இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டின் சிறந்த தலைவர்களாக மகேந்திர சிங் டோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட, சிறந்த பந்துவீச்சாளராக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அறிமுகமாகி நேற்றுமுன்தினம் (18) 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதைக் கொண்டாடும் வகையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளிலேயே சிறந்த வீரர்கள், தலைவர்கள் யார் என்பதை இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 20 முன்னாள் வீரர்கள், 10 பத்திரிகையாளர்கள், 10 கிரிக்கெட் நிபுணர்கள், வர்ணனையாளர்கள் என்று 50 பேருடன் அலசி ஆராய்ந்தது.
இலங்கையில் IPL நடக்குமா? வெளியான புதிய தகவல்
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரை……………
அவர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடர் முழுவதிலும் சிறந்த தலைவர்களாக டோனியும் (சென்னை சுப்பர் கிங்ஸ்), ரோஹித் சர்மாவும் (மும்பை இந்தியன்ஸ்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அணியை இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களில் 10 தடவைகள் பிளேஓப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ள டோனி மூன்று முறை சம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்துள்ளார்.
2013இல் தலைவரான ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4 தடவைகள் சம்பியன் கிண்ணத்தை வென்று கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சிறந்த வீரராக ஏபி. டி. வில்லியர்ஸும் (பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ்), சிறந்த பந்துவீச்சாளராக லசித் மாலிங்கவும் (மும்பை இந்தியன்ஸ்), சிறந்த சகலதுறை வீரராக ஷேன் வொட்சனும் (சென்னை சுப்பர் கிங்ஸ்) தேர்வாகியுள்ளனர்.
ஐ.பி.எல் அரங்கில் மும்பை இந்தின்ஸ் அணியின் தனி அடையாளமாக கடந்த 12 வருடங்களாக லசித் மாலிங்க விளங்கி வருகின்றார். இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மாலிங்க, இதுவரை 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அத்துடன், இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடர்களில் அதிக ஓட்டங்களைக் குவித்தவரான விராட் கோஹ்லி (பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ்) சிறந்த இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.இவர் இதுவரை 177 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 5412 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இந்த நிலையில், சிறந்த பயிற்சியாளருக்கான வாக்கெடுப்பில் மிகச் சிறிய வித்தியாசத்துடன் கொல்கத்தா நைட் ரைநடர்ஸ் அணியின் ட்ரெவர் பெய்லிஸை பின்தள்ளி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஸ்டீவன் ப்ளெமிங் தெரிவாகினார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<