மீண்டும் இலங்கை அணியில் இணைய மாலிங்கவுக்கு வாய்ப்பு

4165

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான, ரசிகர்களால் விரும்பப்பட்டு வரும் லசித் மாலிங்க தென்னாபிரிக்க அணிக்கு எதிரான, ஒரு போட்டி கொண்ட T-20  தொடரில் இலங்கை அணிக்காக விளையாடலாம் என்ற எதிர்வுகூறலை இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர நேற்று (05) வெளியிட்டுள்ளார்.

பிரியாவிடை போட்டிக்காக காத்திருக்கும் லசித் மாலிங்க

தனது வெளிப்படையான, நேரடியாகப் பேசும் தன்மையும்..

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் தோல்வியடைந்து தொடரை 0-3 என இழந்திருந்தது. இந்த போட்டிக்குப் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த அணியின் தற்காலிக தலைமை பயிற்றுவிப்பாளரும், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருமான திலான் சமரவீர, தோல்விக்கான முக்கிய காரணமாக இலங்கை அணியின் பந்து வீச்சை குறிப்பிட்டிருந்தார்

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் முதல் 10 ஓவர்களுக்கு 64 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கியிருந்ததுடன், இறுதி 10 ஓவர்களில் 114 ஓட்டங்களை வாரி வழங்கி, மொத்தமாக 363 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர். இந்த ஓட்ட எண்ணிக்கையானது துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியை கொடுப்பதாக இருந்தது.

பந்து வீச்சாளர்களின் இந்த பொறுப்பற்ற பந்து வீச்சு குறித்தும், இதற்கான மாற்று தீர்மானங்கள் குறித்தும் போட்டியின் பின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த திலான் சமரவீர,

“அணியில் தற்போது, சிறந்த புதுமுக பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம். குறிப்பாக கசுன் ராஜித இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசியிருந்தார். துரதிஷ்டவசமாக இரண்டு பிடியெடுப்புகள் தவறவிடப்பட்டிருந்தன. இதனால், அவருக்கு மீண்டுமொரு வாய்ப்பு வழங்கப்படலாம்” என்றார்.

தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக தென்னாபிரிக்காவிடம் ஒருநாள் தொடரை இழந்துள்ள இலங்கை

இலங்கை அணி தென்னாபிரிக்க அணியிடம்..

அத்துடன், புதுமுக பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த காலங்களில் இலங்கை அணியின் பந்து வீச்சை முன்னின்று வழிநடத்திய லசித் மாலிங்க மீண்டும் அணியில் இணைக்கப்படுவாரா? என்ற கேள்வியும் இதன்போது முன்வைக்கப்பட்டது. இதற்கு அவர்,

“இலங்கை அணியின் உலகக் கிண்ண திட்டத்தில் மாலிங்க இருக்கின்றார். ஆனால், இது தொடர்பில் என்னால் உறுதியாக கூறமுடியாது. அணித் தேர்வுக்குழு, பயிற்றுவிப்பாளர் மற்றும் அணித் தலைவர் ஆகியோர் இணைந்து மாலிங்கவை, அணியில் இணைப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். எனினும் உலகக் கிண்ணத்தில் மாலிங்க இணைக்கப்படுவார் என நினைக்கிறோம். இதேவேளை அடுத்து நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T-20 போட்டியில் மாலிங்க விளையாடுவார் என எதிர்பார்ப்பும் இருக்கிறது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<