இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வரும் இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு, உலகக் கிண்ணத்துக்கு முன்னர் 10 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மாலிங்கவின் அபார பந்து வீச்சின் மூலம் மும்பை அணிக்கு வெற்றி
ஐ.பி.எல். தொடரில் நேற்று (05) நடைபெற்ற இறுதி………..
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார். மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளதுடன், அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளராகவும் மாலிங்க வலம் வருகின்றார். ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி நாளைய தினம் (07) இங்கிலாந்தின் இலண்டன் நோக்கி புறப்படவுள்ளது. உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர், ஸ்கொட்லாந்து அணியுடன் எதிர்வரும் 18 மற்றும் 21ம் திகதிகளில் ஒருநாள் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்த தொடர் ஆரம்பமாவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இலண்டன் செல்லும் இலங்கை அணி அங்கு பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர், ஸ்கொட்லாந்து தொடருக்காக எடிங்பேர்க் நோக்கி பயணிக்கவுள்ளது.
இவ்வாறான நிலையில், ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் மாலிங்க, மும்பை அணியுடன் எதிர்வரும் 12ம் திகதிவரை இணைந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐ.பி.எல். தொடர் நிறைவுடன் மாலிங்கவுக்கு 10 நாட்கள் ஓய்வு வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக அவர் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை தேர்வுக்குழு தலைவரும், உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் முகாமையளருமான அசந்த டி மெல், “ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் 12ம் திகதிவரை நடைபெறுகிறது. லசித் மாலிங்க விளையாடும் மும்பை அணி ப்ளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இதனால், தொடரை முடித்துவிட்டு கொழும்புக்கு வருகைதந்து 10 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மாலிங்கவுக்கு அறிவித்துள்ளோம். எமது அணியில் இருக்கும் உலகக் கிண்ண தொடருக்கான முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மாலிங்க.
அவர் அதிகமான போட்டிகளில் விளையாடி வருகின்றார். அவருக்கு அதிக அழுத்தத்தை கொடுக்க நாம் விரும்பவில்லை. இதனால், ஸ்கொட்லாந்து தொடரிலிருந்து அவருக்கு ஓய்வு வழங்கியுள்ளோம். அவரது உடல் நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தன்னம்பிக்கையுடன் உலகக் கிண்ணத்தை எதிர்கொள்வோம் – திமுத் கருணாரத்ன
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற …….
இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், “ஸ்கொட்லாந்து தொடரில் மாலிங்க இணைக்கப்படாவிட்டாலும், பயிற்சிப் போட்டிகளில் அவர் விளையாட வேண்டும் என அவருக்கு அறிவித்தியுள்ளோம். அவர் பயிற்சிப் போட்டிகளுக்காக கேர்டிப்பில் வைத்து எம்முடன் இணைந்துக்கொள்வார்” என்றார்.
இலங்கை கிரிக்கெட் அணி ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முடித்துக்கொண்டு, எதிர்வரும் 24ஆம் திகதி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான பயிற்சிப்போட்டியில் விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து 27ம் திகதி இரண்டாவது பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளும் இலங்கை அணி, ஜூன் முதலாம் திகதி நியூசிலாந்து அணிக்கு எதிராக உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<