உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இம்முறை தொடரில் பிரகாசித்த வீரர்களை மையமாக கொண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீரர்களின் புதிய தரவரிசையை வெளியிட்டுள்ளது.
உலகக் கிண்ண அரையிறுதியில் நுழையும் பண்புகள் இலங்கையிடம் இல்லை – மஹேல
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதி நான்கு அணிகளுக்குள் நுழையும்…
நடப்பு உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்தது. லீக் போட்டிகள் நிறைவு நிலையில் ஒன்பது போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி மூன்று வெற்றிகள், நான்கு தோல்விகள் மற்றும் இரண்டு முடிவற்ற போட்டிகளுடன் சேர்ந்து மொத்தமாக எட்டு புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாமிடத்தை பெற்றுக்கொண்டது.
இவ்வாறு ஆறாமிடத்தை பெற்றுக்கொண்ட இலங்கை அணியிலிருந்து மூன்று வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள வீரர்களுக்கான புதிய தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளனர். துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் அவிஷ்க பெர்ணான்டோ மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரும் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் லசித் மாலிங்கவும் முன்னிலை பெற்றுள்ளனர்.
பந்துவீச்சாளர்களின் தரவரிசை
ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையில் இந்திய அணியின் ஜெஸ்பிரிட் பும்ரா தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகின்றார். நடப்பு உலகக் கிண்ண தொடரில் எட்டு போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெஸ்பிரிட் பும்ரா 814 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றார்.
இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி எந்தவொரு வீரரும் முதல் பத்து நிலைகளுக்குள் இடம்பெறவில்லை. இலங்கை அணி சார்பாக முன்னிலை பெற்றுள்ள ஒரேயொரு வீரராக லசித் மாலிங்க காணப்படுகின்றார்.
ரோஹித்தின் சாதனை சதத்துடன் இந்தியாவுக்கு இலகு வெற்றி
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் லீட்ஸ் – ஹெடிங்லி மைதானத்தில்…
ஒருநாள் சர்வதேச அரங்கிலிருந்து விரைவில் தனது ஓய்வினை அறிவிக்கவுள்ள லசித் மாலிங்க, தனது வாழ்நாளில் இறுதி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடினார். இலங்கை அணி நடப்பு உலகக் கிண்ண தொடரில் பெற்ற வெற்றிகளிலும் லசித் மாலிங்க முக்கிய பங்கு வகித்திருந்தார்.
நடப்பு உலகக் கிண்ண தொடரில் தனது யோக்கர் பந்துவீச்சு மூலம் எதிரணியினரை மிரட்டி மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மாலிங்கவுக்கு புதிய ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 11 நிலைகள் முன்னேற்றம் கிடைத்துள்ளது.
உலகக் கிண்ண தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் தரவரிசையில் 44ஆவது இடத்தில் இருந்த லசித் மாலிங்க தற்போது 11 நிலைகள் முன்னேற்றத்துடன் 552 தரவரிசை புள்ளிகளுடன் 33ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு ஒருநாள் அறிமுகம் பெற்ற 35 வயதுடைய லசித் மாலிங்க இலங்கை அணிக்காக இதுவரையில் 225 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை
துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் உலகக் கிண்ண தொடரில் 441 ஓட்டங்களை குவித்துள்ள இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.
நாங்கள் உலகின் முன்னணி அணியாக மாறுவோம் – திமுத் கருணாரத்ன
இலங்கை அணியில் சங்கக்கார, மஹேல உள்ளிட்ட முன்னணி…
நடப்பு உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சார்பாக இரண்டு வீரர்கள் சதம் பெற்றிருந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் 21 வயதுடைய வளர்ந்துவரும் வீரர் அவிஷ்க பெர்ணான்டோ கன்னி சதமடித்து அசத்தியிருந்தார். தொடரில் நான்கு போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்த அவிஷ்க பெர்ணான்டோ மொத்தமாக 203 ஓட்டங்களை குவித்திருந்தார். இதன் மூலம் புதிய ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் அவிஷ்கவுக்கு பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உலகக் கிண்ண தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்த அவிஷ்க 195ஆவது நிலையில் இருந்தார். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையில் 110 நிலைகள் முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (467) 85ஆவது நிலையை அடைந்துள்ளார்.
மேலும், இறுதியாக இந்திய அணியுடன் நடைபெற்ற லீக் போட்டியில் சதமடித்த அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் 2 நிலைகள் முன்னேறி அவுஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கெரியுடன் சேர்ந்து 34ஆவது நிலையை அடைந்துள்ளார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<