SSC மைதானத்தில் இன்று (20) முடிவடைந்தது.
அரையிறுதிப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள், முறையே பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளிடம் வீழ்த்தப்பட்டன. எனினும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளில் வழக்கறிஞர்கள் அல்லாத முதல்தர கிரிக்கெட் வீரர்கள் இணைக்கப்பட்டிருந்ததால் அந்த அணிகள் ஏற்பாட்டு குழுவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
33 ஓவர்கள் கொண்ட ஒரு போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 224 என்ற வலுவான ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய அணிக்காக இடதுகை துடுப்பாட்ட வீரர் ஜொன் வெலயிங் அபாரமாக துடுப்பாடி 82 பந்துகளில் 105 ஓட்டங்களைப் பெற்றார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். சொந்த மண்ணில் ஆடும் இலங்கை வழக்கறிஞர்கள் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர்களான யொஹான் ஜினசேன மற்றும் அசேல படபதி இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
225 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் முதல் ஓவரிலேயே ஓட்டங்களை துரத்திச் செல்ல ஆரம்பித்தனர். இலங்கை அணி 26.5 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது. போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது டக்வத்-லுவிஸ் (D/L) முறையில் இலங்கை அணிக்கு 30 ஓவர்களுக்கு 203 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை வழக்கறிஞர் அணி வெற்றி இலக்கை மிக நெருங்கிய போதும் வேதனை தரும் வகையில் வெறும் 6 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. இறுதியில் 30 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.
இலங்கை துடுப்பாட்டத்தை சிதறடித்த பிரதான பந்துவீச்சாளராக நிக் லெய்டன் இருந்தார். அவர் முக்கிய நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேவேளை வலதுகை துடுப்பாட்ட வீரர் துசித ரணதுங்க வேகமாக 42 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றார். எனினும் அவுஸ்திரேலியா வழக்கறிஞர் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால் அவரது முயற்சி வீணானது.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலியா – 224/8 (33) – ஜொன் வெலயிங் 105, செப் ரெயிட் 31, கரத் மக்கஸ்கர் 24, அசேல படபதி 3/31, யொஹான் ஜினசேன 3/53
இலங்கை – 196/9 (30) – துசித ரணதுங்க 52, எர்ஷான் அத்தனாயக்க 29, அசேல படபதி 26, துசித் பல்லேவத்த 23*, நிக் லெய்டன் 4/31.
போட்டி முடிவு- அவுஸ்திரேலியா 6 வழக்கறிஞர் அணி ஓட்டங்களால் வெற்றி (D/L முறை)