T20i தரவரிசையில் வனிந்துவின் பின்னர் தீக்ஷன

308

T20i பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையில் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன முதல் முறையாக முதல் பத்து  இடங்களுக்குள் முன்னேறியிருக்கின்றார்.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த ஆஸி. அணிக்கு எதிரான T20i தொடரில் அபாரம் காட்டிய மஹீஷ் தீக்ஷன T20i பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தற்போது 16 இடங்கள் முன்னேறி, 647 புள்ளிகளுடன் 8ஆம் இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

WATCH – அணியின் ஓட்டக்குவிப்புக்கு பெதும், குணதிலக்கவே காரணம்” – மெண்டிஸ்

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்க புதிய T20i பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் மஹீஷ் தீக்ஷனவிற்கு முன்னர் 668 புள்ளிகளுடன் 7ஆம் இடத்தில் காணப்படுகின்றார். இன்னும் வனிந்து ஹஸரங்க ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் (546 புள்ளிகள், 29ஆவது இடம்) முன்னேற்றம் காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை T20i பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜோஸ் ஹேசல்வூட் 792 புள்ளிகளுடன் முதல் இடத்தில் காணப்படுகின்றார்.

ஜோஸ் ஹேசல்வூட் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையே நடைபெற்ற T20i தொடரில் அதிக விக்கெட்டுக்களைக் (06) கைப்பற்றயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

T20i துடுப்பாட்ட வீரர்களுக்காக வெளியிடப்பட்டிருக்கும் புதிய தரவரிசையில் இலங்கையின் இளம் துடுப்பாட்டவீரரான பெதும் நிஸ்ஸங்க 661 புள்ளிகளுடன் 09ஆவது இடத்தில் காணப்படுவதோடு, T20i சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹஸரங்க 150 புள்ளிகளுடன் 10ஆம் இடத்தில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LPL தொடரின் வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

அதேநேரம் T20i துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சகலதுறைவீரர்கள் தரவரிசையில் மொஹமட் நபி 267 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இருக்கின்றனர்.

பாபர் அசாம் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையிலும் 892 புள்ளிகளுடன் முதல் இடத்தில் காணப்பட டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றார்.

மறுமுனையில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஒரே இலங்கை வீரராக, 772 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் காணப்படும் இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரட்ன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<