நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக டொம் லேதம்

400

பங்களாதேஷ் அணியுடன் 2022ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணியின் தலைவராக டொம் லேதம் செயற்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மீண்டும் நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர்

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் நிரந்தர தலைவரான கேன் வில்லியம்சனிற்கு முழங்கை உபாதை ஏற்பட்டதனை தொடர்ந்து அவர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகியிருக்கின்றார். இதன் காரணமாகவே டொம் லேதமிற்கு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக செயற்பட்டிருந்த டெவோன் கொன்வேய் T20 உலகக் கிண்ணத்தில் தனக்கு ஏற்பட்ட உபாதையில் இருந்து மீண்டிருப்பதோடு, அவரும் நியூசிலாந்தின் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.

இதேவேளை இந்திய அணிக்கு எதிரான தொடரில் ஓய்வில் இருந்த வேகப்பந்துவீச்சாளர்களான மேட் ஹென்ரி மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் இணைக்கப்பட்டிருப்பதோடு, இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடி சாதனைப் பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்த சுழல்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேலிற்கு பங்களாதேஷ் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை வீரர்களுக்கான உடற்தகுதி தரநிலைகள் அதிகரிப்பு

பங்களாதேஷ் – நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்குள் உள்வருவதோடு, இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முன்னர் குறிப்பிட்டதன்படி ஜனவரி 01ஆம் பேய் ஓவல் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி மாதம் 09ஆம் திகதி ஹேக்லி ஓவல் மைதானத்திலும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து டெஸ்ட் அணி – டொம் லேதம் (அணித்தலைவர்), டொம் ப்லன்டல், டெவோன் கொன்வேய், மேட் ஹேன்ரி, கைல் ஜேமிசன், டேரைல் மிச்சல், ஹென்ரி நிக்கோல்ஸ், ரச்சின் ரவிச்சந்திரன், டிம் சௌத்தி, ரொஸ் டெய்லர், நெயில் வெக்னர், வில் யங்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<