ப்ரொவிடென்ஸ் கிரிக்கெட் மைதானம். இதற்கு முன்னர் கிரிக்கெட் இரசிகர்களால் அறியப்படாத பெயரினை கொண்ட புத்தம் புதிய மைதானம். இலங்கை இரசிகர்களுக்கும் தான். ஆனால், அந்த மைதானம் இலங்கை கிரிக்கெட்டுக்கு மறக்க முடியாத மைதானமாக மாறப்போகின்றது என்பதை யாராலும் ஊகித்திருக்கக்கூட முடியாது.
உலகக் கிண்ண வீரர்கள் குழாத்தினை அணிகள் எப்போது அறிவிக்கும்?
அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள ……
ஆம். 2007ம் ஆண்டு உலகக் கிண்ண தொடரினை மேற்கிந்திய தீவுகள் நடத்துகின்றது. குழுநிலை போட்டிகள் முடிவடைந்து, சுப்பர் 8 போட்டிகள் ஆரம்பமாகின்றன. ஒவ்வொரு அணிகளும் வெற்றிகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் போது, இலங்கையும், இலங்கை இரசிகர்களும் ஒரு போட்டியின் தோல்வியினை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
உலகக் கிண்ண சுப்பர் 8 போட்டிகளில் ஒவ்வொரு தோல்வியும், உலக கிண்ணத்துக்கான தடைக்கல்தான். அப்படி இருக்கையில் ஏன் ஒரு தோல்வியில் இப்படி ஒரு ஆனந்தம்? காரணம் இருக்கிறது. இலங்கை இரசிகர்கள் எமது அணியின் வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்பதை சர்வதேச இரசிகர்கள் மத்தியில் பறைசாற்றியிருந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பது எமது வீரர்கள் எந்தளவு நாட்டுக்காக போராடுகின்றார்கள், அவர்கள் எதிரணிக்கு வெற்றியை அவ்வளவு எளிதாக கொடுக்கக் கூடியவர்கள் அல்ல என்பதை முற்றுமுழுதாக நம்பினர்.
எதிரணி வெற்றி பெறட்டும் பரவாயில்லை. ஆனால், அந்த வெற்றிக்கு மத்தியிலும், இலங்கை அணி என்றால் சிறியதொரு அச்சம் இருக்கதான் வேண்டும் என்பதை இலங்கை இரசிகர்களும், இலங்கை அணியும் நிரூபித்திருந்த, இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலம் அது. இந்த நம்பிக்கைக்கு காரணம் ஒட்டுமொத்த வீரர்கள் என்றாலும், தனியொரு பெயர் தனித்துவமாய் நின்றது என்றால் அந்தப் பெயர்தான் “லசித் மாலிங்க” (King of Yorkers in Cricket).
மறக்க முடியாத நினைவு. ஒவ்வொரு முறையும் மாலிங்கவை களத்தில் காணும் போதும், இரசிகர்கள் மனதுக்குள் லசித் மாலிங்கவின் அந்த “தரமான சம்பவம்” மீண்டும் பழைய ஞாபகங்களை தோண்டி எடுத்துவிடும். இப்போது உலக கிண்ணம் நெருங்கி வர, “Slinger மாலிங்க”வின் அந்த தரமான சம்பவத்தை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தும் போது, இரசிகன் என்ற ரீதியில் உடலில் ஏற்படும் புல்லரிப்பினை நன்றாகவே உணரமுடிகிறது.
கேள்விக்குறியாகும் இலங்கை அணியின் உலகக் கிண்ண கனவு
உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் ……..
