இலங்கை அணி வீரர்கள் அதிக உடற்பருமனுடன் காணப்படுகின்றார்கள் எனக்கூறியதற்காக, விளையாட்டுத்துறை அமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு பேசியதால் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லசித் மாலிங்க இன்று (22) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.
கடந்த சம்பியன்ஸ் கிண்ணத்தில், இலங்கை அணி அரை இறுதிப்போட்டிக்கு தெரிவாகாது வெளியேறி இருந்ததற்கு காரணமாக இருந்த அணியின் இயலாமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர கேள்வி எழுப்பியிருந்தார். இதற்காக, லசித் மாலிங்க அமைச்சரை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் அத்துமீறியதன் காரணமாக, மாலிங்க அமைச்சர் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, AFP செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயசேகர,
“அவர் தற்போது இலங்கை கிரிக்கெட் (சபை) உடன் செய்த ஒப்பந்தத்தினை முறிக்கும் வகையில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த காரணத்திற்காக தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.“
“எனது விமர்சனம், மோசமாக இருந்த எமது வீரர்களின் உடற்தகுதி பற்றியே அமைந்திருந்தது. நான் மாலிங்கவை பெயரிட்டு (விமர்சனம் செய்து) இருக்கவில்லை, ஆனால் அவர் பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் என்னை (வார்த்தைகளால்) தாக்குகின்றார்“ எனக்கூறியிருந்தார்.
விஷேட உடல் தகுதி சோதனைக்கு உள்வாங்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்கள்
மாலிங்க அமைச்சரின் இலங்கை அணி தொடர்பான விமர்சனம் குறித்து தொலைக்காட்சியொன்றிற்கு பேட்டியளித்த போது, அவருக்கு கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது எனக்குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு மாலிங்க,
“எனக்கு சொகுசான ஆசனங்களில் இருந்து விமர்சனம் செய்வோர்கள் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. ஒரு குரங்கிற்கு கிளியின் கூட்டுப்பகுதியில் உள்ள வெற்றிடங்கள் பற்றி எப்படி தெரியும்? இது ஒரு குரங்கு கிளியொன்றின் கூட்டிற்குள் சென்று அந்த கூட்டினைப் பற்றி பேசுவது போல் உள்ளது“ எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஜயசேகர முன்னதாக, இலங்கை வீரர்களுக்கு பானை போன்ற தொப்பையான வயிறு உள்ளதாகவும், அதனால் பந்துகளை சரிவர பிடியெடுப்பு செய்ய முடியாமல் இருப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அஹ்மடின் இரண்டு பிடியெடுப்புக்களை தவறவிட்டு இருந்த காரணத்தினால், சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கை அணி தோற்கடிக்கப்பட்டிருந்தது. இரண்டு பிடியெடுப்புக்களும் மாலிங்கவின் ஓவரிலேயே தவறவிடப்பட்டிருந்தன. இதனால், மாலிங்க அப்போட்டியில் 52 ஓட்டங்களுக்கு வெறும் ஒரு விக்கெட்டினை மாத்திரமே பெற்றிருந்தார்.
இதனையடுத்து இங்கிலாந்தில் இருந்து கடந்த வாரம் நாடு திரும்பிய இலங்கை அணிக்கு, ஜயசேகரவின் உத்தரவின் பேரில் உடற்தகுதிக்குரிய பரிசோதனைகள் மேற்கொள்ளும்படி கட்டளையிடப்பட்டிருந்தது. இச்சோதனையில் வீரர்கள் பலர் அதிக உடற்பருமனுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
“ஒரு வீரரிற்கு உடம்பில் உள்ள கொழுப்பின் அளவு, 16% ஆகவே இருக்க வேண்டும் ஆனால், இலங்கை வீரர்கள் பலரிற்கு 25% இற்கும் மேலாக கொழுப்பு காணப்படுகின்றது“ என்று ஜயசேகர தெரிவித்திருந்தார்.
“நான் இது தொடர்பான முடிவுகளை பகுப்பாய்வு செய்யும்படி கட்டளையிட்டுள்ளேன். இனிவரும் காலங்களில் 16% இற்கும் மேலாக உடம்பில் கொழுப்பினை கொண்டிருக்கும் வீரர்களிற்கு தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது.”
18 மாதங்கள் காயம் காரணமாக, ஓய்விலிருந்த லசித் மாலிங்க இப்பருவகாலப்பகுதியில் குறைவான சர்வதேசப் போட்டிகளிலேயே விளையாடி இருந்தார். 33 வயதாகும் அவர் இலங்கை அணியில் இணைக்கப்பட்டது விசித்திரமான ஓர் விடயமாக பார்க்கப்படுகின்றது.
சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு முன்னதாக, நிறைவடைந்த அதிகளவில் பணம் சம்பாதிக்கக்கூடிய ஐ.பி.எல் போட்டிகளில் மாலிங்கவின் அணியான மும்பை இந்தியன்ஸ், இம்முறை சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்காக மாலிங்கவுக்கு, இலங்கை அணி நடாத்தியிருந்த (சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக) விசேட செயற்திறன் மிக்க பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாது இருக்க சிறப்பு சலுகை அளிக்கப்பட்டிருந்தது.
மாலிங்க பணத்திற்காகவே அதிகமாக விளையாடுகின்றார் : அமைச்சர் தயாசிறி
“அவர்கள் தமது உடற்தகுதியினை ஐ.பி.எல் போட்டிகளில் வெறும் நான்கு ஓவர்களை வீசுவதற்காக முன்னேற்றிக் கொள்கின்றனர்“ என மாலிங்கவை மறைமுகமாக குறிப்பிட்டு ஜயசேகர பேசியிருந்தார். “இவ்வாறான வீரர்கள் தமது நாட்டிற்காக விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் ஐ.பி.எல் தொடர் விளையாடுவதே பணத்திற்காகத்தான்“ எனவும் கூறியிருந்தார்.
ஜயசேகர மேலும் கூறுகையில், ”வெளிநாடுகளில் நடைபெறும் வேறு விளையாட்டுக்களில் பங்குபெறும் வீரர்கள் உடற்தகுதி பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.