சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற கால்பந்து தொடரான ‘லா லீகா‘ போட்டித்தொடரின் பார்சிலோனா அணியுடனான தீர்க்கமான போட்டியில் ரியல் மட்ரிட் அணியின் தலைவர் செர்ஜியோ ரமோஸ் போட்டியின் இறுதித்தருவாயில் ஹெடர் முறையில் பெற்ற கோலினால் 1-1 என்ற கோல்கள் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
சர்வதேச கால்பந்தின் ஜாம்பவான்களான பார்சிலோனா மற்றும் ரியல் மட்ரிட் கழகங்கள் மோதும் ‘எல் கிளாசிகோ‘ நேற்று பார்சிலோனாவின் சொந்த மைதானமான ‘கேம்ப் நௌ‘வில் நடைபெற்றது.
உலகளாவிய ரீதியில் பல மில்லியன் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த இப்போட்டியில் கிரிஸ்டியானோ ரொனால்டோ, லியனல் மெஸ்ஸி, நெய்மார், லூயிஸ் சுவாரஸ் மற்றும் செர்ஜியோ ரமோஸ் ஆகிய நட்சத்திர வீரர்களின் பங்குபற்றுதலுடன் நேற்றைய மோதல் இடம்பெற்றது.
இறுதியாக இரு அணிகளுக்கும் இடையில் நடந்த போட்டியில் ரியல் மட்ரிட் அணி 2-1 என வெற்றி பெற்றதனால் இப்போட்டியில் சிறப்பாக விளையாடி பார்சிலோனா சொந்த மண்ணில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், அனுபவ வீரர் இனியெஸ்டா மீண்டும் குழாமில் இணைந்தது பார்சிலோனா அணிக்கு வலுச்சேர்த்தது.
அதே வேளை, ரியல் மட்ரிட் அணியின் முக்கிய வீரர்களான கரத் பேல் மற்றும் டொனி க்ரூஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறாமை அவ்வணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. எனினும் சுற்றுத்தொடரில் கடந்த 32 போட்டிகளில் எந்த தோல்வியையும் சந்திக்காத ரியல் மட்ரிட் அணி பார்சிலோனாவை விட 6 புள்ளிகள் முன்னிலையில் இருந்ததனால் உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் நேற்றைய போட்டியை எதிர்கொண்டது.
போட்டியின் ஆரம்பத்தில் இரு அணிகளும் வழமைக்கு மாறாக சிறு சிறு தவறிழைத்தமையால் இரு அணிகளாலும் கோல் ஒன்றினைப் பெற முடியவில்லை. ஆனால் நேரம் செல்லச்செல்ல அவர்களது பாணியிலே விளையாடி வாய்ப்புகளை உருவாக்கத் தொடங்கினர்.
எனினும் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களான லியனல் மெஸ்ஸி மற்றும் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரால் தமது வழமையான விளையாட்டை வெளிப்படுத்த முடியவில்லை. தடுப்பாட்டக்காரர்கள் இவ்விருவரையும் சிறப்பாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
இரு அணிகளும் முதலாவது பாதியில் சமபலத்துடன் மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதல் பாதி: ரியல்மட்ரிட் 0 – 0 பார்சிலோனா
எனினும் இரண்டாவது பாதியில் பார்சிலோனா சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டியது. அதன் பலனாக 53ஆவது நிமிடத்தில் லூயிஸ் சுவாரேஸ், நெய்மாரின் ‘ப்ரீ கிக்‘ வாய்ப்பினை ஹெடர் மூலம் கோலாக்கினார். தொடர்ந்து வந்த நிமிடங்களில் பார்சிலோனாவின் கையே ஓங்கியிருந்தது.
இனியெஸ்டா 60ஆவது நிமிடத்தில் மைதானத்தினுள் நுழைந்து மேலும் பல வாய்ப்புகளை பார்சிலோனாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.
எனினும் பார்சிலோனாவால் இன்னொரு கோலினை போட்டுக்கொள்ள முடியவில்லை. நெய்மர் மற்றும் மெஸ்ஸிக்குக் கிடைத்த அருமையான பல வாய்ப்புகளை இருவரும் கோலாக்கத் தவறினர்.
மறுமுனையில், ரியல் மட்ரிட் அணி போட்டியை சமப்படுத்த முயன்றாலும் அவர்களால் அதற்கான வாய்ப்புகளை சிறந்த முறையில் உருவாக்க முடியவில்லை. போட்டியில், ரியல் மட்ரிட் அணிக்காக லூகா மொட்ரிக் சிறப்பாக விளையாடி வாய்ப்புகள் பலவற்றை ஏற்படுத்தினாலும் அவற்றின் மூலம் எந்த ஒரு கோலினையும் பெற முடியாமல் போனது.
எனினும் போட்டியின் 89ஆவது நிமிடத்தில் அணிக்கு கிடைத்த கோர்னர் கிக் வாய்ப்பினை செர்ஜியோ ரமோஸ் லாவகமாக கோலாக மாற்றினார்.
செர்ஜியோ ரமோஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் அத்லெடிகோ மட்ரிட் அணிக்கெதிராக இறுதி நிமிடத்தில் சமநிலை கோல் ஒன்றை ஹெடர் மூலம் அடித்தது குறிப்பிடத்தக்கது. அப்போட்டியினை ரியல் மட்ரிட் 4-1 என வெற்றியீட்டி கிண்ணத்தையும் சுவீகரித்தனர்.
அதனைப்போன்றே இப்போட்டியிலும் அவர் பார்சிலோனா அணியின் வெற்றி வாய்ப்பை தவிடு பொடியாக்கும் விதத்தில் அந்த கோலினைப் போட்டு போட்டியை சமநிலைப்படுத்தினார்.
முழு நேரம்: ரியல்மட்ரிட் 1 – 1 பார்சிலோனா
இதன்மூலம் ரியல் மட்ரிட் அணி தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் இருப்பதுடன், தாம் விளையாடிய கடைசி 33 போட்டிகளில் ஒரு தோல்வியையேனும் சந்திக்காத பெருமையுடனும் இருக்கின்றது.