மார்ச் 28 மறக்க முடியாத நாள் என்று கூறியவுடன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரின் தடைக்காலம் (Ball tampering) முடிவடைந்து விட்டது என்ற ஞாபகம் வரலாம். ஆனால் இது அதுவல்ல. புத்தம் புது மைதானத்தில் புத்தம் புது சாதனையை உருவாக்கிய வரலாறு. லசித் மாலிங்கவின் வேகத்தின் வரலாறு. 2007ம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் முக்கிய சாதனையின் வரலாறு என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ப்ரொவிடென்ஸ் கிரிக்கெட் மைதானம். 2007ம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்காக உருவாக்கப்பட்ட மைதானம். ஆடுகளம் எப்படி மாறப்போகின்றது என்பது யாருக்கும் தெரியாது. இந்த மைதானத்தின் முதல் ஒருநாள் போட்டியே, உலகக் கிண்ணத்தின் சுப்பர் 8 போட்டி. இதனையும் ஒரு விவாதமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நாம் அதற்கு வரவில்லை. நாம் நேரடியாக இலங்கை இரசிகர்களின் தோல்வி கொண்டாட்டத்திற்கே போய்விடலாம். தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி.
நாணயம் சுழற்றப்பட்ட பின்னர் இலங்கை துடுப்பெடுத்தாட ஆரம்பிக்கிறது. முற்றுமுழுதாக ஏமாற்றம் தான். சார்ல் லங்கெவல்ட்டின் அசுர வேகத்துக்கு தாக்குபிடிக்க முடியாத இலங்கை அணி 209 ஓட்டங்களுக்கு சுருண்டு போனது. ஆரம்ப வீரர்கள் ஏமாற்றத்தை வழங்கிய போதும், இலங்கை அணியை துடுப்பாட்டத்தில் தாங்கி பிடித்தது ரசல் ஆர்னல்டும், திலகரட்ன டில்ஷானும் தான்.
அந்தக்காலப்பகுதியில் மத்தியவரிசையில் களமிறங்கும் டில்ஷான் மற்றும் தற்போது கிரிக்கெட் வர்ணனை மூலமாகவும், சமுகவலைத்தளங்களின் பதிவுகள் ஊடாகவும் குதுகழிப்பை வழங்கி வரும் சகலதுறை வீரர் ரசல் ஆர்னல்ட் ஆகியோரின் அரைச்சதங்கள் மதிக்கத்தக்க ஓட்ட எண்ணிக்கைக்கு இலங்கை அணியை அழைத்துச் சென்றது.
ஆனால், குறித்த உலகக் கிண்ணத்தில் 350+ ஓட்டங்களையும் குவித்திருந்த தென்னாபிரிக்க அணிக்கு இந்த ஓட்ட எண்ணிக்கை அவ்வளவு பெரிதாக தெரியவில்லை. அந்த நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி மெதுவாக வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தது. ஓட்டங்கள் மெதுவாக பெறப்பட்டாலும், அந்த அணியின் இலக்கினை நோக்கிய நகர்வு பலமாக இருந்தது.
மும்பை இந்தியன்ஸ்: இலங்கை ரசிகர்களின் ஒரு தசாப்த காதல்
அது 2007 கிரிக்கெட் உலகக் கிண்ணம் …..
ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணி 206 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்ததுடன், வெற்றியிலக்குக்கு 4 ஓட்டங்களே தேவைப்பட்டன. கைவசம் 5 விக்கெட்டுகளும் இருந்தன. இப்படி பார்க்கும் போது போட்டியில் தென்னாபிரிக்க அணி இலகுவாக வெற்றிபெற்றுவிடும் என்ற எண்ணமே அனைவர் மனதிலும் உதித்திருந்தது. ஆனால், லசித் மாலிங்கவின் மிரட்டல் வேகப்பந்தின் வருகை தென்னாபிரிக்காவை ஆட்டம் காண வைத்தது.
என்னதான் தென்னாபிரிக்க அணி வெற்றியிலக்குக்கு மிக நெருக்கமாக வந்திருந்தாலும், போட்டி என்றால் இறுதிவரை போராட வேண்டும் என்ற எண்ணத்தை நங்கூரமாக பதிக்க காத்திருந்தது இந்தப்போட்டி. 36 பந்துகள் மற்றும் 5 விக்கெட்டுகள் கைவசம். வெறும் 10 ஓட்டங்கள் மாத்திரமே தேவை.
