இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி பகலிரவுப் போட்டியாக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை அணி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற வேண்டுமாயின் இந்திய அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் குறைந்தது இரண்டில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் 2019இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான நேரடி தகுதியைப் பெறுவதற்கு, நாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதியாகும்பொழுது தரவரிசையில் முதல் எட்டு இடங்களுக்குள் இருக்க வேண்டும். எனினும், இலங்கை அணி தற்பொழுது 88 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி 78 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் உள்ளன.
கடும் அழுத்தங்களுடன் காணப்படும் இலங்கை அணி, இந்தியாவினை ஒரு நாள் தொடரில் எவ்வாறு எதிர்கொள்ளும்?
ஐசிசி ஒருநாள் போட்டிகள் அணிகள் தரவரிசையில் இந்தியா தற்போது 3ஆம் இடத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிராக தம்புள்ளையில் ஞாயிறன்று ஆரம்பமாகவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 4-1 என்று தொடரை வென்றால் 3ஆம் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். 114 புள்ளிகளுடன் தற்பொழுது உள்ள இந்தியா 3-2 என்று இலங்கையை வீழ்த்தினால் கூட தசமப் புள்ளிகளில் இங்கிலாந்தை விட குறைவாகப் பெற்று பின்னடைவு கண்டு விடும்.
மாறாக இலங்கை நேரடியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறுவதை உறுதி செய்ய இந்தத் தொடர் முக்கிய தருணமாக அமைந்துள்ளது. இலங்கை அணி குறைந்தது 2 போட்டிகளையாவது வெல்வது அவசியம். அப்போதுதான் இலங்கை 2019 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதை உறுதி செய்துகொள்ள முடியும்.
ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் கடைசி 4 இடங்களில் உள்ள அணிகள் தகுதிப் போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் முதல் 2 இடங்களைப் பெற்றுக்கொள்ளும் அணி 2019 உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெறும்.
எனவே, இந்தத் தொடரில் 2 போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றால் 90 புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளும். மாறாக மேற்கிந்திய தீவுகள் அணி அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒருநாள் போட்டியையும் வென்று இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் வென்றாலும் 88 புள்ளிகளையே பெற்றுக்கொள்ளும்.
ஆனால் இந்தியா 4-1 என்று தொடரை வென்றால் இலங்கை அணி 88 புள்ளிகளில் இருக்கும். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் சாத்தியமில்லாத நிலையிலும் குறித்த வெற்றிகளைப் பெற்றால் தசமப் புள்ளிகளில் இலங்கையை பின் தள்ளிவிடும். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளை வெல்லுமா என்பது சந்தேகம்.
எனினும், கடந்த 5 வருடங்களில் ஒருநாள் அரங்கில் 27.20 சராசரியைக் கொண்ட அவ்வணி, ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்னடைவில் உள்ளமை இலங்கை அணிக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது.
மிகப்பெரிய மாற்றங்களுடன் வலுவான நிலையில் இலங்கை ஒரு நாள் குழாம்
டெஸ்ட் போட்டியும் சர்வதேச ஒருநாள் போட்டியும் இரு மாறுப்பட்ட போட்டிகள் என்பதால் டெஸ்ட் தொடரில் போன்று ஒருநாள் தொடரில் மோசமாக விளையாட மாட்டோம் என இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் உபுல் தரங்க அண்மையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
டெஸ்ட் போட்டிகளைப் போன்றல்லாது ஒருநாள் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அனுபவமிக்க வீரர்களாக இருப்பதனால் இந்தத் தொடரில் மிகுந்த பொறுப்புடன் விளையாடி குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் நேரடியாகத் தகுதிபெற வேண்டிய நிலையில் உள்ளது.
எனவே, இத் தொடரில் இலங்கை அணி முழு அளவிலான ஆற்றல்களை வெளிப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது.
ஐ.சி.சி ஒருநாள் தரவரிசை அட்டவணை
நிலை | நாடுகள் | புள்ளிகள் |
01 | தென்னாபிரிக்கா | 119 |
02 | அவுஸ்திரேலியா | 117 |
03 | இந்தியா | 114 |
04 | இங்கிலாந்து | 113 |
05 | நியூசிலாந்து | 111 |
06 | பாகிஸ்தான் | 95 |
07 | பங்களாதேஷ் | 94 |
08 | இலங்கை | 88 |
09 | மேற்கிந்திய தீவுகள் | 78 |
10 | ஆப்கானிஸ்தான் | 54 |
11 | சிம்பாப்வே | 52 |
12 | அயர்லாந்து | 41 |