ஆசிய கிண்ணமும் லசித் மாலிங்கவின் அசத்தல் பந்து வீச்சும்

2317
Lasith Malinga

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையடுத்து சற்று எழுச்சியும், நம்பிக்கையும் பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு அடுத்து சவாலாக அமையவுள்ள முக்கிய தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்திருந்த இலங்கை அணி, திடீர் எழுச்சியாக அடுத்த இரண்டு ஒருநாள் மற்றும் ஒரு T-20 போட்டிகளில் வெற்றியீட்டி ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் லசித் மாலிங்க

செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில்…

தென்னாபிரிக்க தொடர் முடிவுடன் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதுமாத்திரமின்றி இலங்கையில் நடைபெற்று முடிந்த SLC T-20 லீக்கில் துடுப்பாட்ட வீரர்களின் செயற்பாடுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது.

எனினும், இலங்கை அணியிடையே உள்ள ஒரேயொரு சிக்கல் வேகப்பந்து வீச்சுதான். சுழற்பந்து வீச்சில் அகில தனன்ஜய அணியை வழிநடத்தும் அதேவேளை, லக்ஷான் சந்தகன் தன்னுடைய பங்குக்கு எதிரணிக்கு சவால் விடுத்து வந்தார். எனினும், இம்முறை ஆசிய கிண்ண அணியில் டில்ருவான் பெரேரா மற்றும் அமில அபோன்சோ ஆகியோரும் சுழல்பந்து வீச்சுக்காக இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய கிண்ணத்துக்கான அணியில் எந்ததெந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இணைக்கப்படுவார்கள்? முக்கியமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், அணியின் அனுபவம் வாய்ந்த வீரருமான லசித் மாலிங்கவுக்கு அணியில் இடம் வழங்கப்படுமா? என்ற கேள்விதான் அண்மைக்காலமாக பரவலாக முன்வைக்கப்பட்டு வந்தது.

எவ்வாறாயினும் இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லசித் மாலிங்க 16 பேர் கொண்ட இலங்கை குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த SLC-T-20 லீக்கில் 6 போட்டிகளில் விளையாடிய மாலிங்க 3 விக்கெட்டுகளை மாத்திரம் வீழ்த்தியிருந்தார். எனினும், கடந்த கால ஆசிய கிண்ண தொடர்களில் அவர் படைத்துள்ள சிறந்த பிரதிகள் மற்றும் அனுபவம் என்பன அவரது வருகைக்கு முக்கிய காரணமாகியுள்ளன.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கௌரவிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை

விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவின்..

கடந்த வருடம் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடராக இருக்கட்டும், அதற்கு முன் நடைபெற்ற ஐசிசியின் முக்கிய தொடர்களாக இருக்கட்டும், மாலிங்க தனது திறமைகளை வெளிப்படுத்த தவறியிருக்கவில்லை. இறுதியாக நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணியை தனது பந்து வீச்சினால் மாலிங்க முன்னோக்கி கொண்டு சென்றாலும், களத்தடுப்பில் விடப்பட்ட தவறுகளால் அணியின் வெற்றி வாய்ப்பு தவறவிடப்பட்டிருந்தது நாம் அறிந்ததே.

இலங்கை அணியை பொருத்தவரையில் ஆசிய கிண்ணத்தில் லசித் மாலிங்க ஒரு மறுக்கமுடியாத சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதை கடந்த காலங்களில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

ஆசிய கிண்ண வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் லசித் மாலிங்க இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், அதிகூடிய விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

ஆசிய கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்

  • முத்தையா முரளிதரன் 30 விக்கெட்டுகள் (24 இன்னிங்ஸ்கள்)
  • லசித் மாலிங்க 28 விக்கெட்டுகள் (13 இன்னிங்ஸ்கள்)
  • அஜந்த மெண்டிஸ் 26 விக்கெட்டுகள் (8 இன்னிங்ஸ்கள்)
  • சயீட் அஜ்மல் 25 விக்கெட்டுகள் (12 இன்னிங்ஸ்கள்)
  • சமிந்த வாஸ் 23 விக்கெட்டுகள் (19 இன்னிங்ஸ்கள்)

ஆசிய கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள்

  • லசித் மாலிங்க 30 விக்கெட்டுகள் (24 இன்னிங்ஸ்கள்)
  • சமிந்த வாஸ் 23 விக்கெட்டுகள் (19 இன்னிங்ஸ்கள்)
  • இர்பான் பத்தான் 22 விக்கெட்டுகள் (12 இன்னிங்ஸ்கள்)