இந்த நிலையில், தனக்கே உரித்தான தலைமுடி அலங்காரத்துடன், வித்தியாசமான பாணியில் பந்து வீசும் லசித் மாலிங்க அணியின் 45ஆவது ஓவரை வீசுவதற்காக அழைக்கப்பட்டார். அப்போதெல்லாம் லசித் மாலிங்கவின் பெயருக்கு அடைமொழிகள் இல்லை. அவர் பிரபலமும் இல்லை, அவருக்கு பின்னால் மிகப்பெரிய இரசிகர் கூட்டம் இல்லை. அவ்வளவு ஏன் குறித்த போட்டியில் அதுவரையிலும் ஒரு விக்கெட்டும் அவருக்கு இல்லை.
இப்படி ஒன்றும் இல்லாத நிலையில், ஆரம்பித்ததுதான் லசித் மாலிங்கவின் மாயாஜால பந்து வீச்சு. அவருக்கு வழங்கப்பட்ட குறித்த ஓவரில் முதல் நான்கு பந்துகளில் 6 ஓட்டங்கள் பெறப்பட்டன. வெற்றிக்கு இன்னும் 4 ஓட்டங்களே. வெற்றியின் திசை முழுமையாக தென்னாபிரிக்க அணி பக்கம் இருக்க மாலிங்கவின் அபாரம் வெளிப்பட்டது.
வேகப்பந்து வீச்சாளர் என்றாலும், மாலிங்கவின் வேகம் குறைக்கப்பட்ட பந்துகளுக்கு ஆடுவதில் துடுப்பாட்ட வீரர்கள் இன்றுவரை தடுமாறிக்கொண்டு தான் இருக்கின்றனர். அப்படிப்பட்ட வேகம் குறைக்கப்பட்ட பந்தின் மூலம் போல்ட் முறையில் ஷோன் பொல்லொக்கினை ஆட்டமிழக்கச் செய்து அவரை ஆரவாரம் இன்றி பெவிலியன் அனுப்பிவைத்தார் மாலிங்க.
கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு
கிரிக்கெட் உலகக் கிண்ணத் ……..
மாலிங்கவின் அடுத்த இலக்கு என்ரூ ஹோல். மீண்டும் ஒரு வேகம் குறைக்கப்பட்ட யோர்க்கர் பந்து. பந்தை கனிக்க முடியாத என்ரூ ஹோல், உபுல் தரங்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கிரிக்கெட்டை பொருத்தவரை வேகம் குறைக்கப்பட்ட யோர்க்கர் பந்துகளை வீசுவது அவ்வளவு இலகுவான விடயமல்ல. ஆனால், முடியாததை முடித்துக்காட்டும் சக்தியை நாம் தொடர்ந்தும் மாலிங்கவிடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இரண்டில் இரண்டு சரிய மாலிங்கவின் ஓவரும் நிறைவடைந்தது.
அடுத்த ஓவரை வீசிய சமிந்த வாஸ் ஒரு ஓட்டத்துடன் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த தென்னாபிரிக்காவுக்கு வெற்றியிலக்கு 3 ஓட்டங்கள் மாத்திரமே. மீண்டும் மாலிங்க பந்து வீச்சு முனையில். ஹெட்ரிக் அதுவும் உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக்குக்காக தயாராகினார். மைதானம் முழுவதும் உள்ள இரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். துடுப்பாட்ட முனையில் பலம் வாய்ந்த சகலதுறை வீரரான ஜெக் கலீஸ். அதுவும் 86 ஓட்டங்களை பெற்ற நிலையில் பந்தை எதிர்கொள்கிறார்.
