ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே இலங்கை அணி தாம் விளையாடிய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியோடு விளையாடி 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்று இருந்தது. இவ்வாறு இருக்கும் நிலையில் உபாதைக்குள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இந்தியா சென்றிருந்த லசித் மாலிங்க நேற்று ஆப்கானிஸ்தான் அணியோடு நடைபெற்ற போட்டியில் பங்குபற்றி இருக்கவில்லை.
முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவரால் நேற்றைய போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
இதன் காரணமாக அவர் மேலும் இந்தியாவில் தங்கி இருப்பதில் பயனில்லை மற்றும் இந்த உபாதை மேலும் மோசமடைய வாய்ப்புகள் உள்ளதால் லசித் மாலிங்கவிற்கு ஓய்வளிக்க இலங்கை கிரிக்கட் முகாமைத்துவம் தீர்மானித்து அவரை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு செல்ல முன்னரே அவர் உபாதை அடைந்து இருந்தாலும் அவர் டி20 போட்டிகளில் இலங்கை அணியில் விளையாட அவர் உபாதையுடனேயே கடந்த 8ஆம் திகதி இலங்கை அணியோடு இந்தியா சென்று இருந்தார்.
இதனால் லசித் மாலிங்கவின் வெற்றிடத்தை நிரப்ப கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு அரங்கில் நடைபெறும் பயிற்சியில் பிரகாசிக்கும் ஒருவரே தெரிவு செய்யப்படுவார். எது எவ்வாறாயினும் அனேகமாக சுழல் பந்து வீச்சாளர் சீகுகே பிரசன்ன அணியில் இணையக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.