ஆசிய கிண்ணத்தின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகும் அகில தனன்ஜய

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து…

ஆசிய கிண்ணத்தில் 2004ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் மாலிங்க, இதுவரையில் 13 போட்டிகளில் மாத்திரம் விளையாடி, 19.03 என்ற சராசரியில்  28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமாத்திரமின்றி ஆசிய கிண்ணத்தில் மூன்று தடவைகள் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரேயொரு பந்து வீச்சாளரும் இவர்தான். இவருக்கு அடுத்தபடியாக அஜந்த மெண்டிஸ் 2 ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன், ஆசிய கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரான முத்தையா முரளிதரன் 24 போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், அவர் ஒரு முறையே ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  

ஆசிய கிண்ணத்தில் அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்

  • லசித் மாலிங்க 3
  • அஜந்த மெண்டிஸ் 2
  • முத்தையா முரளிதரன் 1
  • பர்வீஸ் மஹரூப் 1
  • சொஹைப் அக்தார் 1

கடந்த 2016ஆம் ஆண்டு ஆசிய கிண்ணத் தொடர், T-20 போட்டிகளாக நடத்தப்பட்டது. இதில் ஒரு போட்டியில் விளையாடிய மாலிங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அத்துடன் இறுதியாக 2014ஆம் ஆண்டு 50 ஓவர்களாக நடத்தப்பட்ட ஆசிய கிண்ணத்தில் மாலிங்க 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார்.

மாலிங்கவுக்கு அடுத்தப்படியாக ஆசிய கிண்ணத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தற்போதைய இலங்கை பந்து வீச்சாளர்களில், நுவான் குலசேகர மற்றும் சுராங்க லக்மால் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நுவான் குலசேகர 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும், சுராங்க லக்மால் 7 போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இதேவேளை, லசித் மாலிங்க 2010ஆம் மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்தார். 2010ம் ஆண்டு மூன்று போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்த மாலிங்க 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், 2014ம் ஆண்டு 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், இதன் இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.

2010ம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்

  • லசித் மாலிங்க 9 விக்கெட்டுகள் (3 இன்னிங்ஸ்கள்)
  • அசிஷ் நெஹ்ரா 6 விக்கெட்டுகள் (3 இன்னிங்ஸ்கள்)
  • ஷஹீர் கான் 4 விக்கெட்டுகள் ( இன்னிங்ஸ்கள்)

2012ம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்

  • லசித் மாலிங்க 11 விக்கெட்டுகள் (4 இன்னிங்ஸ்கள்)
  • சயீட் அஜ்மல் 11 விக்கெட்டுகள் (5 இன்னிங்ஸ்கள்)
  • அஜந்த மெண்டிஸ் 9 விக்கெட்டுகள் (3 இன்னிங்ஸ்கள்)

இதனை தொடர்ந்து இறுதியாக (2016) T-20 போட்டிகளாக நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடிய மாலிங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

தற்போது பல்வேறு தடைகளை தாண்டி சுமார் ஒருவருட காலத்துக்கு பின்னர் தேசிய அணியில் இடம்பிடித்துள்ள மாலிங்க இம்முறை ஆசிய கிண்ணத்தில் பிரகாசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு முகங்கொடுத்துள்ளார். இறுதியாக, 2017 செப்டம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய மாலிங்க, பின்னர் சில காலம் தேசிய அணியில் இடம்பிடிக்கவில்லை.

தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டுவந்த இவர், தேசிய அணியில் இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதன்படி இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற SLC T20 லீக்கில் விளையாடி, தனக்கான இடத்தை மாலிங்க தக்கவைத்துக்கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின்னர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடிய இவரின் பந்து வீச்சில் மாற்றங்கள் தென்பட்டதுடன், களத்தடுப்பு மற்றும் துடுப்பாட்டத்திலும் கூட மாற்றங்களை காணக்ககூடியதாக இருந்தது.

எவ்வாறாயினும் ஒருவழியாக ஆசிய கிண்ணம் என்ற முக்கிய தொடரில் இணைந்துள்ள லசித் மாலிங்க இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குறிய வீரராக மாறியுள்ளார். கடந்த காலங்களில் தனக்கே உரிய பாணியில் யோர்க்கர்பந்துகளை வீசி எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை தினறடித்த மாலிங்கவின் வருகை, இம்முறை ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணியை உயரத்துக்கு கொண்டு செல்லுமா? என்பதை பொருத்திருந்ததான் பார்க்க வேண்டும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<