இலங்கையின் வீரர்கள் களத்தடுப்பில் அவதானத்தை செலுத்திக்கொண்டிருந்த தருணத்தில், மாலிங்க துள்ளியமான பந்த வீச்சினால் உலகக்கிண்ண போட்டிகளில் தன்னுடைய முதலாவது ஹெட்ரிக் விக்கெட்டினை கைப்பற்றினார். வலது பக்க விக்கெட்டுக்கு சற்று வெளியே வீசப்பட்ட பந்தை கலீஸ் அடித்தாட முற்பட்ட நிலையில், விக்கெட் காப்பாளர் குமார் சங்கக்காரவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
சாதனை பதிவாகியது. இலங்கையின் இரண்டாவது வீரர் உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். “இலங்கை இலங்கை” என்ற கோஷம் மைதானத்தை அதிரச்செய்தது. சமிந்த வாஸினை (2003) அடுத்து உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார் மாலிங்க. தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஆனால், மாலிங்க அத்துடன் நிறுத்தவில்லை. கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்துவதற்காக ஆயத்தமானார். தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு 3 ஓட்டங்கள், இலங்கைக்கு 2 விக்கெட்டுகள். இரசிகர்களின் இதயத்துடிப்பு அதிகரித்தது. அடுத்து என்ன நடக்க போகின்றது என யாருக்கும் தெரியாது. இப்படி இருக்க, கிரிக்கெட் வரலாற்றில் புதியதொரு சரித்திர சாதனை சில நொடிகளில் பதியப்பட்டது. ஹெட்ரிக் பந்தினை தொடர்ந்து வீசிய யோர்க்கர் பந்தின் மூலம் மக்ஹாயா நிடினியை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் மாலிங்க.
https://www.youtube.com/watch?v=k02S3RkFfBI
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை புத்தம் புதிய சாதனையாக படைத்தார் மாலிங்க. இரசிகர்கள், வீரர்கள் என அனைவரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். படுதோல்வியை நோக்கிய போட்டியை லசித் மாலிங்க தனியொரு ஆளாக மீட்டெடுத்தார். இதற்கு முன் இந்த சாதனையை எந்தவொரு பந்து வீச்சாளரும் படைத்திருக்கவில்லை. தென்னாபிரிக்க அணி மத்தியில் பதற்றம் அதிகரித்தது.
இறுதி விக்கெட். 3 ஓட்டங்கள் தேவை. என்ன நடக்க போகின்றது என்பதெல்லாம் தெரியாது. கண்களில் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன, மாலிங்கவின் குறித்த ஓவரில் ஒரு ஓட்டம் பெறப்பட்டது. அடுத்த ஓவரை சமிந்த வாஸ் ஓட்டமற்ற ஓவராக வீச, மீண்டும் மாலிங்க பந்து முனையில். மாலிங்கவின் பந்துகள் விக்கெட்டுகளை முத்தமிடும் வகையில் சென்றுக்கொண்டிருந்தன. இறுதியில், துடுப்பாட்ட வீரர் (பெட்டர்சன்) அடித்த பந்து துடுப்பாட்ட மட்டையில் பட்டு எட்ஜ் ஆகியதுடன், ஸ்லிப் (Slip) களத்தடுப்பாளரினை தாண்டி பௌண்டரியை அடைய தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றிருந்த போதும், அனைவரது கவனமும் இலங்கை அணி மீதும், லசித் மாலிங்கவின் மீதும் திரும்பியிருந்தது. தென்னாபிரிக்க அணிக்கு 4 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்ட போதும், எதிரணியை கட்டுப்படுத்தும் நோக்கில் தங்களது பலத்தை நிரூபித்த இலங்கை அணிக்கு இலங்கை இரசிகர்கள் மற்றும் உலக கிரிக்கெட் இரசிகர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன.
இந்த பாராட்டுகள் அனைத்தின் ஊடாகவும் இலங்கை இரசிகர்கள், இலங்கை அணிக்கும், உலக கிரிக்கெட்டுக்கும் ஒன்றை மாத்திரம் புரிய வைத்திருந்தனர். இலங்கை கிரிக்கெட் இரசிகர்களும், மக்களும் விரும்புவது இலங்கை அணி வெற்றிபெற வேண்டும் என்பதை அல்ல. எமது நாட்டு வீரர்கள் விளையாடினால் அது வெற்றியோ? தோல்வியோ? போராட வேண்டும். போராடிய பின்னர் முடிவு எப்படி இருந்தாலும் நாம் இறுதிவரை இலங்கை அணிக்கு பக்கபலமாக இருப்போம் என்பதை இன்றுவரை நிரூபித்து வருகின்றனர்.
“வெற்றியோ? தோல்வியோ இறுதிவரை போராடு”- உண்மையான இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<